பாலித தேவரப்பெருமவும் தற்கொலையும்...!

சுதந்திர இலங்கையில் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தற்கொலை செய்து தம் உயிரையே மாய்த்துக் கொள்ளவெனப் பிரதியமைச்சர் ஒருவர் முயற்சி செய்தமை வரலாற்றில் முதற்தடவையாக நேற்று முன்தினம் பதிவாகியுள்ளது.

அதுவும் களுத்துறை மாவட்டத்திலுள்ள மத்துகம தேர்தல் தொகுதியின் மீகாஸ்தென்ன பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான பாலித தேவரப்பெருமவே இந்த முயற்சியில் ஈடுபட்டவராவார்.

மீகஸ்தென்ன கனிஷ்ட பாடசாலையில் முதலாம் தரத்தில் கல்வி கற்க அனுமதி பெறுவதற்கான பரீட்சையில் குறைவான புள்ளிகள் பெற்ற காரணத்தைக் காட்டி அப்பாடசாலையில் பத்து மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஆனால் அப்பிள்ளைகளுக்கும் பாடசாலையில் இடமளித்து அவர்களது கல்வி கற்கும் உரிமையை வழங்குமாறு பாடசாலை அதிபரிடமும், கல்வி அதிகாரிகளிடமும் பிரதியமைச்சர் தேவரப்பெரும பல முறை கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் பாடசாலையில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களைச் சேர்ப்பது தொடர்பான சுற்றறிக்கையை மீறி இம்மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள முடியாது என குறித்த பாடசாலையின் அதிபரும், கல்வி அதிகாரிகளும் அடம்பிடித்து வந்தனர்.

இவ்வாறான நிலையில் பிரதியமைச்சர் பாலித தேவரப்பெரும இந்தப் பத்து மாணவர்களுக்கும் நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் அப்பிள்ளைகளின் பெற்றோருடன் இணைந்து குறித்த பாடசாலைக்கு முன்பாகக் கடந்த திங்களன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

இப்போராட்டம் இரண்டு நாட்களைக் கடந்த போதிலும் நியாயமான பதில் கிடைக்கப் பெறுவதாக இல்லை. இப்பிள்ளைகளுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் தனது பிரதியமைச்சர் பதவியை இராஜிநாமாச் செய்வேன் என அவர் அறிவித்தார்.

இருப்பினும் அதற்கும் கல்வி அதிகாரிகளிடமிருந்து நேற்று முன்தினம் வரையும் நியாயமான பதில் கிடைக்கவில்லை.

அதனால் தம் உயிரை மாய்த்தாவது இம்மாணவர்களுக்கு நீதியையும், கல்வி கற்கும் உரிமையையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தாம் அணிந்திருந்த மேலாடையைக் கழற்றி பாடசாலையிலுள்ள மின்விசிறியில் சுற்றி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார் பிரதியமைச்சர் தேவரப்பெரும.

இம்முயற்சி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அத்தோடு பிரதியமைச்சரின் இம்முயற்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாடசாலை அதிபர் 'இம்மாணவர்களைத் தாம் சேர்த்துக் கொள்வதாக கூறியதோடு மயக்கமும் அடைந்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதியமைச்சரும், அதிபரும் அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். எனினும் பிரதியமைச்சரின் இம்முயற்சி பல மட்டங்களினதும் அவதானத்திற்கு உள்ளாகியுள்ளது. என்றாலும் பிரதியமைச்சர் தேவரப்பெருமவின் இம்முயற்சியைக் கல்வி அமைச்சர் கடும் தொனியில் விமர்சித்துள்ளார்.

இருந்த போதிலும் நாட்டின் அரசியலமைப்பின் படி, இந்நாட்டில் பிறக்கின்ற ஒவ்வொரு பிள்ளைக்கும் கல்வி அடிப்படை உரிமையாகவுள்ளது. அந்த உரிமையை மீறும் வகையிலோ மறுக்கும் வகையிலோ சுற்றுநிருபங்கள் அமையலாகாது. இருந்தும் இந்த பத்து மாணவர்களின் விடயத்தில் இது தான் நடந்திருக்கின்றது.

அதுவும் பிரதியமைச்சர் தம் உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் குதிக்கும் வரைக்கும் இச்சுற்றறிக்கை வளைந்து கொடுக்கவில்லை. அப்படியென்றால் நாட்டின் அடிப்படை சட்ட ஆவணமான அரசியமைப்பை விடவும் சக்தி பெற்றதா சுற்றறிக்கை என்ற கேள்வியும் பல்வேறு மட்டங்களிலும் எழுந்துள்ளது.

இவை இவ்வாறிருக்க, பிரதியமைச்சரின் இம்முயற்சியின் மூலம் சில செய்திகள் சொல்லி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பிரதான செய்தி தான் ஒவ்வொரு பிள்ளையும் தாம் விரும்பும் பாடசாலையில் கல்வி கற்க இடமளிக்கப்பட வேண்டும் என்பதாகும்.

ஆகவே அதற்கேற்ப நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளதும் வளங்களும் வசதிகளும் அதிகரிக்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு மாத்திரமல்லாமல் தனியார் துறையினருக்கும், சமூக நலன் விரும்பிகளுக்கும் உள்ளது.

அதேநேரம் பிரதியமைச்சரின் இம்முயற்சியின் ஊடாகச் சொல்லி வைக்கப்பட்டிருக்கும் அடுத்த செய்தி தான் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் தேவைகளையும், அபிலாஷைகளையும் பெற்றுக் கொடுப்பதற்காக ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் அரப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அது அவர்களது பொறுப்பும் கடமையுமாகும்.

இதைவிடுத்து தேர்தலில் மக்கள் ஆணை தந்து விட்டார்கள். அத்தோடு எல்லாம் முடிந்தது என்ற தோரணையில் மக்களை மறந்து மக்கள் பிரதிநிதிகள் ஒருபோதும் செயற்படலாகாது. அது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு செயற்பாடுமல்ல.

தேவைப்படும் பட்சத்தில் தம் உயிரைத் தியாகம் செய்தாவது தாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் தேவைகளையும் அபிவிலாஷைகளையும் பெற்றுக் கொடுத்திட மக்கள் பிரதிநிதி தயாராக இருக்க வேண்டும்.

ஏனெனில் மக்கள் சேவை மகேஷன் சேவைக்கு ஒப்பானது. அதனால் மக்களின் வாக்குகளைப் பெற்று மக்கள் பிரதிநிதிகளாகும் ஒவ்வொரு பிரதிநிதியும் தம் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும். அதனையும் இந்த சம்வபவம் அழுத்திச் சொல்லி இருக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -