ஏஎம் றிகாஸ்-
கிழக்கு மாகாணத்தில் விவசாயம், கால்நடை மற்றும் மீன்பிடி போன்ற துறைகளில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஒரு பிரச்சினையைக் கூட ஒருநாளாவது இருந்து பேசித் தீர்க்க முடியாத அரசியல் தலைமைகள் எமக்குத் தேவையில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிழ் நஸீர் அகமட் தெரிவித்தார்.
ஏறாவூரில் நடைபெற்ற (இப்தார்) நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முதலமைச்சின் செயலாளர் யுஎல்ஏ அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர்கள் சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் திணைக்களத் தலைவர்கள் சமய சமூக மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களும் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் இங்கு பிரசன்னமாயிருந்தனர்.
முதலமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
கிழக்கு மாகாணத்தில் இன ஒற்றுமையை ஏற்படுத்தி நல்லாட்சியை நடார்த்துவதற்காக நாங்கள் பல தியாகங்களைச் செய்துகொண்டிருக்கிறோம். பல கஷ்டங்களை தாங்கிக்கொண்டு சவால்களைச் சமாளித்துக்கொண்டுள்ள இச்சூழ்நிலையில் அந்த உறவுகளை சீர்குலைக்கும் சதிகளும் இடம்பெறுகின்றன.
திட்டமிட்ட சதிகளால் பிரிக்கப்பட்ட, உயிரிழப்புக்களை சந்தித்து எத்தனையோ உடமைகளை இழந்த சமூகங்களை இணைக்கின்ற பொறுப்பு இந்த மாகாணத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தில் நல்லாட்சியை ஏற்படுத்துகின்றபோது எங்களுக்குள்ளும் எத்தனையோ கசப்புகள் பிரச்சினைகள் ஒவ்வொரு நாளும் வந்துகொண்டிருக்கின்றன. அதனையெல்லாம் புரிந்துணர்வுடன் தீர்க்கின்ற அரசியல் தலைமைகளாக நாங்கள் இருக்கின்றோம்.
13வது திருத்தச் சட்டத்தின் கீழ்உள்ள சகல அதிகாரங்களும் முழுமையாக மாகாணசபைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். அடுத்து வருகின்ற முதலமைச்சர் இந்த மாகாணத்தை தலை நிமிர்ந்து ஆழுகின்ற அமைச்சரவையாக மாற்றுகின்ற பொறுப்பை நாங்கள் நிச்சயமாக செய்துவிட்டுத்தான் செல்வோம்.
அதற்கு எந்த தடைவந்தாலும் அதனை உடைத்தெறிந்து மாகாணசபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஒட்டுமொத்த அதிகாரத்தையும் நாங்கள் பயன்படுத்துகின்ற ஒரு மாகாணசபையாக நாங்கள் கிழக்கு மாகாணசபையை மாற்றவிருக்கின்றோம்.
வடகிழக்கு மாகாணசபை இணைந்திருந்தபோது படையிலே இருந்த ஒருவர் அதிகாரத்திலிருந்து அதிகாரிகள் மூலமாக இந்த மாகாணம் ஆளப்பட்டது. அதற்காக இப்போது மக்கள் ஆணையைப் பெற்றுவந்துள்ள எம்மைப் புறக்கணித்து அதிகார துஷ்பிரயோகம் செய்வதை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
வடக்கு கிழக்கில் மாத்திரம் ஏன் இவ்வாறான அடக்குமுறை இருக்க வேண்டும் என கேள்வியெழுப்ப விரும்புகிறேன். வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. கிழக்கு மாகாணத்திலே இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் வேலைவாய்பின்றி திண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு எவ்வாறு வேலைவாயப்புக்களை ஏற்படுத்தலாம் என உழைத்துக்கொண்டிருக்கும் வேளையில் அதைத் தடுக்கின்ற எந்தவொரு அதிகார துஸ்பிரயோகத்தையும் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்னும் கேள்விக்குறியாகவே இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இதுகாலவரை பேச்சுவார்த்தைகள் மூலமாக இழுத்தடிப்புகள் செய்யப்பட்டு தீர்வு முயற்சிகள் முடக்கப்பட்டு எந்தவித தீர்வும் வராத பேச்சுவார்தைகளே நடைபெற்றன. அவ்வாறான சூழ்நிலை இன்னும் தொடரக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.