புத்தளம் மாவட்ட, அக்கரைபற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை (02) கடையாமோட்டையில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் பொது கூட்டத்தில் கட்சியின் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை
இந்த இயக்கத்தை புதிய யுகத்திற்கு கொண்டு செல்லவும், எங்களுக்குள் புதிய உற்சாகத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் நாங்கள் இங்கு கூடியிருக்கின்றோம். எனவே, இந்த உற்சாகத்தில் எவ்வித பின்னடைவுகளும், ஏற்படாமல் முன்னேறிச் செல்ல வேண்டுமென்பதற்கான முயற்சியில் நாங்கள் தற்பொழுதுள்ள சவால்களை அடையாளம் காண வேண்டும்.
இந்தக் கட்சியை முற்றாக கருவறுக்கப் புறப்பட்டவர்களோடு பாசம், நேசம் காரணமாக ஒன்றியிருந்தவர்கள் அவர்களின் சுயநலப் போக்குகளை சரியாக விளங்கிக்கொண்டு எம்முடன் மீண்டும் வந்து இணைந்துவிட்ட நிகழ்வு இம்மேடையில் இடம்பெற்றது. அதனை எண்ணி மிகுந்த மனதிருப்திக்கு ஆளாகின்றேன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாதர் காங்கிரஸ் அமைப்புக்கள் உத்தியோகத் தெரிவுகளை நடத்தி அவர்களை தலைமைக்கு அறிமுகப்படுத்துகின்ற நிகழ்வுகள் பல ஊர்களில் நடந்தது. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ரமழான் மாதத்திற்கு பிறகு எமது கட்சியின் இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாதர் காங்கிரஸ் அனைத்து உறுப்பினர்களையும் ஒன்று திரட்டி பயிற்சி பட்டறையொன்றை நடத்துவதற்கு உறுதிமொழி வழங்குகின்றேன்.
இந்தக் கட்சியின் கொள்கை என்றால் என்ன? இந்தக் கட்சியின் வரலாறு என்றால் என்ன? இக்கட்சிக்கு இருக்கின்ற சமாகால அரசியல் சவால்கள் என்றால் என்ன? எதிர்காலத்தில் இதற்கான தலைமைத்துவங்களை உருவாக்குவதற்காக சரியான அடித்தளங்களை போடுவதற்கான ஒரு புதிய யுகமொன்றை கட்டியெழுப்பும் விதமாகத் தான் அந்தப் பட்டறை அடையாளம் காணப்பட வேண்டும்.
நாங்கள் எவ்வளவு தான் அநியாயங்களையும், அட்டூழியங்களையும் சந்தித்த ஒரு இயக்கமாக இருந்தாலும், இத்தகைய சவால்களிலிருந்து மீள்வதற்கான, ஓய்வு பெறுவதற்கான வாய்ப்பு கட்சிக்கு இருந்ததே இல்லை. இக்கட்சியை இரண்டு காரணங்களுக்காக கருவறுத்துவிட்டு வெளியேறினார்கள்.
அவற்றில் ஒன்று கட்சியில் ஆட்சி அதிகாரங்கள் இல்லாத போது மாற்றுக் கட்சிகளுக்குத் தாவி தங்களுக்கான அமைச்சுப் பதவிகளையும் அதிகாரங்களையும் பெற வேண்டுமென்ற நப்பாசையும், மற்றையது கட்சிக்குள்ளே தங்களுக்கு இனி பதவி கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்ற நிலையில் இலவசமாக யாரும் பதவி தருவதாக இருந்தால் கட்சியை விமர்சித்து தலைமைத்துவத்தை சாடுவது என்ற அந்த இரு காரணங்களுக்காகவே கட்சியை விட்டு வெளியேறியுள்ளார்கள்.
எவ்வளவு தான் பெரிய பக்குவமான மூத்த தலைமைகள் இருந்தாலும் கூட இந்த மகா வித்துவான்களுக்கு முடிவே கிடையாது. இப்போது ஒரு மகா வித்துவான் இன்னோரு வித்துவான். இந்த மகா வித்துவானுக்கும், வித்துவானுக்குமிடையிலான வித்தியாசம் இங்கு அனேகருக்குத் தெரியாது. 'வித்துவான்' என்றால் அவர் பேசுவது மற்றவர்களுக்கு விளங்காது ஆனால், அவருக்கு விளங்கும். 'மகா வித்துவான்' என்றால் அவர் பேசுவது அவருக்கும் விளங்காது, மற்றவர்களுக்கும் விளங்காது. அவர்களை பற்றி முன்னரும் கூறியிருக்கின்றேன்.
இந்த அப்படையில் சிலர் இருக்கத் தான் செய்கின்றார்கள். இந்தப் பட்டியலில் பழைய தவிசாளர்கள் சிலரின் பெயரும் இருக்கின்றது. தவிசாளர் பதவியில் இருந்தவர்களையும் இருப்பவரையும் இந்தவிடயம் மிகவும் மோசமான பிணியாக பீடித்து வாட்டுகின்றது.
ஆனால், இன்று பத்திரிகை மூலமாக போர் தொடுக்கின்றார்கள். கட்சிக்குள் மாபெரும் பிளவு என்று குரலெழுப்புகின்றார்கள். ஆனால், அத்தகையவர்களின் அந்தஸ்த்து ஒரு பொதுக் கூட்டத்திற்காக 50 பேரைக் கூட அழைத்துவர முடியாதவர்களாகத் தான் இருக்கின்றார்கள் என்பது கட்சி உச்சபீடத்தில் இருப்பவர்களுக்குத் தான் தெரியும். இந்த குளறுபடியை செய்யும் வித்துவான்களால் 50 பேரை அழைத்தவர முடியாதுள்ளது.
சிலர் கட்சியின் மாநாட்டை குலைக்க வேண்டும் என வரிந்துகட்டிக்கொண்டு செயற்பட்டார்கள். தலைமைத்துவத்தை விமர்சித்துகொண்டு அறிக்கை விட்டுக்கொண்டு இருந்தார்கள். தேசிய மாநாட்டின் போது குள்ளநரிகளாக செயற்பட்டவர்களை அப்பட்டமாக அடையாளம் கண்டும் கூட, மாநாட்டை நடத்தி முடிக்க வேண்டுமென்பதற்காக அமைதி காத்தோம். இத்தனை வருடங்களில் நடந்த மாநாடுகளை பார்க்கிலும், மிகவும் விமர்சையாக ஏற்பாடு செய்து ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி தலைவர்கள், என்றும் இல்லாது நாலா புறத்திலிருந்தும் கட்சி ஆதரவாளர்களும் போராளிகளும் திரள் திரளாக வந்து குவிந்திருந்தனர்.
இம்மாநாட்டை எப்படியாவது குழப்பியடித்து தோல்வியடையச் செய்ய வேண்டும் என்று கட்சிக்குள் முக்கிய பதவிக்குள் இருப்பவர்கள் செய்த அநியாயங்களை பார்த்து மற்றவர்கள் பொங்கி யெழுந்த போதும் கூட, நாங்கள் இன்று வரையில் பொறுமையாகத் தான் இருக்கின்றோம்.
இப்போது அவர்கள் தாம் செய்த பிழையை மளுப்புவதற்காக தொலைபேசிகளில் தொடர்பு கொண்டு மணித்தியாலம் கணக்கில் மூளை சலைவை செய்யும் காரியத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் ஒவ்வொருவருடைய தொலைபேசி பட்டியல்களையும் எடுத்து பார்த்தால் இவர்களது வருமானத்தில் அரைவாசித் தொகையை தொலைபேசி கட்டணமாக செலுத்தியிருப்பார்கள்.
இந்த நாட்டில் அனைத்து கட்சிகளிலிருந்தும் முக்கிய தலைவர்கள் பிரிந்து போன வரலாறு இருக்கத்தான் செய்கின்றது. எங்களது கட்சியில் இருப்பவர்களையும் இருந்தவர்களையும் விட ஜாம்பவான்கள் வேறு கட்சிகளிலிருந்து வெளியேறிய சந்தர்ப்பங்களையும் பார்த்துவிட்டுத்தான் இருக்கின்றோம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அண்மைக் கால வரலாறு ஜனாதிபதி பிரேமதாஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்ட போது, அதற்கு காரணமாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மிகப் பெரும் ஜாம்பவான்களான காமினி திசாநாயக்க மற்றும் லலித் அத்துலத் முதலி ஆகியோர் தூக்கி எறியப்பட்டார்கள். அவர்களை ஜே.ஆர்.ஜயவர்தன முன்னர் தனது வாரிசுகள் என்று கூட குறிப்பிட்டிருந்தார்.
அன்று ஒரு சமூகம் புனையப்பட்ட கட்டுக் கதைகளையும் விமர்சனங்களையும் நம்பி 'ராஜாலியா' (கழுகு) கட்சிக்கு பின்னால் சென்றது. இப்போது எங்கே அந்தக் கட்சி? அதில் இருந்தவர்கள் இப்போது ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து நிரந்தர ஊழியர்களாக மாறிவிட்டார்கள். ஒரு காலகட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அநுர பண்டாரநாயக்க, மைத்திபால சேனாநாயக்க ஏன் சந்திரிக்கா பண்டாரநாயக்க கூட வெளியேறினர். விஜயகுமார துங்கவோடு இணைந்து கட்சியை ஆரம்பித்தார்கள். கால ஓட்டத்தில் அவர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு திரும்பி வந்து இணைந்தார்கள்.
இப்போதைய அரசியலில் கட்சியை விட்டு வெளியேறினால் கஷ்டம் என்பதை விளங்கிக்கொண்டவர்கள் கட்சிக்குள் இருந்துகொண்டு செயற்பட தொடங்கியுள்ளார்கள். இத்தகைய சூழலில் நான் தலைமைப் பொறுப்பை ஏற்ற காலந்தொட்டு தொடர்ச்சியாக சிலர் பதவிகளை அனுபவித்து வந்தவர்கள் இப்போது பதவி இல்லாமல் இருப்பது தான் பிரச்சினை. கட்சிக்குள் ஓரே நபருக்கு திரும்ப திரும்ப பதவிகளை கொடுக்க இயலாது. எல்லோரையும் இலவசமாக பாராளுமன்றத்திற்குள் அனுப்பிக்கொண்டிருக்க முடியாது. இது தான் இன்றுள்ள பிரச்சினையின் அடிப்படையாகவுள்ளது.
இதுவரையும் வன்னி மாவட்டத்திற்கு இழந்த ஆசனத்தை கொடுப்பதற்குரிய நியாயத்தை முன்வைக்கின்றார்கள். திருகோணமலை மாவட்டத்திற்கு வாய்ப்பு வழங்கினோம். பதவிகளை கொடுக்கும் வரையில் தான் எல்லோரும் பொறுமையாக இருந்தார்கள். கொடுத்த பிறகு இனி நமக்கு கிடையாது என குளறுபடிகளை ஆரம்பிக்கின்றார்கள். இது ஒரு புதிய விடயமல்ல. இதை பற்றி அலட்டிக்கொள்ளத் தேவை இல்லை. இது இயலாமையின் வெளிப்பாடு.
இந்த இயக்கம் உயிரூட்டமுள்ள இயக்கமாகவுள்ளது. இதன் அடையாளத்தை இன்று ஸ்திரப்படுத்தி தைரியமாக முன்கொண்டு செல்கின்றோம். இந்நிலையில் எமது கிழக்கு மாகாண முதலமைச்சரை சிங்கள பத்திரிகைகளில் பெரிதும் விமர்சனத்திற்குட்படுத்துகிறது. அந்த முதலமைச்சர் சிறிது காலம் கட்சியோடு முரண்பட்டு வாதாடி ஆனால், ஒரு கட்டத்தில் அவர் எங்களது கட்சியில் பூரண விருப்பத்துடன், இணைய விரும்பத்துடன் வந்து போது கட்சி அவரை உளமாற ஏற்று அவருக்கு பதவிகொடுத்து அழகு பார்த்தது. அவர் கட்சியோடு வந்து இணைந்தது முதல் கட்சியின் முழு நேர ஊழியராக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்.
அவரை அழைத்த வந்தது ஒரு மகா வித்துவானுக்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளமையால் அந்த மகாவித்துவான் இப்போது குரலெழுப்ப தொடங்கியுள்ளார். தலைமைக்கு அதை செய்தேன் இதை செய்தேன் தலைமையை காப்பாற்றினேன் என பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் எழுதுகிறார். நான் சொல்லப்போனால் இதை விடவும் பேசலாம். தலைவராகிய நான் பேசப் போனால் எத்தனையோ விடயங்களை பேசலாம். ஆனால், அவ்வாறு அநாகரியமாகப் பேசாது தவிர்ந்து கொள்கின்றேன்.
ஆனால், இவர்களோ எங்களுக்கு பதவி இல்லாவிட்டால் யார் எப்படி போனாலும் பரவாயில்லை, இனி கட்சியும் தேவை இல்லை. ஒன்றும் தேவையில் இல்லை என அநாகரியமாகப் பேசினாலும் பரவாயில்லை கட்சியையே அழித்து விடலாம் என வன்னியில் இருந்தும் ஏனைய பிரதேசங்களிலிருந்தும் வரும் மறைமுக ஒத்தாசைகளை நம்பி பேசித் திரிகின்றார்கள். இதுவொரு பெரிய மூடு மந்திரமல்ல. அனைவரும் அறிந்ததே.
பகலில் முஸ்லிம் காங்கிரஸில் இருந்துகொண்டு, இரவில் கட்சிக்கு எதிரான அமைச்சரின்; வீட்டில் மந்திராலோசனை செய்கின்றவர்கள் தான் மகா வித்துவான்கள். இதை மூடி மறைத்து பேச வேண்டிய அவசியமில்லை. இப்போது இவர்களுக்கு கட்சி மீது பெரும் கவலை ஏற்பட்டிருக்கின்றது. கட்சி தவறான பாதையில் செல்கின்றது என்றும் உரிமைகளை பற்றி பேசுகின்றது இல்லை என்றும் புலம்பித் திரிகின்றார்கள்.
நாங்கள் இது மாதிரியான நல்லாட்சி அரசாங்கமொன்று வரவேண்டுமென பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம். அன்றைய அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்காக அந்த தீவிரவாத கும்பல்கள் கூடுதலான சலுகைகளை சிறுபான்மையினருக்கு கொடுக்கின்றார்கள் என்று பேரினவாதத்தை கிளப்பி அப்பாவி நாட்டுப்புற சிங்கள மக்களைத் திசை திருப்புவதற்கு எத்தனிப்பதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்குவதற்கு தடுமாறிக் கொண்டிருந்த போது, நாங்கள் எங்களுடைய தேவைகளை பிரச்சினைகளை மிகவும் நிதானமாகவும், பக்குவமாகவும் கையாள வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளானோம். இவற்றை கட்டம் கட்டமாக செய்து கொண்டிருந்த போது திடீரென எல்லாவற்றிற்கும் உணர்ச்சிவசப்படும் விதத்தில் செயற்பட்டார்கள்.
முதலமைச்சர் விவகாரத்திலும் கூட மிகத் தெளிவாக அவதானித்தால் இது புலப்படும். அதில் அனைத்து தரப்பிலும் தவறுகள் இருக்கத் தான் செய்கின்றது. முதலமைச்சர் மீதும் தவறு இருக்கின்றது. அந்த கடற்படை அதிகாரி மீதும் தவறு இருக்கின்றது. அப்பாவி போல் இருக்கும் ஆளுநரில் தவறு இருக்கத்தான் செய்கின்றது. இதனை நிதானமாக கையாள்வது முக்கியம். இதற்கு முதலாவது நாங்கள் செய்ய வேண்டியது தமது பிழையை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கோர முன்வரவேண்டும். இதைத் தான் மிகத் தெளிவாக நான் கூறினேன். அதிலும் பலவாறு குறையைத் தான் தேடி பிடித்தார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்த துடிக்கும் வித்துவான்களும், மகா வித்துவானும் இந்தப் பட்டியலில் இன்னும் சிலரையும் இழுத்துக்கொள்ளலாம் என அவர்களது விளையாட்டையும் தொடங்குகின்றனர்.
முதலாவது இந்த நல்லாட்சி அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்கு முனைகின்ற சக்திகளை முறியடிக்க வேண்டும். அந்த சக்திகள் எவை என்றும் எங்களுக்கு தெரியும். முப்படைகளும் ஒன்றிணைந்து அவர்களது இராணுவ முகாம்களுக்குள் முதலமைச்சர் வருவதை தடை செய்த சக்தி யார் என்பதும் தெரியும். அப்படியான ஆபத்து நிகழ்கின்ற சூழலில் அதை கையாள்வதற்கு நாங்கள் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் பக்கபலமாக இருக்க வேண்டும். அவர்களது கரங்களை பலப்படுத்த வேண்டும்.
நாங்கள் மன்னிப்பு கோருவதன் மூலம் பெருந் தன்மையோடு நடந்துகொள்கின்றோம் என புலப்படுத்த வேண்டும். எங்களுக்கும் அநியாயங்கள் நடக்கத்தான் செய்கின்றது. கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும் என்பதை போல் இப்போது கலகம் பிறந்துவிட்டது இனி நியாயமும் கிட்டியே ஆக வேண்டும்.
கிழக்கு மாகாண ஆளுநர் அரசியல் வரிசைப் பட்டியல் சம்பந்தமாகவும், கடைபிடிக்கின்ற கொள்கை சம்பந்தமாகவும் தீவிரமாக எழும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத ஒருவராக மாறியிருக்கின்றார். இந்த நிலைவரங்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் நாங்கள் இந்த தீவிரவாதிகளுக்கு தீனிப் போடுபவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மிக லாவகமாக இவ்விடயம் கையாளப்பட வேண்டுமென்பதற்காக நான் மிகத் தெளிவாக பேசினேன்.
அது இன்னும் ஓரளவிற்கு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இந்த விடயத்தை கையாளுவதற்கு ஏதுவாக அமையும். அவர்களை இலக்கு வைத்தே இவை அனைத்து விடயங்களும் முன்னேடுக்கப்படுகின்றது. அவர்கள் சிறுபான்மை சமூகங்களுக்கு சார்பாக செயற்படுபவர்களாகவும், சரணாகதியான அரசியல் செய்பவர்களாகவும் இந்த ஜனாதிபதியையும் பிரதமரையும் காட்டி அவர்களை பலவீனப்படுத்துவதற்கு பேரின சக்திகளின் முயற்சிகளுள் ஒரு அங்கம் தான் முதலமைச்சரை கோபப்படுத்தி அவரை ஆத்திரப்படுத்தியதன் மூலம் அவர் கூறிய வார்த்தை பிரயோகங்களை அடிக்கொரு தடைவ தொலைக்காட்சிகளில் காட்சிப்படுத்தி பெரிய புரளியை கிளப்புகின்றார்கள்.
எங்களுடைய மகா வித்துவானுக்கும் வித்துவான்களுக்கும் இப்போது விளையாடுவதற்குரிய இடைவெளி கிடைத்துள்ளது. இவ்வாறான பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஸ்தாபக தலைவருக்கும் இந்நிலைமை ஏற்பட்டது.
இந்நாட்டின் சிங்கள பௌத்த சக்திகள் தீவிரமடைவதற்கு ஒரு சிறுபான்மை இனத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் பகிரங்க தொலைக்காட்சி விவாதத்தில் பௌத்த பிக்குவை மண் கவ்வுவதற்கு செய்துவிட்டதை சகிக்க முடியாமலும், அந்த பௌத்த பிக்குவின் அகாலா மரணத்தையும் தமது எழுச்சிக்கு காரணமாக மாற்றினார்கள். அதன் மூலம் ஒரு ஆட்சி மாற்றத்தையும் கொண்டு வருவதற்கு முனைந்தார்கள். கடந்த 10 வருடமாக கோலோட்ச்சிய அந்த அட்டூழிய ஆட்சிக்கு வித்திட்டதே அந்த இயக்கங்களின் எழுச்சி என்பதை மறந்து விட்டு, இப்போது இடம்பெறுகின்ற முறுகல்களை நிதானத்தை இழந்து மிக இலேசாக கையாள முடியாது.
நாங்கள் பக்குவமும் பெருந்தன்மையும் கொண்டவர்களாகவும் தூரநோக்கோடும், தூய போக்கோடும் சாணக்கியமாகவும் செயற்படுவது அவசியமாகும். அதற்காக இந்த முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் மிகவும் பலமானதாகவும் ஆட்சி பீடத்தில் பேரம் பேசும் சக்தியாக மாறியிருக்கின்ற போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்கட்சிக்குள் இருந்து செய்கின்ற விடயங்களை முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் கட்சியோடு இணைந்து எவ்வாறு செய்ய வேண்டும் என்ற பிரயத்தனம் இல்லாமல் அவசரப்பட்டு நாங்கள் இந்த விடயங்களை உணர்ச்சிகரமாக பேசுவதன் மூலமாக எதையும் சாதிக்க முடியாது.
நாங்கள் உருவாக்கிய இந்த நல்லாட்சி அரசாங்கத்தை அதற்கு இருக்கின்ற அதீதமான பலத்தை முறியடித்துவிடக் கூடாது. புதிய அரசியல் யாப்பு மற்றும் தேர்தல் சீர்த்திருத்தம் பாராளுமன்றத்தில் அமுலுக்கு வரவிருக்கின்றது. இதில் எங்களது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். அதில் எங்களது உரிமைகள் பறிபோகாமல் பாதுகாக்க வேண்டும். ஆனால், அதனை பகிரங்கமாக தெருவுக்கு கொண்டு வந்து அம்பலப்படுத்திக்கொண்டு செய்யவும் முடியாது.
வடகிழக்கு வெளியில் தொகுதி ரீதியான தேர்தல் வந்தால் அனேகமான தொகுதிகளில் முஸ்லிம்களின் செறிவை காண்பது கஷ்டமாக இருக்கும். புத்தளத்திலும் நாங்கள் ஒரு தொகுதியை அடைவது கூட இயலாத காரியமாக ஆகிவிடும் ஒரு புதிய எல்லை நிர்ணயத்தின் போது ஆசனக் குறைவு ஏற்படும் அபாயம் இருக்கின்றது. புத்தளம் தொகுதியில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் வெல்ல முடியுமா என்ற கேள்வி எழுகின்றது. வடமாகாண அகதிகள் அனைவரும் புத்தளத்தில் வாக்காளராக பதிவு செய்தால் மாத்திரமே ஒரு முஸ்லிம் வேட்பாளரேனும் வெல்ல முடியும். இது சாத்தியபாடு அற்ற காரியமாகும்.
இவற்றை சாதித்து கொள்வதற்கு பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் வீராப்பு பேசுவதன் சாதிக்க முடியாது. இவற்றை சாணக்கியமாக போராடி அடைய வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் இவற்றில் மௌனம் காக்கின்றது என்ற பாணியில் வெளியில் பேசுபவர்கள் நாங்கள் எதை செய்கின்றோம் என்பதை பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.
இவற்றை எமது கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துகின்ற கருத்தரங்குகளை நடத்தவேண்டும். அதற்கிடையில் புதிய இளம் சமூதாயத்தையும் மகளிரையும் முழு நேர ஊழியர்களாக மாற்றுகின்ற பணியை மும்முரமாக முன்னேடுக்க வேண்டும்.
இந்த அக்கரைபற்று ஒன்றியத்தில் ஒரு சிலர் சேர்ந்து கட்சியை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும் நிகழ்வை கட்சியின் பயணத்தில் முக்கியமானதொரு கட்டமாக நான் கருதுகின்றேன். எனவே அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.