க.கிஷாந்தன்-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்குவதாக தகவல்கள் பரவி வருகின்றது. இந்த அமைச்சு பதவிகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் யாரிடமும் கேட்கவில்லை. அமைச்சு பதவிகளை கொடுப்பதற்கு முன்பே சிலர் இதனை கொடுக்க வேண்டாம் என விமர்சிக்கின்றார்கள். ஆனால் அவர்கள் இதில் தலையிட வேண்டாம் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான முத்து சிவலிங்கம் வழியுறுத்தியுள்ளார்.
கொட்டகலையில் அமைந்துள்ள இ.தொ.காவின் தொழிற்பயிற்சி கேட்போர் கூடத்தில் வைத்து 19.06.2016 அன்று ஊடகவியலாளர்களினால் எழுப்பிய கேள்விகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு தெரிவிக்கையில்,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பத்து வருட காலமாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து செயல்பட்டு வருகின்றது.
அண்மையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டு தற்பொழுது ஆட்சியில் உள்ளார். இவருடன் நாங்கள் கலந்துரையாடல் செய்து மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தெளிவுப்படுத்தியதன் காரணமாக ஜனாதிபதி அவர்கள் மலையக மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இணங்கியுள்ளார்.
நாங்கள் ஜனாதிபதியை சந்தித்த போது அமைச்சு பதவிகள் எதுவும் கேட்கவில்லை. கேட்கபோவதும் இல்லை. ஏனையவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கினால் அதனை தடுக்க போவதும் இல்லை.
அமைச்சு பதவிகள் வழங்குவதை தடுப்பதற்கு இந்த நாட்டில் முறை இருக்கின்றதா என எனக்கு தெரியவில்லை. அமைச்சு பதவிகளை வழங்குவது தொடர்பில் இந்த நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் தான் யோசிக்க வேண்டும். அதில் ஒட்டிக்கொண்டு இருப்பவர்களுக்கு அதிகாரம் இருக்கின்றதா என தெரியவில்லை.
ஆனால் தற்பொழுது ஊடகங்களில் பல விமர்சினங்களை முன்வைத்து வருவது வேடிக்கையாக இருக்கின்றது. ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ இருந்த காலத்தில் அவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கினார்கள். ஆனால் நாங்கள் கொடுக்க வேண்டாம் என தடுக்கவில்லை. தற்பொழுது அமைச்சு பதவிகளை வாங்கிவிட்டு மக்களுக்கு எவ்வளவோ சேவை செய்ய வேண்டிய நேரத்தில் மாற்று கட்சிகார்கள் பற்றி விமர்சனம் செய்து கொண்டு அமைச்சு பதவிகளை கொடுக்க வேண்டாம் என கூறிக்கொண்டு இருப்பதை மக்கள் இன்று பார்த்து சிரிக்கின்றார்கள். அவர்கள் அமைச்சு பதவி வாங்கும் போது இ.தொ.கா எதுவும் பேசவில்லை. அது தான் அரசியல் நாகரிகம் ஆகும்.
கடந்த காலங்களில் சம்பள உயர்வின் போது பல போராட்டங்கள் நடத்தி கம்பனியை ஏற்றுக்கொள்ள வைத்து சம்பள உயர்வு பெற்றுக்கொடுத்துள்ளோம். தற்பொழுது இ.தொ.கா தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதில் கடுமையாக கம்பனியுடன் போராடி வருகின்றது. சிலர் இதனை இல்லாமல் செய்வதற்கும் செயல்பட்டு வருகின்றனர்.
எனவே தொடர்ந்து கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். தோட்ட தொழிலாளர்களுக்கு சிறந்த முறையிலான சம்பளத்தை பெற்றுக்கொடுப்போம் என்றார்.