எதிரியைக் கூட நோகடிக்காத உள்ளம் கொண்டவர் அலவி மௌலானா - ஜவாத்

எம்.எஸ்.எம்.சாஹிர்-

மூத்த தொழிற்சங்கவாதியும் அரசியல்வாதியும் முன்னாள் ஆளுனருமான அஸ்ஸெய்யத் அலவி மௌலானாவின் மரணச் செய்தி என்னை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸ்ஸாக்(ஜவாத்) விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

அஸ்ஸெய்க் அலவி மௌலானா உயர்ந்த பாரம்பரிய குடும்பத்தைச் சார்ந்தவர். அவரது கண்ணியத்தைப் பற்றிச் சொல்லப் போனால், மறைந்த தலைவர் அஷ்ரப், இவரைக் காணும் இடமெல்லாம் அவரது கையை முத்தமிட்டுக் கொள்வார். எனக்கு ஒரு தந்தையைப் போன்றவர் என்று அடிக்கடி கூறுவார். ஏனையோரையும் கையை எடுத்து முத்தமிட்டும்படி பணிப்பார். ஏனென்றால் மௌலானா வம்சம் நபி (ஸல்) அவர்களின் தோன்றல்களிலிருந்து வந்தவர்கள் என்பதன் காரணமாக அவருக்கு தலைவர் அப்படிப்பட்ட கண்ணியத்தை வழங்குவார். அந்த கண்ணியம் உண்மையாக அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஏனென்றால் ஏழை, பணக்காரன் ஜாதி, மதம் பார்த்துப் பழகாதவர். தன்னை நாடி வருபவர் எவறாக இருந்தாலும் தனக்கு வேண்டிய ஒருவர், தெரிந்த ஒருவர் என்று கூறி விடயத்தை அன்பாக செய்து கொடுப்பவர்.

ஆரம்ப காலம் முதல் இடதுசாரிக் கொள்கையுடைய தொழிற்சங்கவாதியாவே விளங்கிய அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்களின் தலைவராகப் பணியாற்றி தொழிலாளர்களுக்காக அயராதுழைத்தார்.

உண்மை, நேர்மை,உழைப்பு என்ற தாரக மந்திரத்தைத் தலையாகக் கொண்ட மௌலானா தொழிலாளர்களின் உயர்வுக்காக அல்லும் பகலும் பாடுபட்டார். அதன் பொருட்டு போராட்டங்கள், ஊர்வலங்கள், சத்தியாக் கிரகங்கள் போன்றவற்றில் முதன்மைப் பேராளியாக விளங்கினார். அதன் விளைவாக குதிரைப்படையின் குண்டாந்தடியடித் தாக்குதலுக்கும் முகம் கொடுத்தார்.

சந்திரிகா பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் நேரடி அரசியலில் இறங்கி பல அமைச்சுப் பதவிகளை ஏற்றார். இறுதியாக தனது வாழ்நாள் முழுவதும் மதிப்பும் கௌரவமும் மிக்க ஆளுனர் பதவி வகித்து, நீண்ட வருடங்கள் ஆளுனராக இருந்தவர் என்ற கின்னஸ் சாதனையையும் ஏற்படுத்தினார்.

தமிழ், முஸ்லிம், சிங்களவர் என்று பாகு பாடு பாராது பழகுபவர். பழக இனிமையானவர், பண்பாளர், கண்ணியமும் கட்டுப்பாடும் கொண்டவர். 

சிறு குழந்தைகளுடனும் அன்பாக உரையாடி அவர்களது மனதை வெல்லும் கலையைக் கற்றவர். ஆங்கிலத்தில் அடுக்குத் தொடரில் பேசும் ஆற்றல் மிக்கவர். எதிரியைக் கூட நோகடிக்காத உள்ளம் கொண்டவர் என்ற வகையில் அன்னாரது இழப்பு எம்மைப் பெரிதும் வாட்டுகிறது. 

அன்னாருடைய குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அன்னாருக்கு ஜென்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயரிய சொர்க்கம் கிடைக்க வேண்டுமென்று இறைவனிடம் பிராத்திக்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -