கிண்ணியன்-
இந்த நல்லாட்சியில் அல்லாஹ்வையையும், இறைத்தூதரையும் தூற்றி வருகின்ற ஞானசார தேரருக்கு எதிராக எமது கட்சி மூலம் பொலிஸில் முறைப்பாடொன்றை எதிர் வரும் திங்கள் (4) செய்ய இருக்கிறேன். அத்தோடு மஹிந்த ஆட்சிக் காலத்தில் அவருக்க எதிராக செய்யப்பட்ட 47 பொலிஸ் முறைப்பாடுகளையும் விசாரணை செய்யக் கோரும் மற்றொரு முறைப்பாட்டையும் செய்ய இருக்கிறேன்; என கைத்தொழில் வாணிபத் துறை அமைச்சர் றிசாத் பதூர்தீன் தெரிவித்தார்.
நேற்று (01) கிண்ணியா மத்திய கல்லூரி மைதானத்தில் பாராளமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூபினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்த்தார் நிகழ்வில் பிரதம அதீதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
பௌத்த மக்கள் மிகவும் நேசிக்கின்ற அந்த புனிதமான உடையை அணிந்து கொண்டு இன்னுமொரு மதத்தை அவமதித்துத் திரிகின்ற இவரது நடவடிக்கையினை எந்தவொரு பௌத்தனும் அங்கிகரிக்க மாட்டான். ஜனாதிபதிக்கு அவரது நடவடிக்கை தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறேன்.
இந்தநாட்டின் சுதந்திரத்துக்கு முன்னரோ பின்னரோ எந்தவொரு கலவரத்தையும் செய்யாத எந்தவொரு இனவாதத்தையும் தூண்டாத எந்தவொரு பயங்கரவாதத்தையும் அங்கிகரிக்காத இந்த நாட்டின் விசுவாசிகளாக இருந்து வவருகின்ற முஸ்லிம் சமூகத்துக்கு ஞானசார தேரர் ஏன் இவ்வாறான அநியாயத்தைச் செய்து வருகிறார்.
முஸ்லிம் சமூகத்துக்கு எந்த வகையான சதி நடந்தாலும் அனைத்தையும் முறியடிக்கின்ற சவாலையும் முஸ்லிம்; சமூகம் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஞானசார தேரருக்கு எமது கல்வியும் பொருளாதாரமுமே முக்கிய இலக்காக இருக்கின்றது. எனவே முஸ்லிம் சமூகம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மென் மேலும் வளர்ச்சியடைய வேண்டும். அதற்கான சிறந்த வேலைத் திட்டம் ஒன்றை சமய ரீதியாகவும் அரசியில் ரீதியாகவும் நாம் மேற்கொள்ள வேண்டும். இது சிறப்பாக முன்னெடுக்கப்பட வேண்டுமானால், நாம் சிறு சிறு பிரச்சினைகளுக்கு பிளவுபட விடாமல், அரசியல் ரீதியாக ஒன்றுபட்டு அனைத்து சவால்களையும் முறியடிக்க வேண்டும்.
இந்த நாட்டிலே புதிய நல்லாட்சியைக் கொண்டு வருவதற்காக ஜனாதிபதி, பிரதமர் உட்பட நாங்களும் இந்த நாட்டு மக்கள் மத்தியில் பொது பல சேனாவுக்கு எதிராக கருத்துத் தெரிவித்தே ஆட்சிக்கு வந்தோம். மத நிந்தனைக்கு எதிராக சட்ட மூலம் கொண்டு வந்து, அவற்றை நிறைவேற்றி அமுல்படுத்துவதற்கு மக்களிடம் அங்கிகாரம் கேட்டோம். அனைத்து இன மக்களும் அங்கிகரித்தார்கள். இதன் மூலம் புதிய நல்லாட்சி உருவானது. ஆனால் இந்த நல்லாட்சியிலும் ஞானசார தேரரின் ஆணவமும் அடாவடித்தனமும் தொடருகின்றது. இவற்றை அங்கிகரிக்க முடியாது என்பதற்காகவே ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினேன்.
இன்று உலகலாவிய ரீதியில் முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய சவால்கள் ஏற்பட்டுக் கொண்டு வருகின்றன. இந்த துன்பங்களுக்கு எவ்வாறு முடிவு கட்டுவதென்ற சவால்களைச சந்தித்துக் கொண்டிருக்கிறோம். 45 முஸ்லிம் நாடுகளில் வெடியும் சத்துமும் குண்டும் என இரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையிலே இந்த நாட்டிலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அளுத்கமயில் தொடங்கிய அழிவை தொடருவதற்கு பொது பலசேன தற்போது முயன்று கொண்டு வருகின்றது.