எதிர்வரும் 17-07-2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வலம்புரி கவிதா வட்டம் (வகவம்) தனது ஆண்டு விழாவையும், கௌரவிப்பு நிகழ்வையும், சிறப்புக் கவியரங்கினையும் நடாத்துகிறது.
வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைனின் தலைமையில் நடைபெறும் இவ் விழாவில் இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர், நாவலர் நற்பணி மன்ற தலைவர் கருணை ஆனந்தன், புரவலர் தேசமான்ய அல்ஹாஜ் அப்துல் கையூம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி அனூஷா கோகுள பிரனாந்து விசேட அதிதியாகவும், பூபாலசிங்க புத்தகசாலை அதிபர் ஆர்.பி.ஸ்ரீதரசிங், அஸீஸ் பவுண்டேசன் தலைவர் அஸ்ரப் அஸீஸ், சிரேஷ்ட வானொலிக் கலைஞர் எம்.எஸ்.எம்.ஜின்னா ஆகியோர் சிறப்பதிதிகளாகவும கலந்து கொள்கிறார்கள்.
செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் வரவேற்புரை நிகழ்த்துவார்.
இவ்விழாவில் இரண்டாண்டு கால வகவ நிகழ்வுகளின் சுவடுகள் மற்றும் வகவ கவியரங்குகளில் பங்கேற்ற கவிஞர்களின் புகைபட்ங்கள் அடங்கிய 'வகவப் பதிவுகள்' எனும் நூலும் வெளியீடும், அந்த நூலின் முதற் பிரதியினை இலக்கியப்புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொள்வார்.
'தமிழ் - சிங்கள கவிதை உறவுகள் ' எனும் தலைப்பில் மொழி பெயர்ப்பாளரும், இரு மொழி இலக்கிய செயற்பாட்டாளருமான திரு. ஹேமசந்திர பத்திரன சிறப்புரை ஆற்றுவார்.
வகவத்தின் வளர்ச்சிக்கும், கவிதை இலக்கியத்திற்கும் இன்று வரை அரும்பாடுபட்டுவரும் வகவ தேசிய அமைப்பாளரும் 'கவின்' சஞ்சிகை ஆசிரியருமான கவிஞர் கலா விஸ்வநாதன் கௌரவிக்கப்படுகிறார். கௌரவிப்பு உரையை வகவ ஸ்தாபகத் தலைவர் டாக்டர் தாஸிம் அகமது செய்கிறார்.
அத்துடன் இம்முறை உலக கவிதை தினம் கொழும்பு நெளும் பொக்குண (தாமரைத் தடாகம்) மண்டபத்தில் அரச மட்டத்தில் நடைபெற்றபோது அதில் மூத்த தமிழ்க் கவிஞர்கள் கௌரவம் பெறவும், 82 தமிழ்க் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு வெளிவரவும் வழிவகுத்த கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி. அனூஷா கோகுள பிரனாந்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் அந் நிகழ்வில் கௌரவம் பெற்ற மூத்த கவிஞர்களான கல்வயல் கே.குமாரசாமி, பல்கலை வேந்தர் கலைவாதி கலீல் அவர்களையும், அந் நிகழ்வில் தமிழ்க் கவிஞர்கள் கௌரவிக்கப்படுவதற்கும், தமிழ்க் கவிதை தொகுப்பு வெளிவருவதற்கும் மூல காரணமாய் இருந்த வகவ கவிஞர்கள் மேமன்கவி, வதிரி சி.ரவீந்திரன் ஆகியோரை பாராட்டும் நிகழ்வும் இடம்பெறும். அவர்களுக்கான உரையை தமிழ்த்தென்றல் அலி அக்பர் நிகழ்த்துவார்.
அத்துடன் கவிஞர் மேமன் கவியின் தலைமையில் வகவத்தின் சிறப்புக் கவியரங்கம் நடைபெறும். இதில் கவிஞர்கள் எம்.ஏ.ஏம்,ஆறுமுகம், கலையழகி வரதராணி, ரவூப் ஹஸீர், இப்னு அஸூமத், வதிரி சி. ரவீந்திரன், எஸ். தனபாலன், ரி.என். இஸ்ரா ஆகியோர் பங்குபற்றுவார்கள்.
நன்றியுரையை வகவ செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஈழகணேஷ் மேற்கொள்வார். இளநெஞ்சன் முர்ஷிதீன், செல்வி இந்துஜா சிவலிங்கம் ஆகியோர் நிகழ்வை தொகுத்து வழங்குவார்கள்.