ஒலுவில் கடலரிப்புக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம் காங்கிரசுக்குத்தான் உள்ளது..!

முகம்மது தம்பி மரைக்கார்
காதலைப் பொழியும் இடமாக இலக்கியங்களில் சொல்லப்படுகின்ற கடலுக்கு, கோரமுகமொன்று உள்ளதை சுனாமி நிரூபித்துச் சென்றது. பலருக்கு வாழ்வளிக்கும் வளமாக கடல் இருப்;பதைப்போலவே, பலரின் வாழ்க்கையையும் வாழும் இடங்களையும் காவுகொள்ளும் நரகமாகவும் கடல் மாறிவிடுகிறது. அடக்க முடியாத பெருங்கோபத்துடன், கடல் - தனது அலைகளால் கரணமிடத் துவங்கும்போது, இயற்கை - தலைகீழாக மாறிவிடுகிறது.

ஒரு காலத்தில் எழில்கொஞ்சும் பகுதியாக ஒலுவில் கடற்கரை இருந்தது. கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களின் நூற்றுக்கணக்கான தோணிகளும், படகுகளும் பெரும் பரப்புக்கொண்ட கடற்கரையில் தரித்து நின்றன. கடற்கரையை அண்மித்து நூற்றுக்கணக்கான ஏக்கர் விஸ்தீரணமுடைய தென்னந்தோப்புகள் காணப்பட்டன. இயற்கையின் ரம்மியங்களை அனுபவித்துக்கொண்டே, மக்கள் தங்கள் தொழில்களில் ஈடுபட்டு வந்தனர்.

இப்போது நிலைமை புரண்டுபோய் விட்டது. ஒலுவில் கடற்கரை - அதன் அழகை இழந்து, அச்சுறுத்தும் ஒரு பகுதியாக மாறிக் கிடக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர், இப்பகுதியில் ஏற்படத் தொடங்கிய கடலரிப்பு, இப்போது மிகத் தீவிரமடைந்துள்ளது. இதனால், ஒலுவில் கடற்கரையின் நூற்றுக்கணக்கான மீற்றர் நிலப்பரப்பினை கடல் விழுங்கி விட்டது. கடற்கரையின் வெண் மணல்கள் இருந்த இடமெல்லாம், இப்போது கடல்தான் தெரிகிறது. 

ஒலுவில் துறைமுக நிர்மாணம் எப்போது ஆரம்பிக்கப்பட்டதோ, அப்போதிலிருந்து - இப்பகுதி முழுக்க கடலரிப்பு தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரசின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் - துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், 1998 ஆம் ஆண்டு - ஒலுவில் துறைமுகம் ஆரம்பிக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. ஒலுவில் துறைமுக நிர்மாணத்துக்காக சுமார் 125 ஏக்கர் காணிகள், பொதுமக்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்டன. இந்தக் காணிகளின் உரிமையாளர்களில் சிலருக்கு, இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை என்பது வேறு கதையாகும்.

கடலரிப்பினால் ஒலுவில் கடற்கரையினை அண்டியிருந்த 150 மீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்புக்கள் - இதுவரை கடலுக்குள் மூழ்கி விட்டதாக, அங்குள்ள மீனவர்கள் கூறுகின்றனர். இதனால், மீனவர்கள் அங்கு அமைத்திருந்த வாடிகள், குடிநீருக்கான கிணறுகள் மற்றும் கட்டிடங்கள் போன்றவை, இப்போது - இருந்த இடங்கள் தெரியாமல் போய்விட்டன. ஒரு காலத்தில் மீனவர்கள் தமது களைப்புத்தீரப் படுத்து உறங்கிய இடங்கள், இப்போது கடலுக்குள் போய் விட்டன. 

ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் பிறகுதான், இங்கு கடலரிப்பு தீவிரமானது என்கிற உண்மையை ஒளித்து மறைக்க முடியாது. கடலரிப்பு ஆரம்பித்த காலத்திலிருந்தே இப்பிரதேசத்து மக்கள், அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசியல்வாதிகளிடமும், தொடர்புபட்ட அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்துக்கொண்டு வந்தனர். ஊடகங்களும், அடிக்கடி - ஒலுவில் கடலரிப்பின் தீவிரத்தினையும், அழிவுகளையும் பதிவுசெய்து வந்தன. ஆனால், பொறுப்பானவர்கள் எவரும் அப்போது கவனிக்கவில்லை.

ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினால், அப்பிரதேசத்தைச் சேர்ந்த கரைவலை மீனவர்கள்தான் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னர் இங்குள்ள மீனவர்கள் தமது தொழில் நடவடிக்கையில் சிரமமின்றி ஈடுபடுவதற்கும், தமது தோணிகள் மற்றும் படகுகளை நிறுத்தி வைப்பதற்கும் - கரையில் போதுமான இடம் இருந்தது. மேலும், தங்களுக்கான வாடிகளையும் மீனவர்கள் தேவையான இடங்களில் அமைத்துக் கொண்டார்கள். ஆனால், இப்போது கடற்கரையாக, பத்துப் பதினைந்து மீற்றர் அகலமான நிலப்பரப்பு மட்டுமே உள்ளது. மீதி நிலங்களை கடல் விழுங்கி விட்டது. இதனால், ஏராளமான மீனவர்கள் இப்போது தமது தொழிலை இழந்து விட்டனர். இதுவரையும் தாக்குப் பிடித்துத் தொழிலைச் செய்து வருகின்ற மீனவர்களும் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

கடலரிப்புக் காரணமாக, கடற்கரையை அண்டியிருந்த பல நூற்றுக்கணக்கான தென்னந்தோட்டங்களும் அழிவடைந்தன. இந்தத் தோட்டங்களிலிருந்து கிடைக்கும் தேங்காய் உள்ளிட்ட தெங்குப் பொருட்களை விற்றுக் கிடைக்கும் பணம் - அவற்றின் உரிமையாளர்களுக்கு வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்கான வருமானமாக இருந்தது. இப்போது - தோட்டங்களுமில்லை, அவற்றின் மூலம் கிடைத்த வருமானங்களுமில்லை.

இப்படி ஒலுவில் பிரதேத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்புக் காரணமாக மக்கள் தமது நிலங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்து கொண்டு வந்த நிலையில், இப்போது அவர்களின் வாழ்வுக்கே அச்சுறுத்தலாக கடலரிப்பு மாறியுள்ளது.

கடலரிப்புக் குறித்து ஒலுவில் பிரதேச மக்கள் உரத்த குரலில் பேசத் தொடங்கிய ஒரு கட்டத்தில், கடலிப்பினைத் தடுக்கும் நோக்குடன் - கடலுக்குள்ளும், கரையிலும் பாரிய பாராங்கற்களைப் பரவும் நடவடிக்கைகள் அவ்வவ்போது இடம்பெற்றன. கடலலையின் வேகத்தினைத் குறைப்பதற்காக கடலின் உட்பகுதியிலும், கடலரிப்பினைத் தடுப்பதற்காக கரையிலும் இவ்வாறு கற்கற் போடப்பட்டன. 'கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத் திணைக்களம்' இந்த நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தது.

ஆயினும், கடலரிப்பினைத் தடுக்கும் வகையிலான இந்த செயற்பாடுகள் வெற்றியளிக்கவில்லை என்று ஒலுவில் பிரதேச மக்கள் கூறுகின்றனர். ஒரு பக்கம் இவ்வாறு கற்கள் போடப்பட்டுள்ள போதிலும், இன்னொரு பக்கமாக - கடல் மிகவும் மூர்க்கத்துடன் நிலங்களைக் காவுகொண்டு வருகின்றமையினைக் காண முடிகிறது. குறிப்பாக, ஒலுவில் கடற்கரையினை அண்டியுள்ள - துறைமுக அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான சுற்றுலா விடுதி அமைந்துள்ள காணிப் பகுயினை, கடல் அரித்தெடுக்கத் துவங்கியுள்ளது. மேலும், அங்குள்ள கட்டிடங்கள் சேதமடைய ஆரம்பித்துள்ளன. பாரிய நீர்த்தாங்கியொன்று உடைந்து விழுந்துள்ளது. இதற்கு அருகில் மக்கள் குடியிருப்புக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறான நிலையில், கடலரிப்பால் அழிவடைந்த இடங்களைப் பார்த்து விட்டுப்போக வேண்டிய நிர்ப்பந்தங்கள், அரசியல்வாதிகளுக்கு அவ்வப்போது எழுகின்றன. உள்ளுர் அரசியல்வாதிகள் தமது கட்சித் தலைவர்களுக்குக் கொடுக்கும் அழுத்தங்கள் காரணமாக, தலைவர்களும் வேறு வழியில்லாமல் 'சும்மா' வந்து, 'சும்மா' பார்த்து விட்டு, 'சும்மா' சென்று விடுகின்றனர். இவ்வாறு வந்து பார்த்துவிட்டுப் போகும் அரசியல்வாதிகள் - கடலரிப்பைத் தடுப்பதற்காக, ஏதாவது நடவடிக்கைகளை மேற்கொள்வார்களென, இங்குள்ள மக்களும் ஒரு காலத்தில் நம்பினார்கள். ஆனால், இப்போது அந்த நம்பிக்கை மக்களிடத்தில் இல்லாமல் போய்விட்டது.

ஒலுவில் கடலரிப்பைக் காண்பதற்காக, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதியன்று, மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தன்னுடன் ஒரு பட்டாளத்தினை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். ஹக்கீமுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான பைசால் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா என்று ஏராளமானோர் வருகை தந்திருந்தனர். மு.கா. தலைவருக்கு ஒலுவில் - பழக்கப்பட்டதொரு பிரதேசமாகும். அம்பாறை மாவட்டத்துக்கு ஹக்கீம் வந்தால், துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான ஒலுவில் சுற்றுலா விடுதியில்தான் அடிக்கடி தங்குவார். அருகிலுள்ள கடற்கரையில்தான் உடற்பயிற்சிக்காக நடந்து செல்வார். நிலைமை இப்படியிருக்க, அன்றைய தினம் - மாலையும் கழுத்துமாக வந்துதான், மக்களின் துயரத்தினை ஹக்கீம் பார்த்து விட்டுச் சென்றார். 

அதே தினம், ஒலுவில் கடலரிப்பினைக் காண்பதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீனும் வருகை தந்தார். ஹக்கீம் வந்துபோன பிறகுதான் றிஷாட் வந்தார். ஒரே தினத்தில் இப்படி, ஒலுவில் மக்களின் பிரச்சினைகளைக் காண்பதற்காக இரண்டு அமைச்சர்களும் ஓடோடி வந்தமை குறித்து யாரும் ஆச்சரியம் கொள்ளவில்லை. ஏனெனில், அதற்குப் பின்னால் இருந்த கேவலமானதொரு அரசியல் குறித்து மக்கள் அறிந்து கொண்டார்கள். குறித்த தினத்தில், ஒலுவில் கடலரிப்பினைப் பார்ப்பதற்காகவும், அது தொடர்பில் அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடுவதற்காகவும், அமைச்சர் றிசாட் பதியுத்தீன் வருவதாக ஒரு ஏற்பாடு இருந்தது. அதனை அறிந்து கொண்ட மு.காங்கிரசின் உள்ளுர் அரசியல்வாதிகள், அன்றைய தினம் அம்பாறை மாவட்டத்துக்கு வந்திருந்த அமைச்சர் ஹக்கீமை, றிசாட் பதியுத்தீனுக்கு முன்னராக ஒலுவிலுக்கு அழைத்து வந்து, கடலரிப்பினைக் காட்டினார்கள். ஹக்கீமும் ஏதோ ஒலுவில் கடலரிப்பினை புதிதாகக் காண்பவர் போல், பார்த்துவிட்டுச் சென்றார்.

அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொண்ட முஸ்லிம் அரசியல் கட்சியாக - முஸ்லிம் காங்கிரஸ்தான் உள்ளது. எனவே, ஒலுவில் கடலரிப்பு விவகாரம் தொடர்பில் உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு - முஸ்லிம் காங்கிரசுக்குத்தான் உள்ளது. அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் மக்கள் காங்கிரசுக்கு - அம்பாறை மாவட்டத்தில் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களென்று எவருமில்லை. ஆக, அமைச்சர் ஹக்கீம்தான் இந்த விவகாரத்தில் பொறுப்புதாரியாக உள்ளார். ஆனால், ஹக்கீம் தனது பொறுப்பை இதுவரை நிறைவேற்றவில்லை என்று, ஒலுவில் பிரதேச மக்கள் கோபத்தோடு கூறுகின்றனர்.

ஒலுவில் கடலரிப்பு என்பது - கேவலான அரசியல் செய்வதற்குரிய களமல்ல. அது, மக்களின் வாழ்க்கையோடு தொடர்புபட்டதொரு விவகாரமாகும். கடற்கரையாக இருந்த நிலப்பரப்பினையெல்லாம், தீராத பசிகொண்ட ஒரு ராட்சத மிருகம்போல் - கடல் விழுங்கி ஏப்பமிட்டு வருகிறது. ஊருக்குள் கடல் புகுந்து விடும் அபாயம் மிக அருகில் உள்ளது. அதற்கு நெருங்காலம் ஆகாது. ஆனால், அதற்கு முன்னர் - ஒலுவில் கடலரிப்பினைத் தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் பொருட்டு, இப்பிரதேச மக்கள் தமது நிலங்கள், தொழில்கள் என்று ஏராளமானவற்றினை இழந்தனர். ஆயினும், துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டு விட்டால், அங்கு - தங்கள் பிள்ளைகளுக்காவது ஒரு தொழிலைப் பெற்று விடலாம் என்கிற எதிர்பார்ப்பு அவர்களிடமிருந்தது. ஆனால், ஒலுவிலில் நிர்மாணிக்கப்பட்ட வர்த்தகத் துறைமுகம் இன்னும் செயற்படாமல் காடுபிடித்துக் காணப்படுகிறது. மறுபுறமாக அமைந்துள்ள மீன்பிடித் துறைமுகம் ஏராளமான குறைபாடுகளுடன், 'ஏதோ' இயங்கி வருகிறது.

ஆக, எப்படிக் கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் - ஒலுவில் துறைமுக நிர்மாணம் என்பது அந்தப் பிரதேச மக்களுக்கு, நன்மையற்றதொரு சமாச்சாரமாகவே இப்போதைக்கு உள்ளது. துறைமுகத்துக்காக தமது காணிகளை அரசாங்கத்திடமும், துறைமுக நிர்மாணத்தின் பிறகு, எஞ்சியிருந்த நிலங்களை கடலிடமும் காவுகொடுத்து விட்டுத் தவிக்கும் - ஒலுவில் பிரதேச மக்களின் கண்ணீருக்கு விடையளிக்காமல் தப்பித்து விட முடியாது. 

'கடற்கரைக்குப் போனால் என்ன பார்க்கலாம்
நாம் என்ன பார்க்கலாம்?
கப்பல் வந்து போகும், மீன்பிடிக்கும் காட்சி இன்னும் காணலாம், நாம் இன்னும் காணலாம்' என்று, சின்ன வயதில் நமக்கும் சொல்லித் தந்த பாடலிலுள்ள காட்சிகளில் ஏராளமானவற்றை, ஒலுவில் - இப்போது இழந்து விட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -