க.கிஷாந்தன்-
பொகவந்தலாவை லொயினோன் தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளவர்களுக்குத் தற்காலிக இருப்பிடங்களை அமைப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைப்பதற்கும் மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
லொயினோன் தோட்டதத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தைத் தொடர்ந்து அமைச்சர் திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப அந்தத் தோட்டத்துக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியதன் பின்பு கள நிலவரங்களை அமைச்சர் திகாம்பரத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்தே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆய்வு மையத்தின் ஆய்வுக்குப் பின்பு மண்சரிவு அபாயம் உள்ளதால் லொயினோன் தோட்டத்தில் 31 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மண்சரிவு அபாயத்தை 31 குடும்பங்கைளைச் சேர்ந்த 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 75 பேர் தொழிலாளர்கள் என்று பிரதேச கிராமசேவகர் ஆர்.இளங்கோ தெரிவித்தார்.
இந்தத் தோட்டத்தில் தற்போது மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள பிரதேசத்தில் 2014 டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவினால் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்தே இந்தப்பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான தற்காலிக இருப்பிடங்களை அமைப்பதற்கும் நிரந்தர வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கும் தோட்ட நிருவாகத்தினால் உரிய இடம் ஒதுக்கி தரப்படுமென தோட்ட அதிகாரி அமைச்சர் திகாம்பரத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்ட்டவர்களுக்கு உரிய நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மேலும் தெரிவித்தார்.
மத்திய மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீதரனுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொகவந்தலாவை அமைப்பாளர் கல்யாணகுமார், மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், பிரதேச கிராமசேவையாளர் ஆர்.இளங்கோ ஆகியோரும் சென்றிருந்தனர்.