திவயின பத்திரிகை மீது ஜனாதிபதி மைதிரிபால பாச்சல்..!

யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அமைக்கப்படவுள்ள உள்ளக நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு நீதிபதிகள் உள்வாங்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மீண்டும் அறிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் ஞாயிறு திவயின என்ற சிங்கள வார இறுதிப் பத்திரிகையில், யுத்தக் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறை ஒன்பது மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என தலைப்புச் செய்தி வெளியாகியுள்ளது.

இதனையும் ஜனாதிபதி முற்றாக நிராகரித்துள்ளதுடன், ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்புவதாகவும் கடிந்துகொண்டார்.

கண்டி பேராதனையிலுள்ள ஸ்ரீ சுபோதாராம விகாரையில் நேற்றைய தினம் வத்தேகம ஸ்ரீ தம்மாவாச தேரரின் ஞனன தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

அங்கு கூடியிருந்த பௌத்த பிக்குகள், அரசியல் வாதிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் உரையாற்றிய ஸ்ரீலங்கா ஜனாதிபதி, யுத்த குற்ற நீதிமன்றம் இன்னும் 9 மாதங்களில், வெளிநாட்டு நீதிபதிகள் வருகின்றனர் என்ற தலைப்பில் வெளியான ஞாயிறு திவியின பத்திரிகையின் பிரதியொன்றை காண்பித்து, இவ்வாறான பொய்யான செய்திகளையும், மக்களை குழப்பும் செய்திகளையுமே ஊடகங்கள் வெளியிடுவதாக குற்றம்சாட்டினார்.

ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

” யுத்தக் குற்ற விசாரணை 9 மாதங்களில், சர்வதேச நீதிபதிகளும் உள்ளடக்கம் என்ற இந்த செய்தியை நான் முழுமையாக நிராகரிக்கிறேன்.

வெளிநாட்டு நீதிபதிகளை நான் ஒருபோதும் அனுமதிக்கப்போவது இல்லை என நான் ஏற்கனவே கூறிவிட்டேன். நம் நாட்டின் நீதிமன்றங்களில் வெளிநாட்டு நீதிகளைக்கொண்டு பணிகணை முன்னெடுக்க அரசியல் யாப்பினூடாக எவ்வித வாய்ப்புகளும் இல்லை.

அப்படியாயின் அரசியல் யாப்பினை மாற்றியமைக்க வேண்டும். அதற்கு நான் இடமளிக்கப்போவதும் இல்லை. இந்த செய்தியின் ஊடாக நாட்டு மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகிறது.

ஒன்பது மாதங்களில் யுத்தக்குற்ற விசாரணை தொடர்பிலான நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட போவதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழு யுத்தக் குற்ற நீதிமன்றம் தொடர்பில் எவ்வித அறிவுறுத்தலையும் வழங்கவில்லை.

யுத்த நீதிமன்றிற்கு நம்மை அழைத்துச் செல்வோம் என்றோ, மின்சாரக் கதிரை குறித்தோ எவ்வி தீர்மானங்களும் இல்லை. சமாதானம், ஜனநாயக உரிமைகள், மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த வருடம் சில ஆலோசனைகளை வழங்கியது.

ஆணையாளர் என்னை சந்தித்த சமயத்தில், வடக்கு கிழக்கில் மக்களை மீளக்குடியேற்றல், நீதிமன்றங்களின் சுயாதீனத் தன்மையை உறுபதிப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலேயே கலந்துரையாடினார். ஆகவே இவ்வாறான செய்திகள் தொடர்பில் நாம் கவலையடைகிறோம். என்றார்.

அத்துடன் எவ்வாறாயினும் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவின் அணுசரனையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், யுத்த குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட சட்டத்தரணியின் அலுவலகமொன்றும், பொதுநலவாய மற்றும் வெளிநாடுகளின் நீதிபதிகள், சட்டத்தரணிகள், வழக்குத் தொடுநர்கள் ஆகியோரை உள்ளடக்கிய உள்ளக நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

வடக்கில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வகளை பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் கூறிய ஜனாதிபதி, தீர்வுகள் என்பது, நாட்டை பிரிப்பதோ, துண்டாடுவதோ அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

”வட பகுதி மக்களுக்கு பிரச்சினைகள் காணப்படுகின்றன. இல்லாவிடின் அவர்கள் 26 வருடம் யுத்தம் செய்ய வேண்டிய தேவையில்லை. அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும். அது நாட்டை பிரிக்கும், அல்லது துண்டாடும் விடயமல்ல.

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரிக்கும் விடயமும் அல்ல. சுதந்திரத்திற்கு பின்னர் கடந்த 65 வருடங்களில் வடக்கு தொடர்பில் சிந்தித்த செயற்படக்கூடிய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படவில்லை.

அதுவே பிரதான பிரச்சினை. வடக்கில் முகாம்களில் வாழும் மக்களை சென்று சந்திக்குமாறு நான் பல முறை அமைச்சர்களுக்கு கூறியிருக்கிறேன்.

காரணம் நாட்டின் பௌத்தர்கள் என்ற வகையில் அவர்களது பிரச்சினையை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவர்களது பிரச்சினையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாடுகளின் அழுத்தங்களையோ, வெளிநாடுகளின் தலையீட்டையோ, வெளிநாட்டவர்களுக்கத் தேவையான வகையில் இந்த நாட்டின் ஆட்சி முறையை மாற்றவோ நான் ஜனாதிபதியாக இருக்கும் வரை இடமளிக்கப்போது இல்லை என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -