இலங்கையின் தலை சிறந்த முஸ்லிம் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், நாடறிந்த தொழிற்சங்கவாதியுமான அஸ்-ஸெய்யித் அலவி மௌலானா பன்முக ஆளுமை மிக்கவராக வரலாற்றில் தடம் பதித்தவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அன்னாரது மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமது வாழ்நாளில் ஆன்மீகத்தோடு கூடிய சன்மார்க்கப் பற்று மிக்கவராக திகழ்ந்த மர்ஹூம் அஸ்-ஸெய்யித் அலவி மௌலானாவின் இரத்தத்தில் அரசியலும், தொழிலாளர் நலனும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து, இரண்டறக் கலந்திருந்தது.
அடிமட்ட அரசியலிலும், தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஆரம்ப காலத்தில் அதிக ஈடுபாடு காட்டி வந்த மர்ஹூம் அலவி மௌலானா, பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக தேசிய அரசியலிலும் தீவிர ஈடுபாடு காட்டியதோடு, சந்தர்ப்பவாத அரசியலிற்கு பலியாகிவிடாமல், தாம் சார்ந்திருந்த கட்சியிலேயே இறுதி மூச்சு வரை ஒட்டியிருந்தது அவருக்கே உரிய சிறப்பம்சமாகும்.
மர்ஹூம் அலவி மௌலானாவிற்கு எமது கட்சியின் ஸ்தாபத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் பெரிதும் மதிப்பளித்து வந்ததோடு, அவ்வப்போது அவரிடமிருந்து உரிய ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துவமான அரசியல் சக்தியாக உருவாகி, வளர்ச்சியடைந்து வந்த கால கட்டத்தில், எங்கள் கட்சியோடு சங்கமிக்குமாறு தலைவர் அஷ்ரப் அன்னாரிடம் அன்பாக வேண்டுகோள் விடுத்தபோது, நிறம் மாற விரும்பாத மௌலானா தாம், அவருக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடனும், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாருடனும் தமக்கிருந்த நெருக்கத்தின் காரணமாக, ஆரம்பத்தில் இணைந்திருந்த கட்சியிலேயே தொடர்ந்தும் பணியாற்ற விரும்புவதாகவும் மிகவும் வினயமாகக் கூறியது அவரது அரசியல் முதிர்ச்சியையும், இராஜதந்திரத்தையும் வெளிப்படுத்தியது.
தொழிலாளர் வர்க்கத்தின் நலன் கருதி வீதியில் இறங்கி போராடிய மௌலானா குண்டர்களின் தாக்குதல்களுக்கும் இலக்காக நேர்ந்தது.
பழகுவதற்கு எளிமையான குணவியல்புகளை தன்னகத்தே கொண்டிருந்த மர்ஹூம் அலவி மௌலானா, ஹாஷ்யமாக அடுக்குமொழியில் சரளமாக பேசுகின்ற ஆற்றலைப் பெற்றிருந்தார். அவரது மறைவு இந்நாட்டு முஸ்லிம்களை மட்டுமல்லாது, சகல இனத்தவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
எல்லாம் வல்ல அல்லாஹ், மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவனபதியை அன்னாரின் நிரந்தர தங்குமிடமாக ஆக்கி அருள்வானாக.