படுகொலை செய்யப்பட்ட பிரபல றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடைய குற்ற விசாரணைப் பிரிவில் காணப்படும் CCTV வீடியோ பதிவுகளை பகுப்பாய்வு செய்வதற்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா ஆய்வகம் ஒன்றிற்கு அடுத்த வாரமளவில் அனுப்பப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கொலையுடன் தொடர்புடைய வழக்கு கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்றது. குறித்த பகுப்பாய்வு அறிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் கிடைக்கப்பெறும் என அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி இதன்போது தெரிவித்துள்ளார்.
வசீம் தாஜுதீனின் பணப்பை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்தமை தொடர்பில் இந்த கொலையுடன் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க தொடர்புபட்டுள்ளாரா என கண்டறியும் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது சுகாதார காரணங்களுக்காக அனுர சேனாநாயக்காவுக்கு பிணை வழங்குமாறு கோரியிருந்தும் நீதிமன்றம் அதனை நிராகரித்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்ட பொலிஸ் குற்றவியல் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக பெரேரா ஆகியோரை எதிர்வரும் ஜூலை 7 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. dailyceylon