உலகின் தலைசிறந்த குத்துச்சண்டை வீரரும் கறுப்பின போராளியுமான முகமது அலியின் மரணம் குறித்து தனது அஞ்சலியை வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா அவர் வாழ்ந்த காலத்தை உலகின் மிகச்சிறந்த காலம் என வர்ணித்துள்ளார்.
அலி சரியான விடயங்களிற்காக குரல்கொடுத்தவர் கறுப்பினத்தவர்களின் உரிமைக்காக நெல்சன் மண்டேலா மார்ட்டின் லூதர் கிங்குடனும் தோளோடு தோள் நின்றவர் எனவும் தெரிவித்துள்ளார்.
ஓபாமா மேலும் தெரிவித்துள்ளதாவது;
இந்த பூமிப்பந்தில் உள்ள அனைவரையும் போல நானும் எனது மனைவியும் அவரது மரணம் குறித்து துயர்அடைகின்றோம்,அதேவேளை அவரை அறிந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியமைக்காக கடவுளிற்கு நாங்கள் நன்றி செலுத்துகின்றோம்.
நான் எனது தனிப்பட்ட அறையில் அவரது புகைப்படமொன்றை வைத்திருக்கின்றேன், அந்த புகைப்படத்திற்கு கீழே அவரது கையுறைகள் இரண்டையும் வைத்துள்ளேன்,22 வருடத்திற்கு முன்னர் அவர் சிங்கம் போன்று கர்ஜிக்கும் புகைப்படம் அது.
நானும் அமெரிக்காவே என அவர் ஓருமுறை பிரகடனம் செய்தார்,நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் அமெரிக்காவின் பகுதி நான்,ஆனால் பழகிக்கொள்ளுங்கள், நான் கறுப்பினத்தவன்,அதிக நம்பிக்கையுள்ளவன்,துடுக்கானவன், எனது பெயர் உங்களுடையதில்லை, எனது மதம் உங்களுடையதில்லை,ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.
நான் பின்னர் அவரை புரிந்துகொள்வதற்கான வயதை எட்டினேன்,- ஓரு திறமையான கவிஞனாக இல்லை,அல்லது மிகச்சிறந்த குத்துச்சண்டை வீரனாகயில்லை மாறாக அநீதிக்கு எதிராக சரியான விடயங்களிற்காக போராடிய மனிதனாக நான் அவரை புரிந்துகொண்டேன்.எங்களிற்காக போரடியவர்.மண்டேலாவுடனும் மார்டின் லூதர் கிங்குடனும் தோளோடு தோள் நின்றார்.
அரங்கிற்கு வெளியே மேற்கொண்ட போராட்டங்களிற்காக அவர் பல விடயங்களை இழந்தார்,அவரிற்கு பல எதிரிகளை சம்பாதித்துக்கொடுத்தது,கிட்டத்தட்ட சிறையி;ல் அடைக்க்பட்டார். ஆனால் அலி உறுதியாக நின்றார் அதன் காரணமாகவே இன்றைய அமெரிக்கா எங்களிற்கு கிடைத்தது.
அவர் எப்போதும் முழுமையான மனிதராக விளங்கவில்லை,அரங்கில் பல சாதனைகளை ஏற்படுத்தினாலும் அவரது சொற்கள் அவதானமற்றவையாக காணப்பட்டன,ஆனால் அவரது அற்புதமான எல்லோரையும் ஆக்கிரமிக்க கூடிய அப்பாவித்தனமான இயல்பு பல நண்பர்களை அவர் அடைவதற்கு காரணமாக அமைந்தது. பின்னர் அவர் உலகம் முழுவதும் அமைதி சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான வலுவான சக்தியாக மாறினார். என குறிப்பிட்டுள்ளார்.