சப்னி-
எமது நாட்டைப் பொறுத்தவரையில் சிகரெட் மற்றும் மதுபான விற்பனையின் மூலம் பில்லியன் கணக்கில் வருமானம் கிடைக்கின்றது. ஆனாலும் போதைப்பொருளுக்கு இலக்காகி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சுகாதார அமைச்சு அவர்களுக்காக செலவிடும் தொகை அதன் மூலம் கிடைக்கும் வருமாணத்தை விட இருமடங்கு அரசு செலவிடுகின்றது என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏல்.எல்.முஹம்மட் நசீர் இன்று (01) தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இடம்பெற்ற உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் கூறுகையில்;
நாட்டில் போதைவஸ்து மற்றும் மது, சிகரெட் பாவனை அதிகரித்து வருகின்றது. இதனால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் வருடந்தோறும் அதிகரித்து வருவதையே புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இதனால் போதைவஸ்து, மது மற்றும் சிகரெட் பாவனையை எவ்வாறு மக்கள் மத்தியில் கொண்டு செல்வது தொடர்பாகவும் அதற்கான புதிய திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாகவும் இன்றிலிருந்தே திட்ட மிட வேண்டும்.
புதிய அரசாங்கமானது போதைவஸ்துப்பாவனையை இல்லாதொழிப்பதற்கும் மது மற்றும் சிகரெட் பாவனையை கட்டுப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகின்றது. தேசிய போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தையும், போதைப் பொருள் தடுப்பு மாதத்தையும் பிரகடனப்படுத்தும் தேசிய தினத்தை நேற்று (31) ஆரம்பித்து வைத்து இந்த மது எதிர்ப்பு தினத்தை எதிர்வரும் 12ஆம் திகதி வரை முன்னெடுக்கவுள்ளது.
மேலும், எமது நாட்டையும் மக்களையும் சீரழித்துவரும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தக செயற்பாடுகள் தொடர்பில் எந்தவொரு கட்சியோ அல்லது அரசியல் பாகுபாடு இல்லாமல் இதனை ஒழிப்பதற்கான சகல முன்னெடுப்புக்களையும் முன்னெடுக்க அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும். இவ்வாறு செயற்படுவதன் மூலம் எமது நாட்டையும், எமது மக்களையும் மது போதையற்ற நாடாக மாற்றி அமைக்க முடியும்.
எமது நாட்டில் காணப்படும் சனத்தொகையில் குறைந்த வருமானத்தை பெறும் மக்களிடையே பொருளாதார ரீதியாக மிகவும் வறுமையுடன் வாழும் மக்கள் தமது வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கினை போதைப்பொருள் பாவனைக்காக செலவிடுகின்றனர். இன்று ஏனைய நாடுகளைப்போன்று எமது நாட்டிலும் அதிகரித்த வறுமை நிலைக்கு போதைப் பொருள் பாவனை மிகவும் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. அந்த வகையில் நாட்டில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு காரணமாக நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
போதைப்பொருள் பாவனைக்கு 15 வயது தொடக்கம் 25 வயது வரையானோரே அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சுகாதார செயற்பாடுகளுள் ஒப்பீட்டளவில் இலங்கை முதலிடத்தில் உள்ளபோதும் போதைப் பொருள் பாவனை மூலம் சமூக கட்டமைப்புக்கள் மாற்றமடையக்கூடிய அச்சுறுத்தல் எமது நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து இன்றைய இளைய சமூதாயத்தினரை பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு பாரிய பொறுப்புள்ளது. இதற்கான சகல நடவடிக்கைகளையும் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் ஒன்றினைந்து பாடுபட வேண்டும் என சுகாதார அமைச்சர் மேலும் கூறினார்.