ஓரிரு தினங்களாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சர், கிழக்கு மாகாண முதலமைச்சரை பதவி விலகக் கோரியதாக சமூக வலைத்தளத்திலும் அச்சு ஊடகங்களிலும் ஒரு செய்தி வந்து கொண்டிருப்பதை அவதானித்தேன்.
பதின்மூன்றாவது சரத்தையும் மாகாண சபைகள் கட்டளைச் சட்டத்தையும் பற்றி அறவே அறிந்திராத அமைச்சர் ஒருவரால்தான் இவ்வாறான ஒரு செய்தியைக் கூற முடியும் என பார்த்த மாத்திரத்திலேயே விளங்கிக்கொண்டேன் எனக்கூறினார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகாரம் மற்றும் தொழில் வாய்ப்புச் செயலாளருமான ஏ.எல்.தவம்.
நேற்று (03) மாலை அக்கரைப்பற்று பதூர் நகரில் வசதியற்றோருக்கான ரமலான் மாத கால உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
ஒரு முதலமைச்சரை அவர் சம்மதம் இல்லாமல் பதவி விலக்க முடியாது என்பதைக் கூட அந்த அமைச்சர் விளங்கிக் கொள்ளாமல் இருப்பது நகைப்புக்குரிய விடயமாக இருந்தது. கடந்த காலத்தில் பிள்ளையான் முதலமைச்சராக இருந்த போது அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களால் கூட நினைத்த மாத்திரத்தில் அதனைச் செய்ய முடியாதிருந்தது.
கிழக்கு மாகாண சபையை அதன் ஆயுட்காலமான ஐந்து வருடங்களுக்கு முன்னர் கலைப்பதற்காக சம்மதம் பெற பெரிய பிரயத்தனமே செய்ய வேண்டியிருந்தது. இறுதியில் தனியாகக் கூட்டி மூடிய அறைக்குள் மிரட்டித்தான் பிள்ளையானின் சம்மதம் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அப்படி இருக்கும் போது இப்படியான சின்னப்பிள்ளைத்தனமான அறிக்கைகளை பொறுப்புள்ள அமைச்சர் விட்டிருப்பதை நாம் என்ன சொல்வது. முதலமைச்சர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் தமிழ் கூட்டமைப்பின் ஆதரவோடு நியமிக்கப்பட்டிருப்பவர்.
ஒன்றில் முஸ்லிம் காங்கிரஸ் அல்லது தமிழ்க் கூட்டமைப்பு அவருக்கான ஆதரவை வாபஸ் வாங்கி, இன்னுமொருவரை தக்க பெரும்பான்மையோடு ஆதரவு வழங்கினால் தவிர, அவரை அகற்ற முடியாது என்பதை அமைச்சர் புரிந்து கொள்ளாதது அவரின் அறியாமையைக் காட்டுகிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் தலை குனிவது மொத்தமான கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தலைக் குனிவாக அமையும். வடக்குக் கிழக்கிற்கு அதிகாரம் வேண்டுமென்ற தமிழ் பேசும் மக்களின் அபிலாசைக்கு எதிராக அமையும். ஆதலால், தமிழர், முஸ்லிம், சிங்களவர் என்ற பேதங்களை மறந்து இந்த இக்கட்டான சூழலில் நாம் முதலமைச்சரோடு கை கோர்த்து நிற்கிறோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் தமிழ்க் கூட்டமைப்பும் எந்தக் கட்டத்திலும் கிழக்கு மாகாணத்திற்கான அதிகாரத்திற்காக கைகோர்த்து நிற்குமெனவும் அவர் கூறினார்.