மக்களை மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்கள் ஆளவேண்டும் அதுதான் ஜனநாயகம். ஆனால் இன்று நாட்டில் இறுதிநிலையில் உள்ள பொதுமகனுக்கும் சேவை செய்யக்கூடிய அமைப்பான உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு 14 மாதங்கள் கடந்த நிலையிலும் தேர்தலை நடத்தாமல் சர்வதிகார ஆட்சியினை கொண்டு செல்வது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் ஒரு செயற்பாடாகும்.
இக்காலகடத்தில் அரசாங்கம் அரச அதிகாரிகளையும், இராணுவத்தையும் தமது மனதில் உள்ள நிறைவேறாத ஆசைகளை நிவர்த்தி செய்வதற்கு பயன்படுத்திவருகிறது.
இதில் ஒரு உள்நோக்க அங்கமே அக்கரைப்பற்று மாநகர சபைக்கு சொந்தமான மணிக்கூட்டு கோபுரத்தை பலவந்தமாக புனர்நிர்மாணம் செய்ய எத்தனிக்கும் செயற்பாடாகும்.
இம்மணிக்கூட்டு கோபுரமும் வட்ட வளைவும் அனைத்துப்பாதைகளையும் இணைக்கக்கூடிய பொதுவான ஓர் இடத்தில் அமையப்பெறாததன் காரணத்தினால், அவ்வட்ட வளைவை உடைத்து, புதிய வட்ட வளைவை அமைப்பதற்கான தீர்மானம் மாநகர சபையால் நிறைவேற்றப்பட்டிருந்தது. அன்நிலையிலேதான் மாநகர சபை கலைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று மக்களின் வரிப்பணம் 2 கோடிக்கு மேல் வங்கிகளில் இருக்கும்போது எமது மக்களின் சொத்தான மணிக்கூட்டு கோபுரத்தை சுமார் 3 இலட்சம் செலவிட்டு புனர் நிர்மாணம் செய்வதற்கு அரசாங்க அதிபர் ஏன் இராணுவத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டும்? மாநகர சபைக்கு சொந்தமான ஒரு சொத்தின்மீது அரசாங்க அதிபருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதனை அவர் அறியாமலா இருப்பார்?.
மாநகரசபை ஆணையாளர் இதில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இராணுவத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு மணிக்கூட்டு கோபுரத்திற்கு வர்ணம்பூசும் பணியை மாநகர சபை முன்னின்று செய்ய வேண்டும்.
அத்தோடு அக்கோபுரத்துக்கு தேவையான புதிய மணிக்கூடுகளை கொள்வனவு செய்து பொருத்துவதோடு, மாநகர வரவேற்பு பதாகையும் இணைக்கப்படல் வேண்டும்.
இவற்றுக்கு தேவையான பணத்தினை மக்களின் வரிப்பணத்தில் இருந்து செலவிட முடியாது என்று மாநகர ஆணையாளர் கருதினால் அத்தொகையினை எமது மக்கள் தருவதற்கு தயாராக உள்ளார்கள் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.
எமது மக்களின் பொறுமையின் மீது கல்லெறிந்து பார்த்துவிடாதீர்கள் அவர்கள் பொறுமையாக இருக்கக் கற்றுக்கொண்டவர்கள்.