தெஹிவளை, களுபோவில ஸ்ரீ மஹா விகாரை வீதியில் 84 ஆம் இலக்க இடத்தில் சட்ட விரோத சமய மத்திய நிலையமொன்று அமைக்கப்பட்டு வருவதாக அப்பிரதேச பிக்கு ஒருவரும் பொதுமக்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிர்மாணப் பணிகளை உரிய அதிகாரிகள் உடன் நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சாராணாத் தர்ம பிரிவின் விகாராதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எலமன்தெனிய சாரானந்த தேரர் இது தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்து சில சிங்கள ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிர்மாணப்பணிகள் பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. இருப்பினும், எதிர்ப்பின் காரணமாக 2011 ஆம் ஆண்டு அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டிருந்தது. தற்பொழுது இந்த நிர்மாணப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டள்ளமை இரு மதத்தவர்களிடையே மோதலை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும் என குறித்த விகாராதிபதி தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குள்ளான சமய மத்திய நிலையமொன்றை அமைப்பது இலங்கையில் உள்ள சாதாரண மக்கள் அல்லர். வெளிநாட்டவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் சூழ்ச்சிக்காரர்கள் குழுவொன்றாகும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஊடகங்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தேரர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, குறித்த பாத்தியா பள்ளிவாசல் நிர்மாணப்பணிகள் தொடர்பாக கடந்த 10 ஆம் திகதி பாராளுமன்ற காட்ட தொகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த பள்ளிவாயலின் விஸ்தரிப்பு பணிகளை கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்க அமைச்சர் சாகல ரத்நாயக இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜீபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.