இடைக்கால நிவாரணம் முற்போக்கு கூட்டணியின் இடைக்கால வெற்றி - மனோ கணேசன்



1992ம் ஆண்டு, கூட்டு ஒப்பந்தம் அமுலுக்கு வந்த பிறகு, தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசு ஒருபோதும் தலையிடுவது இல்லை. இந்த 1000 மில்லியன் ரூபாவை திறைசேரியிலிருந்து பெற்றதன் மூலம், முதன்முறையாக, அரசை தோட்ட தொழிலாளர் சம்பள விடயத்தில் இழுத்து விட்டுள்ளோம். இது எமது முதலாவது, கொள்கை வெற்றி.

அடுத்தது, மாதம் ரூ.2500/= என்று, வேலை செய்த ஒரு நாளுக்கு, ரூ.100/= என்று, ரூ.620/= என்ற நாள் சம்பளத்தை ரூ. 720/= ஆக உயர்த்தி, இந்த தொகையை அடையாளப்படுத்தி உள்ளோம். இனி எந்த ஒப்பந்தத்தின் மூலமும் வரும், நாட்சம்பள தொகை, இந்த தொகைக்கு அதிகமாகவே இருக்க வேண்டும். இது எமது இரண்டாவது கொள்கை வெற்றி.

இதையடுத்து இனி கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு எந்த தடையும் கிடையாது. அதுபோல் பெருந்தோட்ட முகாமை நிறுவனங்கள் மாற்று யோசனைகளை முன்வைக்கலாம். அவற்றை பற்றியும் இனி பேசலாம். அதற்கும் எந்தவித தடையும் இல்லை என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அரச கரும மொழிகள் அமைச்சு கேட்போர் கூடத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஊடக மாநாடு இன்று மாலை நடைபெற்றது. அமைச்சர்கள் மனோ கணேசன், பழனி திகாம்பரம், வி. ராதாகிருஷ்ணன், திலகராஜ் எம்பி, கூட்டணி உதவி செயலாளர் சண் பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன் கூறியதாவது,

இந்த இடைக்கால நிவாரண தொகை கிடைக்கவே கிடைக்காது என்று பிரச்சாரம் செய்து, 1000ரூபாய் நாட்சம்பளத்தை, வாங்கி தருவேன் என்று சூளுரைத்து, பின் கடந்த ஆறு மாதமாக,பாராளுமன்றத்தில் விடுமுறை பெற்று காணாமல் போய் இருந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன், இப்போது திடீரென்று தூக்கத்தில் இருந்து எழுந்து வந்து, இந்த ரூ.2,500வை,பெற்றுக்கொடுத்தமைக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி சொல்கிறாராம். அதாவது,இந்த நிவாரணத்தொகை பெற்று தந்தது, பிரதமராம். தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு இதில் சம்பந்தம் எதுவும் இல்லையாம். முன்னாள் அமைச்சர் ஆறுமுகத்தின், இந்த அரசியல் காழ்ப்புணர்ச்சி கருத்தை கேட்டு பிரதமருக்கே நேற்று சிரிப்பு வந்து விட்டது.

மத்திய கொழும்பில் சத்தியாகிரகம் செய்தோம். அமைச்சராக இருந்துகொண்டு ஏன் போராடுகிறீர்கள்? என்றார்கள். உள்ளே, வெளியே எங்கே இருந்தாலும், நாம் தமிழர்கள்,எதையும் போராடிதான் பெறனும் என்றோம். சிலரை சேர்த்துக்கொண்டு, எங்கள் போராட்டத்தை, "செல்பி போராட்டம்" என்று கொச்சைப்படுத்தினார்கள். இது 2016ம ஆண்டின் நவீன யுகம். புதுயுக "செல்பி" எங்கள் போராட்டத்தை "பேசுபொருள்" ஆக்கியதே என்றோம்.

அமைச்சர்கள் திகாம்பரம், ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து பிரதமர் ரணில்,அமைச்சர்கள் மலிக் சமரவிக்கிரம, ரவி கருணாநாயக்க, ஜோன் செனவிரத்ன, நவீன் திசாநாயக்க மற்றும் தோட்ட முகாமையாளர்கள் என்று வரிசையாக, பேசி, விவாதம் செய்து, சண்டையிட்டு,போராடி, ஒவ்வொரு அமைச்சரவை கூட்டத்திலும் குரல் எழுப்பி, இந்த நிவாரண தொகையை நாம் பெற்றுள்ளோம். எனவே இந்த இடைக்கால நிவாரணம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இடைக்கால வெற்றி.

இது இடைக்கால நிவாரணம்தான். நிரந்தர சம்பளம் அல்ல. இதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். இதுபற்றி எவரும் எமக்கு சொல்லித்தர வேண்டியது இல்லை. ஆனால், நான் சொன்னதுபோல், நிரந்தர சம்பள தொகைக்கு இது ஒரு அடையாளம். அதாவது, அந்த நிரந்தர சம்பள தொகை, ரூ. 720/=க்கு அதிகமாக அமைய வேண்டும் என்ற நிலைமையை இது இன்று ஏற்படுத்தியுள்ளது.

கூட்டு ஒப்பந்தம், கடந்த வருடம் மார்ச் மாதம் காலாவதியாகி இன்றுடன் பதினாறு மாதங்கள் ஆகிவிட்டன. இந்த பதினாறு மாதங்களில் பெரும்பாலும் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் நாட்டிலேயே இருக்கவில்லை. இப்போது திடீரென தோன்றி ஏதேதோ பேசுகிறார். இவர் கூட்டு ஒப்பந்தத்தை குத்தகைக்கு எடுத்துக்கொண்டுள்ளார். தனக்கு மட்டுமே சம்பளத்தை வாங்கி தர முடியும் என்கிறார். இப்படி சொல்லி சொல்லியே பதினாறு மாதங்களை இவர் கடத்தி விட்டார். இப்படியே விட்டால், மீண்டும் ஒருமுறை விடுமுறை எடுத்துக்கொண்டு காணாமல் போய், அடுத்த பதினாறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஒருமுறை தோன்றி, இன்று பேசுவதையே, மீண்டும் ஒருமுறை பேசுவார்.

முன்னாள் அமைச்சர் ஆறுமுகன், தனது அரசியல் காழ்ப்புணர்ச்சி நிலைப்பாடுகளையும், வாய் சவடால்களையும் நிறுத்திவிட்டு, இனியும் நாட்களை இழுத்துக்கொண்டு கண்ணாம்பூச்சி காட்டாமல், நாட்டில் இருந்து, கூட்டு ஒப்பந்த பேச்சுகளை நடத்தி, ரூ.720க்கு அதிகமான ஒரு சம்பள தொகையை பேசி தீர்மானிக்க வேண்டும்.

கூட்டு ஒப்பந்த பேச்சு நடத்த, அந்த பேச்சுவார்த்தைகளை நடத்தும் மூன்று தொழிற்சங்க அமைப்புகளுக்கும், முற்போக்கு கூட்டணி, அரசியல் தொழிற்சங்க பேதங்களை மறந்துவிட்டு,முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். நாங்கள் இந்த பேச்சுகளை குழப்புகிறோம் என்று அரசியல் நோக்கில் பொய் பேசி தங்கள் இயலாமையை மூடி மறைக்க வேண்டாம் என சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நாம் கூறுகிறோம்.

அதேபோல் தோட்ட முகாமை நிறுவனங்களும், நேர்மையுடன் செயற்பட வேண்டும். உருப்படியான சம்பளம் தர முடியாவிட்டால், மாற்று யோசனைகளை அவர்கள் முன்வைக்க வேண்டும். தற்போது எமது எம்பி திலகராஜ், சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் இத்தகைய மாற்று யோசனை தொடர்பான பேச்சுகளை நடத்த முற்போக்கு கூட்டணியினால் நியமிக்கப்பட்டுள்ளார். தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மனிதாபிமானத்துடன் அணுக முடியாவிட்டால்,கம்பனிகள் தோட்டங்களைவிட்டு வெளியேற வேண்டும். தோட்ட காணிகளை சிறு தோட்டங்களாக தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு பிரித்து கொடுக்கும்படி நாம் அரசுக்குள் யோசனை முன்வைப்போம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -