பிரமுகர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்திகள்...!!

இன நல்லிணக்கத்துக்கான நாளாக மாற்றுவோம்! பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லாஹ்

புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்கள் ஈத்முபாறக்!, இத்திருநாளை இன நல்லிணக்கத்துக்கான முன்னுதாரண நாளாக மாற்ற முஸ்லிம்கள் முயற்சிக்க வேண்டும். அதேவேளை, எமக்கு எதிராக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் சதிகளை முறியடிப்பதற்கு விசேட துஆ பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்தார். 

நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- 

புனித அல்குர்ஆன் உபதேசித்துள்ளது போன்று முஸ்லிம்கள் எவ்வாறான சூழ் நிலையிலும் பொருமையைக் கடைப்பிடிக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு சக்திகள் மும்முரமாக செயற்பட்டு வருகின்ற இக்காலப்பகுதியில் நாங்கள் மிகவும் கவனமாகவும், சமயோசிதமாகவும் செயற்பட வேண்டியுள்ளது. 

சமகாலத்தில் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் முஸ்லிம்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இதற்கான தீர்வினை துஆக்கள் மூலம் பெற்றுக்கொள்ள ஈதுல் பித்ர் புனித நாளில் விசேட துஆப்பிராத்தனைகளிலும் முஸ்லிம்கள் ஈடுபட வேண்டும். 

குறிப்பாக ஒற்றுமை, நல்லிணக்கம், நிலையான சமாதானம், நாட்டின் அபிவிருத்தி போன்றவற்றுக்காகவும் முஸ்லிம்கள் பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும். 

பெருநாள் கொண்டாட்டங்கள் பிறமத சகோதரர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு மேற்கொள்ளும் அதேவேளை, நல்லிணக்கம் - புரிந்துணர்வுக்கான நாளாக அதனை அமைத்துக் கொள்ளவும் நாங்கள் முயற்சிக்க வேண்டும். 

வடகிழக்கு மாகாணத்துக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்கள் மிகவும் இக்கட்டான சூழலிளே தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் தமது பெருநாள் கொண்டாட்டங்களை கவனமாக மேற்கொள்ளும் அதேவேளை, பிற மத சகோதரர்களையும் அதில் இணைத்துக் கொள்கின்றமையினால் நல்லிணக்கம் ஏற்பட வழியமைக்கும். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் நிர்வாகம், அமைப்புக்கள், இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டும். – என அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



'ஈதுப் பெருநாள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தட்டும்' பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அ.அஸ்மின்
எம்.எல்.லாபிர்-

இன்றைய தினம் ஈதுல் பித்ர் புனித ஈகைத் திருநாளைக் கொண்டாடுகின்ற அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் எனது ஈகைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். 'ஈத் முபாரக்' புனித றமழான் மாதத்தை அனுஷ்டித்து, 30 நாட்கள் நோன்பிருந்து அல்லாஹ்வின் அருளைச் சுமந்த மக்களாக இன்றையதினம் நாம் எல்லோரும் மனமகிழ்வோடு பெருநாளைக் கொண்டாடுகின்றோம். இப்புனித மாதத்தில் எமது செயற்பாடுகளை எமது இரட்சகன் அல்லாஹ்விற்கு ஏற்ற விதத்தில் அவன் பணித்த அமைப்பில் நாம் கழித்திருக்கின்றோம்; இந்தப் பயிற்சியை இனிவரும் காலங்களிலும் நாம் தொடரவேண்டும், அதன் மூலம் ஒழுக்கசீலர்களாக, அல்லாஹ்வின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றவர்களாக எம்மால் வாழ முடியும்; எனவே முஸ்லிம்களாகிய நாம் இவ்விடயத்தை மனதில் ஆழமாக இருத்திக்கொள்வோமாக. என தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் வடக்கு மாகாணசபை உறுப்பினரும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்  பிரதிநிதியுமாகிய கௌரவ.அ.அஸ்மின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்,

மேலும் அவரது வாழ்த்துச் செய்தியில்,

இப்புனித றமழான் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் வடக்கு மாகாணத்தின் பள்ளிவாயல்களும், உலமாக்களும் மிகவும் சிறப்பான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள், அவர்களுக்கு மக்கள்சார்பாக எனது பெருநாள்வாழ்த்துக்களையும் நன்றியறிதல்களையும் வெளிப்படுத்துகின்றேன்.

அடுத்து குறிப்பாக இம்மாதத்தில் எமது வடக்கு மாகாண முஸ்லிம்கள் நன்மையடையும் விதத்தில் முஸ்லிம் கலாசாரத் திணைக்களம், மற்றும் பல்வேறு முஸ்லிம் தொண்டு நிறுவனங்கள், கொடைவள்ளல்கள் இப்தார் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தார்கள்இ பேரீச்சம்பழ விநியோகங்களை மேற்கொண்டிருந்தார்கள், ஸகாத் ஸதக்கா தானதர்மங்களை விநியோகித்திருந்தார்கள், இவர்கள் அனைவருக்கும் வடக்கு மாகாண முஸ்லிம் மக்கள் சார்பாக எனது பெருநாள்வாழ்த்துக்களையும் நன்றியறிதல்களை முன்வைக்கின்றேன்.

எமது சகோதர மக்களும் நல்லிணக்க நோக்கில் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்ததோடு இப்தார் நிகழ்வுகளில் பங்கேற்று சிறப்பித்திருந்தார்கள், அவ்வாறான நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்த சர்வடமதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மற்றும் அரச உத்தியோகத்தர்கள், தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியறிதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேபோன்று அமெரிக்க தூதரகத்தின் அனுசரணையோடு யாழ்நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வுகளிற்காக அமெரிக்க தூதுவர் அவர்களுக்கும் தூதரக அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியறிதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்றைய இனிய நாள் எம் எலோரது உள்ளங்களிலும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நாளாக அமையவேண்டும் என்றும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபடவும் ,மதக்கடமைகளை சுதந்திரமாக செய்வதுக்கும் பொருளாதாரவிருத்திக்கும் இப் புனித நோன்புப் பெருநாளில் இறைவனிடம் பிராத்திப்போம். 


அல்லாஹ்வின் கட்டளைப்படி ஒரு மாத கால நோன்பினை பூர்த்திசெய்து உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளாம் (ஈதுல் பித்ர்) ஈகைத் திருநாளை கொண்டாடி மகிழ்கின்ற இவ்வேளையில் ஈகைத் திருநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

முஸ்லிம்களின் ஒற்றுமை யினை குலைத்து எமது சமுதாயத்தினை பாரிய அழிவுப் பாதையை நோக்கி வழி நடத்த பல சதித் திட்டங்கள் அரங்கேற்றப்படுகின்ற இவ்வேளையில் நாம் நமக்குள் பிளவுகளை ஏற் படுத்திக் கொள்ளாமல் ஒரு தலைமையின் கீழ் செயற்படுவதட்க்கும், எமது நாட்டில் முஸ்லிம்களாகிய நாம் மதக்கடமைகளை சுதந்திரமாக செய்வதுக்கும் எமது பொருளாதாரவிருத்திக்கும் இப் புனித நோன்புப் பெருநாளில் இறைவனிடம் பிராத்திப்போம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மேல் மாகாண சபை கௌரவ உறுப்பினர் அர்சாத் நிஸாம்தீன் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார் மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது 

நாட்டில் நல்லாட்சி தோற்றுவிக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக இன மத வேறுபாடின்றி சகஜமாக பழகக் கூடிய இந்த சந்தர்ப்பத்தில் சில கடும்போக்கு பேரினவாத அரசியல்வாதிகளும் பொதுபல சேனா போன்ற பேரினவாதக் குழுக்களும் முஸ்லிம் சிங்கள மக்களிடையே பிளவினை ஏற்படுத்தி நாட்டில் மீண்டுமொரு அமைதியற்ற சூழலை உருவாக்க முற்படுகின்றனர் , இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களாகிய நாங்கள் திருக் குர்ஆனும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களும் வலியுறுத்தும் சமத்துவம், சமாதான, சகவாழ்வு, சகிப்புத்தன்மை ஜனநாயக விழுமியம் என்பவற்றை வாழ்வில் கடைப்பிடித்து நடப்பதுடன் , 

இன்று முஸ்லிம்களின் ஒற்றுமை யினை குலைத்து எமது சமுதாயத்தினை பாரிய அழிவுப் பாதையை நோக்கி வழி நடத்த பல சதித் திட்டங்கள் அரங்கேற்றப்படுகின்ற இவ் வேளை யில் நாம் நமக்குள் பிளவுகளை ஏற் படுத்திக் கொள்ளாமல் ஒரு தலைமையின் கீழ் செயற்படுவதட்க்கும், எமது நாட்டில் முஸ்லிம்களாகிய நாம் மதக்கடமைகளை சுதந்திரமாக செய்வதுக்கும் ,அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அணர்த்தத்தினால் தாங்கள் சிறுக சிறுக சேகரித்த சொத்துக்களை இழந்து இன்னலுறும் எமது சகோதர மற்றும் சகோதரிகளினதும் ,ஆதரவற்றோர் மற்றும் ஏழ்மையில் வாழும் எமது சொந்தங்களின் பொருளாதார விருத்திக்கும் பிராத்திப்பதோடு அவர்களுக்கு தங்களான உதவிகளை செய்ய இந் நந்நாளில் உறுதி பூணுவோம் 

மேலும் உள்நாட்டில் அகதிகளாக்கப்பட்டு அல்லலுறும் எமது வடக்கு வாழ் முஸ்லிம்கள் , வெளிநாடுகளில் மனிதாபிமான அவஸ்த்தைகளை எதிர்கொண்டுள்ள அனைத்து மக்களுக்காகவும் அவர்களது விடுதலைக்காகவும் , குறிப்பாக பலஸ்தீன் மற்றும் சிரியா போன்ற நாடுகளில் அரங்கேறும் அடக்குமுறைகள் உடனடியாக முடிவுக்கு வருவதற்காகவும் உலக முஸ்லிம்களின் துன்பங்களை நீக்கி அவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை வழங்க அல்லாஹ்வின் அருளை வேண்டி இந் நன்னாளில் பிரார்த்திப்போமாக.

எனது சகோதர சகோதரிகள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்த நிம்மதியான எதிர்காலத்தினை வழங்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துககொள்கிறேன்.

புனித ரமழான் சகோதரத்துவம், சமத்துவம் வலுப்பெற வழி செய்யட்டும் 

ரமழான் பிறை தென்பட்டதிலிருந்து சகோதர முஸ்லிம் மக்கள் உண்ணாவிரதம் இருந்து புனித நோன்பை கடைபிடித்து வந்தனர். அந்த நோன்பின் பயன் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் கிடைக்க வேண்டும் என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தனது ரமழான் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

இந்த புனித நாளில் நம்மிடையே சகோதரத்துவம் மேலும் வலுப்பெற்று சமுதாய ஒற்றுமை நீடித்து நிலைக்க வாழ்த்துகிறேன். இலங்கை வாழ் முஸ்லிம்கள் கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து நல்லாட்சியில் புது நம்பிக்கையுடன் ரமழான் பண்டிகையை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கின்றது. 

இந்த நோன்பு பெருநாள் மனிதன் தன் ஐம்புலன்களையும் அடக்கி, மனதை ஒருநிலைபடுத்தி, ஆன்மாவுடன் லயித்து வாழும் பக்குவத்தை வெளிப்படுத்துகின்றது. கோபம், போட்டி, பொறாமை போன்ற தீய எண்ணங்கள் மனதிலிருந்து விலகி சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும், ஒருமைப்பாட்டுடனும் சக மனிதர்களோடு, சக சமூகத்தினரோடும் வாழ்வதற்கான நன்நெறிகளை போதிக்கின்றது. இந்நாளின் உன்னதத்தை போற்றும் வழியாக சகலமே வாழ வேண்டும். அதன் மூலமாகவே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி

ஜே .எம் .வஸீர்

அல்லாஹூத்தஆலாவின் அருள்  நிறையவே கிடைக்கப்பெறுவதுவும், பாவமன்னிப்புகள் ஏற்றுக் கொள்ளப்படுவதுமான மாதம் ரமழான் மாதமாகும். இதனால் கடந்து சென்ற மாதத்தில் இந்நாட்டில் மாத்திரமன்றி உலகம் முழுவதுவும் செறிந்து வாழும் முஸ்லிம் உடன்பிறப்புகள் நோன்பு நோற்று இராப்பகலாக நின்று வணங்கி அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புத் தேடியும் அல்லாஹ்வின் அருளை வேண்டியும் செயற்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் அம்மக்கள் இன்றைய தினம் ஈதுல்பித்ர் ஈகைத்திருநாளைக் கொண்டாடி அல்லாஹ்வுக்கு சுக்ர் செய்கின்றனர். அம்மக்களுக்காய் எனது உளம் கனிந்த நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மனநிறைவும் மட்டில்லா மகிழ்ச்சியும் அடைகின்றேன். எல்லாம் வல்ல அல்லாஹ்வையும் புகழ்கின்றேன். 

பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில் எல்லா இன மக்களும் ஒற்றுமையோடும் நிம்மதியோடும் வாழ்வதற்கும் ஏனைய இன மக்கள் முஸ்லிம்களைப் புரிந்து கொண்டும் மேலும் அவர்களோடும் நல்லுறவு ஏற்படவும் பிரார்த்திப்பதோடு இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த முனையும் தீய சக்திகளின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கும் எல்லாம் வல்ல இறைவனை இந்நன்நாளில் பிரார்த்திப்போமாக. ஆமீன்.

முஸ்லிம் நாடுகளில் இஸ்லாத்தின் விரோத சக்திகளால் திட்டமிட்ட பிரிவினைகள் தோற்றுவிக்கப்பட்டு யுத்த சூழ்நிலையிலும் நமது முஸ்லிம் உம்மத்துகள் இன்றைய தினத்திற்கு முகம் கொடுக்கின்றனர். அவர்கள் வாழ்விலும் நிலையான விடிவு ஏற்பட புனிதமிக்க இந்நன்நாளில் நாம் அனைவரும் இருகரமேந்தி பிரார்த்திப்போமாக. 

நோன்பு நோற்று நிறைவான தியாகங்களின் பின் வந்திருக்கும் நோன்புப் பெருநாளை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். அதில் இந்துக்களும், பௌத்தர்களும் இணைந்திருப்பதை விரும்புவோம். இஸ்லாமிய சிறந்த முன்மாதிரிகளினால்தான் நாம் மற்றையவரை வென்றெடுக்க முடியும். ஆழகிய இலங்கைத் திருநாட்டில் அன்புரவாழ இப்பெருநாள் வழிகாட்டட்டும். 


சகல சமூகங்களுடன் ஒற்றுமையும் அன்பையும் பகிர்ந்து கொள்ளத் திடசங்கற்பம் பூண வேண்டும் என புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் -பிரதி அமைச்சர் பைசால் காசீம் 

எம்.எம்.ஜபீர்-

புனித நோன்புப் பெருநாளில் சகல சமூகங்களுடன் ஒற்றுமையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதுடன், புரிந்துணர்வையும் ஏற்படுத்திக் கொள்ளத் திடசங்கற்பம் பூண வேண்டும் என  சுகாதார போசணை மற்றும் சுதேச மருத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசீம் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். 

அவர் தெரிவித்துள்ள பெருநாள் வாழ்த்துச்செய்தியில், ஒரு மாதம் நாம் பசித்திருந்து இறை வணக்கத்தில் ஈடுபட்டது போல், இன்று கொண்டாடும் பெருநாள் தினத்திலும் இறைவனுக்குப் பொருத்தமில்லாத செயற்பாடுகளில் ஈடுபடாமலும் குடும்பத்தார் மற்றும் அயலவர்கள், சக சமூகத்தவர்களுடனும் மிகவும் அந்நியோன்னியமாகவும் ஒற்றுமையகவும் நடந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒவ்வொரு முஸ்லிமும் அயலவர்களை அவதானித்து அவர்களோடு ஒன்றிணைந்து ஒற்றுமையாக தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் நோன்பின் முழு பலனும் நமக்குக் கிடைக்கும். உற்றார் உறவினரோடும் அயலவர்களோடும் இணைந்து கொண்டாடும் பெருநாள் சிறப்புற்று விளங்கவும். இலங்கை வாழ் முஸ்லீம்களுக்கும், உலகில் வாழும் முஸ்லிம்களுக்கும் புனித நேன்புப் பெருநாள்  சிறப்பாக அமைய பிராத்திப்போம்.

இந்நாடு மூவின மக்களுடைய நாடு. இன, மத பேதங்களை மறந்து நாம் ஒன்றுபடுவதன் மூலம் தான் இந்த நாட்டை எம்மால் அபிவிருத்தி செய்ய முடியும் என மேலும் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

மனித விழுமியங்களின் அடிப்படையில்  இப்பெருநாளை கொண்டடுவோம் என கிழக்கு ம.ச.உ ஐ.எல்.எம்.மாஹிர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் 

எம்.எம்.ஜபீர்-

இந்தநன்நாளில்  சமாதனம், புரிந்துனர்வு, அன்பு, விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை ஆகிய மனித விழுமியங்களின் அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த அழகிய வழிமுறையில் இப்பெருநாளை கொண்டடுவோம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் விடுத்துள்ள புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இன்றைய பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்திருந்து, குளித்து புத்தாடையணிந்து,நறுமணம் பூசி, இன்சுவை உணவுகள் உண்டு பின்னர் பள்ளிவாசல்களிலே ஒன்று கூடி தக்பீர் முழக்கம் செய்து இறைவனைப் புகழ்ந்து நன்றி செலுத்தி மகிழ்வர். பள்ளிவாசல்களிலே தமது சகோதார்கள், உறவினர்களுடன் தோளோடு தோள் சேர்த்து நின்று பெருநாள் தொழுகை தொழுதுஇ பின்னர் ஒருவரோடு ஒருவர் கட்டித் தழுவி தமது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்வர்கள். 

இந்த புனிதமான நோன்புப் பெருநாளை கொண்டடும் இலங்கை வாழ் மக்கள், வெளிநாடுகளில் தொழில் புரியும் எமது சகோதரர்களுக்கும் மற்றும்  உலகில் வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கு  இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மன மகிழ்ச்சியடைகின்றேன்.

பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த மகிழ்ச்சிகரமான நாளில் நோன்பு கற்றுத் தந்த இனிய போதனைகளை என்றும் நம் மனதில் நிறுத்தி நம் வாழ் நாள் முழுவதும் அதன்படி நடக்க இறைவனிடம் இந்நன்நாளில் பிராத்திப்போம் என மேலும் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்தி

அல்லாஹ்வின் உதவியால்  இபாதத்துக்கள்  நிறைந்த  புனித ரமழான் மாதம் நிறைவுற்று உலகில் பல நாடுகளில் வாழ்ந்து வரும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நழ்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

முஸ்லிம்கள் அனைவரும் சந்தோசமாக இப்பெருநாளை கொண்டாடும் இந்த சந்தோசத்தை தந்த அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லி நம் எல்லோருடைய உடல் ஆரோக்கியத்துக்காகவும், அனைத்து  முஸ்லிம்களின்   பாதுகாப்புக்காகவும்   எம்மை   படைத்த  அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக.

நம்நாட்டை பொருத்தவரை அன்மையில் ஏற்பட்ட  வெள்ளம் மற்றும் மண்சரிவுகளின் இயற்கை சீற்றத்தினால் இந்த வருட நோன்புப் பெருநாளை மிக சந்தோசமாக கொண்டாட முடியாமலும், உலகில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் இயற்கை அனர்த்தம் மற்றும் உள்நாட்டு யுத்ததினால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்களோ எம்சகோதர உள்ளங்கள் அனைவருக்காகவும் இத்தருணத்தில் அல்லாஹ்விடம் அனைவரும் கையேந்தி துஆ செய்வோமாக. 

இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக எமது நாட்டின் ஏனைய இனங்கள் மற்றும் சமயங்களைச் சேர்ந்த மக்களுடன் மிகவும் ஐக்கியமாக வாழ்ந்து வரும் இத்தருனத்தில்  நாட்டில் இன்று நிலவும் அமைதியான சூழ்நிலை சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் உதவும் வகையில் இந்த நிலைமை மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். என தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
 
எஸ்.அஷ்ரப்கான். அப்துல் கபூர்-
 
பகல் முழுவதும் பசித்திருந்து, இரவு முழுவதும் நின்று வணங்கி பாவங்களைக் கரியாக்கி, பகமைகளை வெறுத்து உறவுகளுடன் ஒன்றிணைந்த புனித மாதம் எம்மைவிட்டுப் பிரிந்து அந்த மாதத்தின் அறுவடை நாளான ஈகைத் திருநாள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் இன்று பயங்கரவாதமும், இனவாதமும் தோற்கடிக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக இன, மத வேறுபாடின்றி அந்நியோன்யமாக பழகக்கூடிய இச்சந்தர்ப்பத்தில் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் இப்பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்று நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சியில் இனங்களுக்கிடையே நல்லுறவு பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் சில பேரினவாதக் குழுக்கள் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி நாட்டில் மீண்டும் ஒரு அமைதியற்ற சூழலை உருவாக்க முற்படுகின்றனர். இதற்கு முஸ்லிம்கள் இடங்கொடுக்காது பொறுமை காக்க வேண்டுகின்றேன்.

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களின் போது நாட்டின் எல்லாப் பாகங்களிலிருந்தும் இன,மத வேறுபாடின்றி உதவிக்கரங்கள் நீண்டப்பட்டன. இதன் மூலம் நாட்டு மக்களிடையே இனவாதம், மத வாதம் இல்லை என்பதை இந்த இனவாதக் குழுக்களுக்கு மக்கள் உணர்த்தியுள்ளனர்.

முஸ்லிம்கள் எமது நாட்டில் மதக் கடமைகளையும், போதனைகளையும் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இப்புனித நோன்புப் பெருநாளில் அனைவரும் இறைவனிடம் இரு கரம் ஏந்திப் பிரார்த்திப்போமாக எனவும் குறிப்பிட்டுள்ளார்.



அனைத்து இன மக்களும் சகோதர வாஞ்சையுடனும் வாழ இவ்வருட நோன்புப் பெருநாள் தினத்தில்; பிரார்த்திப்போம்
கி.மா.ச.உறுப்பினர் ஆரிப் சம்சுடீன்
 
அப்துல் கபூர் ஆதம்-

இந்நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன மக்களும் சகோதர வாஞ்சையுடனும் ஒற்றுமையுடனும் வாழ இவ்வருட நோன்புப் பெருநாள் தினத்தில்; பிரார்த்திப்போம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமாகிய ஆரிப் சம்சுடீன் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

இந்நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியினை பேரினவாதம் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்திக் கொண்டிருப்பது இந்த நல்லாட்சியிலும் தொடர்கிறது என்பது கவலைக்குரியது. அடக்குமுறைகளை கட்டவிழத்துவிட்டு முஸ்லிம்களின் இருப்பை இந்நாட்டில் கேள்விக்குறியாக்குவதற்கு இப்பேரினவாத சக்திகள் அனைத்து கைங்கரியங்களையும் புரிந்து வருவது நாமனைவரும் புரிந்த விடயமாகும்.

முஸ்லிம் சமூகத்தின் தரப்பினால் மேற்கொள்ளப்படும் சிறு சிறு விடயங்களைக் கூட தங்களுக்குச் சாதகமான ஊடகங்களின் வாயிலாக பெரும்பான்மை சமூகத்தவர்கள் மத்தியில் பிழையானதொரு தோற்றப்பாட்டினை உண்டு பண்ணுவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் இச்சக்திகள் அரவு பகலாக செயற்பட்டு கொண்டிருக்கின்றது.

முஸ்லிம்களினதும் இஸ்லாத்தினதும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு முஸ்லிம்களைக் கொண்டே  முஸ்லிம்களை அழிப்பதற்கு சர்வதேச பயங்கார வாதம் முனைப்புக்காட்டி அதில் வெற்றியும் கண்டுள்ளது. அரபுலகில் தினமும் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டும்; அங்கவீனமாக்கப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் அகதிகளாக்கப்பட்டும் கொண்டிருக்கிறார்கள்.

சர்வதேச பயங்கரவாதம் முஸ்லிம்களை அழிப்பதற்கு பயன்படுத்தும் முதல் ஆயுதம்தான் கொள்கை ரீதியாக முஸ்லிம்களைப் பிரித்தாழச் செய்வதாகும். இவ்வாறானதொரு நிலையை இலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியிலும் ஏற்படுத்துவதற்கு முஸ்லிம்களுக்கு எதிரான சர்வதேச பயங்கரவாதம் தமது அனைத்து சக்தியையும் பயன்படுத்த முனைவதை சிற்சில சம்பவங்களை அவதானிக்கும் போது புரிந்து கொள்ள முடிகின்றது.

இவ்வாறான நிலையில் ஒரு மாத கால நோன்பை நிறைவு செய்த பின் இந்நாட்டிலும் உலகளவிலும் வாழும் முஸ்லிம்கள் இவ் ஈகைத் திருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாதத்தின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டுமாயின் முஸ்லிம்களிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும். பொறுமையுடனும் நிதானத்துடனும் ஒற்றுமையுடன் வாழ்ந்து நமது கௌரவத்தை இந்த மண்ணில் காப்பாற்ற நாமனைவரும் மிகபக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

தொழுகையின்போது நாம் கடைப்பிடிக்கின்ற ஒற்றுமையையும் தலைமைத்துவ பின்பற்றுதலையும் நமது சகல நடவடிக்கைகளிலும் பேணி ஒழுக வேண்டும். புனித நோன்பு நமக்கு பல்வேறு விடயங்களைக் கற்றுத்தந்துள்ளது. ரமழான் மாதத்தில் கற்றுக்கொண்டதை ரமழானுடன் விட்டு விடாது வாழ்நாள் முழுதும் அவற்றை கடை பிடிக்க வேண்டும். அவ்வாறு கடைபிடித்;து வாழும் போதுதான் நமது ரூடவ்ருலக வாழ்க்கையிலும் வெற்றியடைவதோடு முஸ்லிம்களை நெருக்கடிக்குள் தள்ளி அதன் மூலம் தமது இலக்கை அடைந்துகொள்ள முயலும் பேரினவாதத்தின் கனவுகள் கலையும்.

இந்நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் நிம்மதியாக வாழவே விரும்புகின்றனர். ஆனால் அந்த மக்களின் விருப்புத்துக்கு எதிராக ஒரு சிலர் செயற்பட்டு வருகின்றனர்.

இன ஒற்றுமையையும் புரந்துணர்வையும் சுபிட்சத்தையும் விரும்பாதவர்களே இனங்களுக்கிடையில் பகைமையைத் தோற்றுவிக்கும் வகையில் தேவையற்ற தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் அக்கிரமங்கள் தொடர்ந்து நிலைக்காது. இவ்வக்கிரமக்காரர்களின் அக்கிரமங்கள் ஒழிந்து இந்;நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் சகோதர வாஞ்சையுடனும் இன ஐக்கியத்துடனும் இறைமையுடனும் வாழ இவ் ஈகைத் திருநாளில் பிரார்த்திப்பதோடு இப்பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்

நோன்பு பயிற்றுவித்த  இறையச்சம் மூலம் முஸ்லிம்கள் தேசிய ஐக்கியத்திற்காக புரிந்துணர்வுடன் செயற்படுவர்;  முன்னாள் கல்முனை பிரதி மேயர் அப்துல் மஜீட்

அப்துல் கபூர் ஆதம்-

உலக முஸ்லிம்களின் இறை வேதமான புனித அல்-குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழிகாட்டியாக இறக்கியருளப்பட்ட புனித றமழான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருந்து பெற்ற தக்வாவின் (இறையச்சம்) மூலம் இந்த நாட்டு முஸ்லிம்கள் தேசிய ஐக்கியத்திற்காக ஏனைய சமூகத்தவர்களுடன் என்றும் புரிந்துணர்வுடன் செயற்படுவர் என முன்னாள் கல்முனை மாநகர பிரதிமேயர் அப்துல் மஜீட் விடுத்துள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

புனித நோன்புப் பெருநாள் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,

புனித றமழான் மாதம் முழுவதும் நோன்பிருந்து எல்லாம் வல்ல இறைவனின் அருளைப்பெற்று மிக சந்தோசமாக இத்தினத்தில் பெருநாளை கொண்டாடுகின்ற முஸ்லிம்கள் அனைவருக்கும் தனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நமது நாடு ஒரு பல்லின கலாச்சாரத்தினை கொண்டமைந்த நாடு என்ற அடிப்படையில் புனித றமழான் மாதம் முழுவதும் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பினை ஒரு சில இடைஞ்சல்களுக்கு மத்தியிலும் சிறப்பாக நிறைவேற்றிக் கொள்ளுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நல்லாட்சி அரசினை ஏற்படுத்துவதில் முன்னின்று உழைத்த இந்நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் நியாயபூர்வமான உரிமைகளினை எவ்வித மனக்கசப்புமில்லாமல் அவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு இவ் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்புனித பெருநாள் தினத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.

இஸ்லாம் கற்றுத்தந்த இறையச்சம் புரிந்துணர்வு ஐக்கியம் சகவாழ்வு என்பனவற்றை எமது வாழ் நாள் முழுவதும் கடைப்பிடித்து எமது சமூகத்தின் விடுதலைக்காக எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்குமாறு இப்புனித பெருநாள் தினத்தில் கேட்டுக் கொள்கின்றேன் என முன்னாள் கல்முனை மாநகர பிரதிமேயர் அப்துல் மஜீட் விடுத்துள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பெருநாள் வாழ்த்துச் செய்தி,  உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்  தலைவர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

ரமழானின் பயிற்சிகளை நினைவுகூர்ந்து அதன் பயன்களை அனுபவிக்கத் துவங்கும் இந்நாளில் நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை அனைவருக்கும் எத்திவைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். ஈத் முபாரக்!

, மலரும் இந்த நோன்புப் பெருநாள் உலகிலும் குறிப்பாக முஸ்லிம் உம்மத்திலும் மகிழ்ச்சி, மன அமைதி, சுபிட்சம், பரஸ்பர ஒத்துழைப்பு,பரோபகாரம், புரிந்துணர்வு, நல்லிணக்கம் மற்றும் அன்பு, சகோதரத்துவம் முதலான பெறுமானங்களைக் கொண்டதாக அமைவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறோம். 

, முஸ்லிம் உம்மத் கண்ணியமிக்க ரமழானில் செய்த நல்லமல்கள், பெற்ற பயிற்சிகள், உவந்தளித்த தர்மங்கள், அனுபவித்த சிரமங்கள், இழந்த உடமைகள், உயிர்கள் முதலான அனைத்திற்கும் சிறந்த உலக, மறுமைப் பேறுகளை யா அல்லாஹ் குறைவின்றி நீயே வழங்கிட வேண்டும்!

, இந்த உம்மத்தில் அவலங்கள் தீர்ந்திடவும் சோபனங்கள் மலர்ந்திடவும் இந்த நன்னாளில் உன்னிடம் கரமேந்துகிறோம். கண்ணியமிக்க ரமழானில் உன்னதமான இறையுணர்வுகளோடு எங்களை வாழவைத்தவனே அதே நல்லுணர்வுகளோடு இறுதி மூச்சு வரை எங்களை வாழச் செய்வாயாக! ரமழானிலும் நாங்கள் செய்த தவறுகளை, விட்ட குறைகளை, ஏற்பட்ட பொடுபோக்குகளை மன்னித்து எமக்கு அருள் புரிவாயாக!

, இன்றைய நாளை பாதிக்கப்பட்டவர்கள், பாதுகாப்போடு இருப்பவர்கள் அனைவரும் உனது நினைவுகளோடும் உள அமைதியோடும் கொண்டாடுவதற்கு அருள் புரிவாயாக!

 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -