எஸ்.அஷ்ரப்கான்-
டெங்கு நோயினால் பாடசாலை மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதனால் மாணவர் சமூகத்திற்கு மிகக் கூடுதலான விழிப்புணர்வு தேவையாகும். இதற்காக திட்டமிட்ட அடிப்படையில் பாடசாலைகள் செயற்பட வேண்டும் என்று கல்முனை பிராந்திய தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவிற்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி என். ஆரிப் தெரிவித்தார்.
இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது,
டெங்கு நோய் தொடர்பாக நாம் நோக்கும்போது, ஒரு தடவை நுளம்பு கடிப்பதே நோய் உண்டாவதற்கு வழிகோலும். நோயுள்ள ஒருவரைக் கடித்த உடனேயே நோயற்றவரை நுளம்பு கடிக்குமாயின் நுண்ணங்கிகள் பரவக்கூடும். இதைவிட பெண் நுளம்பு தனது குருதி உணவை நோய் தொற்றியுள்ளவரிடம் இருந்து பெற்ற பின்னர் நுளம்பின் குடற்கலங்களை நுண்ணங்கிகள் அடைகின்றன. 8–10 நாட்கள் கழிந்து நுளம்பின் ஏனைய இழையங்களுக்குள் நுண்ணங்கிகள் பரவுகின்றன. இவ்வகையில் உமிழ் நீர்ச் சுரப்பியையும் அவை சென்றடைகின்றன. நோயில்லாத ஒருவரை இந் நுளம்புகள் கடிக்கும் போது நுண்ணங்கிகள் செறிந்த தமது உமிழ் நீரை அவருக்குள் செலுத்துகின்றன. இதன் மூலம் அவரும் தொற்றுக்கு உள்ளாகின்றார். எனவே நுளம்பானது உடனேயோ அல்லது 8-10 நாட்கள் சென்ற பின்னரோ நோய்க் காவியாகத் தொழிற்படுகின்றது.
குழந்தைகளிலும் சிறுவர்களிலும் கடுமையாக இந்நோய் உண்டாகின்றது. ஆண்களைக் காட்டிலும் கூடுதலாக பெண்கள் இதனால் பாதிப்படைகின்றனர். நீரிழிவு, ஆஸ்துமா நோய் போன்ற நீண்டகால நோய்கள் உள்ளவருக்கு இந்நோய் மிகவும் உக்கிரம் அடையும் போது உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பாதிப்பை உண்டாக்கலாம்.
நோயரும்பு காலப் பகுதியை அடுத்து முக்கிய அறிகுறியான காய்ச்சல் உடனே தோன்றி மிகையாகும். உடல் வெப்பநிலை 40 °ஊ (104 °கு) க்கு மேற்செல்லும். இதனுடன் கடுமையான தலைவலி குறிப்பாக கண்களின் பிற்புறத்தே வலி தோன்றும். பொதுவாக காய்ச்சல் இரண்டு தொடக்கம் ஏழு நாட்களுக்கு நீடிக்கும். ஆனால் சிறுவர்களில் பொதுவாக இக் காய்ச்சல் 2–5 நாட்களுக்கு நீடித்து பின்னர் ஓரிரு நாட்களுக்கு காய்ச்சல் இருக்காது. மீண்டும் காய்ச்சல் ஓரிரு நாட்களுக்குத் தோன்றும். பின்னர் காய்ச்சல் பூரணமாகக் குணமாகி விடும். பத்து நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அது டெங்குக் காய்ச்சலாக இருக்கும் சாத்தியக்கூறுகள் குறைவு. இப்பருவத்திலே ஏனைய அறிகுறிகளான தலைவலி, கண்ணின் பின்புறத்தில் வலி, தசை வலி, மூட்டு வலி, வாந்தி, வயிற்று வலி போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் நுண்ணங்கியில் நான்கு குருதிப்பாய வகைகள் உண்டு. எனவே ஒருத்தருக்கு நான்கு முறைகள் இக்காய்ச்சல் வரக்கூடும். இதனால் டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி முறை இன்னமும் ஆய்வில் உள்ளது. தடுப்பூசி இல்லாத காரணத்தால் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதே இன்றியமையாத தடுப்பு முறையாகும்.
நுளம்பு உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல், அவற்றின் வதிவிடத்தை முற்று முழுதாக அழித்தல், வதிவிடத்தில் இனம்பெருகாது கட்டுப்படுத்தல் என்பன முக்கியமானது. சுற்றுப்புறத்தில் தேங்கும் நீர் நிலைகளைக் கண்டறிந்து அவற்றை வெறுமைப் படுத்துதல் அல்லது நீர் தேங்கி உள்ள அத்தகைய இடங்களில் பூச்சி கொல்லி மருந்துகளைத் தெளித்தல், உயிரியற் கட்டுப்பாட்டுக் காரணிகளை இடல் போன்றன நுளம்புகளின் பெருக்கத்தைத் தடுக்கின்றது. பூச்சி கொல்லி மருந்துகளால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்தில் கொண்டால் தேங்கிய நீர்நிலைகளை வெறுமைப் படுத்தும் முறையே சாலச் சிறந்தது. தோலை மூடக்கூடிய உரிய ஆடைகள் அணிவது, தூங்கும்போது நுளம்பு வலை உபயோகிப்பது, நுளம்புச் சுருள் போன்றவற்றை பயன்படுத்தல் என்பன நுளம்பு கடிக்காமல் பாதுகாத்துக் கொள்ள உதவும்.
டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய வகையில் நீர் தேங்கி நிற்கக் கூடிய பொருட்களை சூழலுக்கு சேர்க்காதிருப்பது, வாரத்துக்கு ஒரு தடவையாவது சுற்றுப்புறச் சூழலை கண்காணிப்பது, தென்னம் குரும்பை, யோகட் கப், வெற்று போத்தல்கள், வெற்று டயர்கள், பொலிதீன் கழிவுகள் போன்ற கழிவுகளை முறையாக அகற்றுவது, வீதிகளிலோ, பொது இடங்களிலோ பிறர் மூலம் சேர்க்கப்பட்ட டெங்கு நுளம்பு பெருகும் பொருட்களை நாமாக முன்வந்து அப்புறப்படுத்துவது, பாடசாலைகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தளங்கள் போன்ற இடங்களில், மக்கள் சங்கமிக்கும் இடங்களில் பிரச்சாரம், கருத்தரங்குகள், துண்டுப் பிரசுரங்கள் போன்ற முறைகளைப் பயன்படுத்தி டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், டெங்கு நோயின் விபரீதத்தை மக்களுக்கு தெரியப்படுத்தல், சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்துதல், சிரமதான வேலைத் திட்டங்களை கிராமங்கள் தோறும், தெருக்கள் தோறும் ஏற்பாடு செய்தலும் அதனை வலியுறுத்தலும் போன்ற பல்வேறு சமூக நலத்திட்டங்கள் ஊடாக டெங்கு பரவுவதை தடுக்கலாம்.
இந்த விடயங்களை கருத்தில் கொண்டு டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களில் பாடசாலை மாணவ சமூகம் அதிகளவில் காணப்படுவதினால் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு கல்வி அமைச்சுடன் இணைந்து ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் ' டெங்கு இல்லாத சிறந்த மாதிரிப் பாடசாலை;;' யைத் தெரிவு செய்யும் போட்டியினை நாடளாவிய ரீதியில் நடாத்த தீர்மானித்துள்ளது. இந்நிகழ்ச்சித் திட்டத்தில் தெரிவு செய்யப்படும் பாடசாலை மாவட்ட மட்டப் போட்டிக்கும், அதில் தெரிவாகும் பாடசாலை மாகாண மட்டப் போட்டிக்கும் தகுதி பெறும்.
இதன் முக்கியமான நோக்கம், நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் டெங்கு நோயைப் பரப்புகின்ற நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை இல்லாமல் செய்வதும், அதனைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதுமாகும். இந்நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாக்க கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ. எல். அலாவுதீன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது பற்றிய மேலதிகத் தகவல்கள் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் கல்வி அமைச்சுகளினால், உரிய திணைக்களத் தலைவர்களினூடாக மிக விரைவில் சம்மந்தப்பட்டோருக்கு அனுப்பி வைக்கப்படவிருக்கின்றது என்றும் டாக்டர் ஆரிப் மேலும் தெரிவித்துள்ளார்.