எம்.வை.அமீர்-
கல்வியில் குறிப்பாக பல்கலைக்கழக கல்வியிலும் அதனூடாக அடையவேண்டிய அடைவுகளிலும் இன்னும் பின்வரிசையிலேயே இருப்பதாக கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவையின் தலைவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எம்.எஸ்.எம்.ஜலால்டீன் தெரிவித்தார்.
கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவையின் வருடாந்த ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் கல்முனை மஹ்முத் மகளிர் கல்லுரியின் கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் கலாநிதி எம்.எஸ்.எம்.ஜலால்டீன், தலைமையில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை முஸ்லிகளின் கல்வி மேன்பாடு, எய்தவேண்டிய இலக்கை இன்னும் அடையாப்படாமலேயே இருக்கின்றது. குறிப்பாக பல்கலைக்கழக அனுமதியை எடுத்துநோக்கும் போது அது 5.6 வீதமாக இருக்கின்றது. 9அல்லது 10 வீதமாக இதனை உயர்த்த வேண்டியுள்ளது. அரசாங்க வேலைவாய்ப்புகளிலும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளோம் என்றும் இன்னொரு பக்கத்தில் அரசியல் ரீதியாகவும் பழிவாங்கப்படுவதாகவும் அல்லது அரசியல் ரீதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முஸ்லிம்களுடைய உரிமைகள் அதாவது நிலம் சம்மந்தமாகவும் ஏனைய விடயங்களிலும் நிர்கதியான நிலையில் உள்ளோம் என்றும், முஸ்லிம்கள் எதிர்நோக்கும் உரிமைசார்ந்த விடயங்களை அரசு கவனத்தில் எடுக்காது உள்ளது போன்ற நிலையே இப்போது காணப்படுவதாகவும் தெரிவித்தார். இவ்வாறன சூழலிலேயே நமது சமூகம் சார்ந்த விடயங்களை கண்காணிப்பதற்காகவும் முடியுமான அழுத்தங்களை உரியவர்களுக்கு வழங்குவதற்காகவும் சிவில் அமைப்பு ஒன்றின் அவசியத்தை உணர்ந்தே கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை என்ற அமைப்பினை பிரதேச கல்வியாளர்களும் புத்திஜீவிகளும் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ளதாகவும் இவ்வமைப்பு தற்போது காத்திரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
தமிழ் சமூகத்தின் குரல் ஐக்கிய நாடுகள் சபை வரை செல்வதற்கு தமிழீழ விடுதலைப்புலிகளை விட சிவில் அமைப்புககளின் அழுத்தங்களே பெரிதும் காரணமாக இருந்தன. எங்களது சமூகத்திலும் பல சிவில் அமைப்புக்கள் காலத்துக்குக்காலம் உருவான போதிலும் அவைகள் உரிய இலக்கை அடையவில்லை. இதன்காரணமாகவே தற்போது முஸ்லிம் சமூகம் எல்லா விடயங்களிலும் பின்னடைவை கண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவையில் பிரபலமான கல்வியாளர்கள், நீதித்துறை சார்ந்தோர், மார்க்க அறிஞ்ஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்துறை சார்ந்தோரும் இருப்பதால் முஸ்லிம் சமூகத்தை உயர்நிலைக்கு கொண்டுசெல்ல இவ்வமைப்பு பெரிதும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வில் றமழான் சிந்தனையை கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ் ஷெய்க் எம்எச்.எம்.ஜெலில் (ஹாமி) அவர்கள் வழங்கினார். அமைப்பின் குறிக்கோள்கள் மற்றும் எதிர்காலத்திட்டங்களை கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவையின் ஊடக இணைப்பாளர் அஷ் ஷெய்க் எப்.எம்.எஸ்.ஏ.அன்ஸார் மௌலானா (நளிமி) எடுத்துரைத்தார். அதேவேளை நன்றியுரையை பேரவையின் செயலாளர் தென்கிழக்குப் பல்கலைக்கழக
சிரேஷ்ட விரிவுரையாளர் எம்எச்.எம்.நைரோஸ் வழங்கினார்.
வருடாந்த ஒன்றுகூடலிலும் இப்தார் நிகழ்விலும் பெரும்திரளான கல்வியாளர்களும் புத்திஜீவிகளும் கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.