சமூகம்சார்ந்த கடமைகளில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் சமூக மேம்பாட்டுக்கு நாம் அனைவரும் உதவ வேண்டும்.
திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இவ்வருடம் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த பெருநாள் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். “தகப்பலல்லாஹ_ மின்னா வ மின்கும்”
ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று குர்ஆன் ஓதுதல் சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றல்; போன்ற வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டதன் மூலம் நமக்கான நன்மைகளை அதிகம் பெற்றுக் கொண்டோம். இது சந்தோசமான விடயம்.
இதேபோல சமூகம் சார்ந்த பல்வேறு கடமைகள் நமக்கு இருக்கின்றன. இந்த விடயத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது நமது கடமையாக உள்ளது. அப்போது தான் பூரணமான இறைதிருப்தியை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
இன்று யாசகம் கேட்போரின் எண்ணிக்கை நமது சமூகத்தில் கூடியுள்ளது. இது நமது நாட்டு முஸ்லிம் சனத்தொகை விகிதாசாரத்தை விடவும் அதிகம் என்று ஊடகமொன்றில் தகவல் வெளிவந்துள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். உண்மையில் இஸ்லாம் யாசகத்தை ஊக்குவிக்கவில்லை. இப்படியிருக்க ஏன் நமது சமூகத்தில் யாசகர்கள் அதிகரிக்க வேண்டும் என்பது குறித்து நாம் அனைவரும் சிந்திக்க வேண்டியுள்ளது.
சிலர் உண்மையில் வறியவர்களாக இருக்கின்றனர். இவ்வாறானவர்களை இனங்கண்டு நமது ஸக்காத் ஸதக்கா பங்குகள் மூலம் அவர்களது வறுமையைப்போக்க முயல வேண்டும். கூடுதலானோர் பொய்க்காரணங்களைக் கூறி யாசகத்தில் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இப்படியானவவர்கள் இனங்காணப்பட வேண்டும். அவர்களை நேர்வழியில் செல்லத் தூண்ட வேண்டும். அவர்கள் யாசகம் கேட்பதைத் தடுக்க வேண்டும்.
இது ஒரு சமூகக்கடமையாகும். அந்த வகையில் எல்லோரும் இதனை தமது சிந்தனைகளுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். நடவடிக்கையில் இறங்க வேண்டும். இதன் மூலம் நமது சமூகத்திற்கு ஏற்படும் அபகீர்த்தியைப் போக்க ஒவ்வொருவரும் பங்களிப்புச் செய்ய முடியும்.
ரமழானில் நாம் பெற்ற மனப்பக்குவத்தோடு சமூகம் சார்ந்த இந்த சிந்தனையையும் இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் தர வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.