அளுத்கமை சம்பவம் நடைபெற்ற பொழுது, நான் இரவு பகலாக ஐந்து நாட்கள் தெஹிவளையை சுற்றி வளைத்து வந்தேன். முஸ்லிம்களுக்கு எந்த விதத்திலும் ஒரு தீங்கு ஏற்படக் கூடாது என்ற நம்பிக்கையோடுதான் நான் இரவிலே உலா வந்தேன். சில ஹாஜியார்மார்கள் வீடுகளில் தூங்கும் பொழுது அவர்களைத் தட்டியெழுப்பி, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நானும் ஊரில் உலா வருகின்றேன். நீங்களும் வாருங்கள் என்று கூறினேன். அவர்கள் நடுநிசி நேரத்திலும் கூட எனக்கு கோப்பி வகைகள் தந்தார்கள்.
ஆகவே, இது இலங்கையில் இருக்கின்ற ஏனைய மாநகரசபை, உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒரு உதாரணமான பிரதேசம்தான் தெஹிவளை, கல்கிசை மாநகர சபை பிரதேசம் என்பதை நான் உறுதியாகச் சொல்ல விரும்புகின்றேன்.என தெஹிவளை நகர பிதா தனசிரி அமரதுங்கவின் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
பாத்தியா மாவத்தையில் ஆரம்பத்திலே ஒரு சமயப் பாடசாலையை அமைப்பதற்கு எனக்கு முன்பிருந்த மேயர் அனுமதி அளித்திருந்தார். என்னுடைய காலத்தில் அது பள்ளிவாசலுக்காக வேண்டி அனுமதியைக் கோரி, அதனை நானே கையொப்பமிட்டு வழங்கினேன். ஆகவே, நான் கையொப்ப மிட்டு வழங்கியதை என்னால் ரத்து செய்ய முடியாது. ஆகவே,இந்தப் பள்ளிவாசல் சம்பந்தமாக பழைய பல அழுத்தங்களும் எந்நாளும் வந்த வண்ணமாக உள்ளன. நான் சொன்னேன் அவர்களுக்கு 'நீங்கள் கூ வைப்பது, கூக்குரல் இடுவது, கல் வீசுவது, பள்ளிவாசலுக்கு வந்து இப்புனித மாதத்தில் தொழுகின்றார்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கு நான் இடம் தரமாட்டேன்' அதைக் கண்டிப்பாகச் சொல்லி இருக்கின்றேன்.
ஏதாவது பிரச்சினை இருந்தால் நாங்கள் கலந்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவோம். இறுதி முடிவை எடுப்போம். நாங்கள் ஒரு தீர்வைப் பெறுவோம்.அது வரையில் நீங்கள் அவசரப்பட்டு கலகம் விளைவிக்கின்ற இடமாக, தளமாக இந்தப் பள்ளிவாசலையும் சுற்றுப் புற இடங்களையும் ஆக்குவதற்கு நான் இடமளிக்க மாட்டேன்.
இது 6ஆவது முறையாக இவ்வருடம் இப்தார் வழங்குகின்றேன். அடுத்த முறை நான் மேயராக இருப்பேனோ என்ன வென்று தெரியாது. எப்படியாக இருந்தாலும் தனசிரி அமரதுங்க என்ற நான், உங்களை என்றும் அழைப்பேன். நீங்கள் எல்லோரும் இப்தாருக்கு வாருங்கள்.