எம்.ஜே.எம்.சஜீத்-
பொத்துவில் உப கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனாண்டோவிடம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெவ்வை வேண்டுகோள் விடுத்தார்.
பொத்துவில் உப கல்வி வலயத்தில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்று புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் காரியாலத்தில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மாகாணசபை உறுப்பினர் உதுமாலெப்பை மேற்படி இவ்வேண்டுகோளை விடுத்தார்.
இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெவ்வை தொடர்ந்து பேசுகையில்;
“பொத்துவில் உப கல்வி வலயத்தில் அமைந்துள்ள 20 பாடசாலைகளில் 77ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றமை குறித்தும், இவ்வெற்றிடங்களுக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்குமாறும், பொத்துவில் பிரதேசத்துக்கான தனியான கல்வி வலயம் அமைப்பதற்குரிய நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளமையினை சுட்டிக்காட்டி, இதுதொடர்பாக அவசர நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கடந்த வாரம் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தேன்.
பொத்துவில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினால்,அப்பிரதேச மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டு வருகின்றது. இப்பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யுமாறு கோரி, மாணவர்களும் பெற்றோர்களும் பலமுறை பாடசாலைகளை மூடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக, கிழக்கு மாகாண சபையில் பல முறை பேசப்பட்டும் எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
பொத்துவில் பிரதேசத்துக்கான தனியான கல்வி வலயம் ஸ்தாபிப்பது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் கடந்த 2011, 2015, 2016 ஆகிய வருடங்களில் முன்மொழியப்பட்டும், இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்படவில்லை” என்றார்.
இதன்போது, பொத்துவில் உப வலய பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு – கல்முனை வலயப்பாடசாலைகளில் மேலதிகமாக உள்ள ஆசிரியர்களில்46 பேரை அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை கோட்டப்பாடசாலைகளுக்கு அனுப்புவதாகவும்; அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று கோட்டப்பாடசாலைகளில் கடமையாற்றும் 46 ஆசிரியர்களை பொத்துவில் உப வலயப் பாடசாலைகளுக்கு வழங்குவதாகவும் முடிவு செய்யப்பட்டது.
மேற்படி இடமாற்றங்களை எதிர்வரும் ஓகஸ்ட் 01ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்துவதாகவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
மேலும், பொத்துவில் கல்முனை (மத்தி) கல்வி வலயங்களை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை – கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி மேற்கொள்வதோடு, கிழக்கு மாகாண அமைச்சரவைக்கு விசேட அமைச்சரவைப் பத்திரத்தினைச் சமர்ப்பிப்பார் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபதி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெவ்வை, ஆளுநரின் செயலாளர் திருமதி முரளிதரன், கல்வி அமைச்சின் செயலாளர் அசங்க அபேவர்த்தன, மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் திசாநாயக்க, மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ. நிசாம் மற்றும் அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். காசீம், உட்பட பலர் கலந்துகொண்டனர்.