பொரளை ஜும்மா பள்ளிவாசல் மீது ஒரு வருடத்துக்கு முன்பு கல்லெறிந்து தாக்குதல் நடத்திய 5 சந்தேகநபர்களும் தாம் மேற்கொண்ட தவறுக்காக வருந்தியதை அடுத்து மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பள்ளிவாசலுக்கு கல்லெறிந்து சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் குறித்த சந்தேகநபர்கள் ஐவருக்கும் எதிராக தண்டனை சட்டக் கோவை 410 மற்றும் 291 ஆகிய பிரிவின் கீழ் பொலிஸார் வழக்கு தொடுத்திருந்தனர்.
சந்தேக நபர்கள் தமது தவறுக்கு வருந்துவதால் பிரதிவாதிகளின் மன்னிப்பு கோரிக்கையை ஏற்றுகொள்ள பள்ளிவாசல் நிர்வாகம் தயார் என நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, பள்ளிவாசலுக்கு ஏற்பட்ட சேதம் 50,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டு அந்த தொகையை பள்ளிவாசலின் பெயரில் பொரளை வஜிரஞானராம விகாரைக்கு வழங்குமாறு நிர்வாக சபை விடுத்த கோரிக்கையை பிரதிவாதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்நடவடிக்கை சகவாழ்வு மற்றும் பிற மதங்கள் மீதான நல்லெண்ணம் ஏற்படுத்தும் அடிப்படையிலேயே பள்ளிவாசல் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் இதன்போது நீதிமன்றுக்கு தெரிவித்தார்.
பள்ளிவாசல் சார்பாக சட்டத்தரணிகளான ஷிராஸ் நூர்தீன், ருஷ்தி ஹபீப் மற்றும் ரமீஸ் பஷீர் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.