தலைவர் தொடர்பில் நீதிமன்றம் செல்லவும் தயார்ப என்கிறார் பஷீர் சேகுதாவுத்

சித்தானைக்குட்டி –
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தூய்மைப்படுத்துகின்ற பணியில் ஈடுபட்டு உள்ளார் என்று இக்கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவுத் தெரிவித்தார்.

இவரின் முழுமையான பேட்டி வருமாறு:-

கேள்வி:- கிழக்கின் எழுச்சி என்கிற நிகழ்ச்சி திட்டம் குறித்த உங்கள் கருத்து என்ன?

பதில்:- கிழக்கின் எழுச்சி என்கிற கருதுகோள் மறைந்த தலைவர் அஷ்ரப்பின் மரணத்தால் ஏற்பட்ட இடைவெளி கடந்த 15 வருட காலமாக நிரப்பப்படவில்லை என்பதன் எதிரொலி ஆகும். குறிப்பாக நல்லாட்சி அரசாங்கத்தின் பின் ஏற்பட்டுள்ள புதிய கள நிலைவரத்திலும், புதிய யாப்பு உருவாக்க சூழ்நிலையிலும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் கோட்பாடுகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுக்கவில்லை என்கிற ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகின்றது.

கேள்வி:- இந்நிகழ்ச்சி திட்டம் பிரதேசவாதம் என்று கூறுபவர்களும் உள்ளனரே?

பதில்:- பிரதேசவாதம் என்று பெயர் சூட்டி எழுச்சிகளை முடக்குகின்ற அரசியல் உத்திகள் இனி மேல் எடுபடாது. பிரதேசவாதத்தை தாண்டிய கிழக்கின் எழுச்சியாக இருந்தால் இதை அங்கீகரித்தே ஆக வேண்டும்.

கேள்வி:
- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையுடன் தங்களுக்கு ஏற்பட்டு உள்ள முரண்பாட்டின் பின்னணி என்ன?

பதில்:- தலைவர் அஷ்ரப்பின் அகால மரணத்துக்கு பிற்பாடு தனிப்பட்ட நபர்கள் கட்சியை கைப்பற்ற எடுத்து கொண்ட முயற்சிகளை நாம் அனுமதிக்கவில்லை. கட்சியை ஒரு நிறுவனமாக வழி நடத்த தகுதியான ஒருவராக அத்தருணத்தில் ரவூப் ஹக்கீமை நாம் நோக்கினோம். ஆனால் வரலாற்று தடத்தில் ஹக்கீம் என்கிற தனிப்பட்ட நபரும் கட்சியை தனக்குள் அடைக்கலமாக வைத்திருக்கின்ற அரசியலையே முன்னெடுத்து வருகின்றார் என்பது தெளிவாகி உள்ளது.முக்கியமாக அண்மையில் இடம்பெற்ற விபரீதம் என்று பார்த்தால் கட்சியின் கட்டாய உச்சபீட கூட்டத்திலும், இதை தொடர்ந்து இடம்பெற்ற பேராளர் மாநாட்டிலும் ஹக்கீம் என்கிற தனிப்பட்ட நபர் கட்சியை கையகப்படுத்துகின்ற முயற்சிகளை முடுக்கி இருந்தமை தெளிவாக தெரிந்தது. இதனாலேயே தனிப்பட்ட நபர்கள் அன்று கட்சியை கையகப்படுத்த முயன்றபோது அம்முயற்சிகளை தடுத்து நிறுத்தினோமோ அதே போல இன்று ரவூப் ஹக்கீம் என்கிற தனிப்பட்ட நபர் கட்சியை கையகப்படுத்த எடுக்கின்ற நடவடிக்கைகளையும் எதிர்க்கின்றோம்.

கேள்வி:- கடந்த பொது தேர்தலில் நீங்கள் போட்டியிட தயாராக இருந்தபோதும் கட்சி தலைமையால் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றதே?

பதில்;
– என்னை ஒட்டுமொத்தமாக முஸ்லிம் அரசியலில் இருந்து இல்லாமல் செய்கின்ற சதி முயற்சியின் முதலாவது படியாக அது அமைந்தது. அப்போது மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸில் தேர்தல் கேட்க தெரிவு செய்யப்பட்ட சிலர் நான்
தேர்தல் கேட்கின்ற பட்சத்தில் தோற்று விடுவார்கள் என்று அஞ்சுகின்றனர் என்று தலைவரால் எனக்கு சொல்லப்பட்டது. எனவே நான் போட்டியிடுகின்ற பட்சத்தில் அவர்கள் போட்டியிடுவதில் அர்த்தம் இல்லை என்று சொல்கின்றனர் என எனக்கு தெரிவித்த தலைவர் தேசிய பட்டியல் மூலம் எனக்கு இடம் தரப்படும் என்கிற வாக்குறுதியை வழங்கினார். தேர்தல் காலத்தில் கட்சிக்கு இடையூறாக இருக்க கூடாது அல்லவா? எனவே நான் பெருந்தன்மையாக நடந்து கொண்டேன்.

ஆனால் பிரதிநிதித்துவ அரசியல் அரங்கில் இருந்து விலகினாலும்
செயற்பாட்டு அரசியல் அரங்கில் தொடர்ந்தும் இருப்பேன். முஸ்லிம் அரசியலில் முன்னரை விட இப்போது நான் மிக உறுதியாக காணப்படுகின்றேன். குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தூய்மைப்படுத்தும் முயற்சிகளை தொடர்வேன்.

கேள்வி:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தூய்மைப்படுத்துவீர்கள் என்று நீங்கள் கூறுவதன் அர்த்தம் என்ன?

பதில்:- முஸ்லிம் காங்கிரஸ்,அஷ்ரப், மரம் ஆகியவற்றின் மீது முஸ்லிம் மக்கள் வைத்திருக்கின்ற பற்று, விசுவாசம், நேசம் ஆகியவற்றை தனிப்பட்ட சுய நல அரசியலுக்கு பயன்படுத்தி குளிர் காய்பவர்களின் எண்ணிக்கை கட்சிக்குள் அதிகரித்து விட்டது. கட்சியை அழிக்க முன்னைய காலங்களில் முயன்ற பலரும் இப்போது கட்சியை காப்பாற்றுவது போல நடிக்கின்றனர். பதவிகளுக்காக ஒட்டுண்ணிகளாக கட்சியுடன் ஒட்டி கொண்டிருக்கின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கைகள் திட்டமிடப்பட்ட வகையில் அழிக்கப்படுகின்றன. இதனால்தான் கட்சியை தூய்மைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகி உள்ளது.

கேள்வி:- இம்முறை மு. காவின் தேசிய பட்டியலுக்கு ரவூப் ஹக்கீமுக்கு தனிப்பட நெருக்கமான இருவர் நியமிக்கப்பட்டனர். இதை எப்படி பார்க்கின்றீர்கள்?

பதில்:-
கட்சியின் உயர்நிலை தகைமை உள்ளவர்கள் எவர் மீதும் தலைவருக்கு நம்பிக்கை கிடையாது என்பதையே இது காட்டுகின்றது.

கேள்வி:- கிழக்கு மக்களின் மன நிலை எப்படி உள்ளது என்று நினைக்கின்றீர்கள்?

பதில்:
- முஸ்லிம் அரசியலில் சம காலத்தில் தென்படுகின்ற புதிய கருத்துக்களையும், உண்மையின் வெளிப்பாடுகளையும் உள்வாங்கி ஜீரணித்து கொள்ளும் வகையில் நடுநிலையான மன நிலையில் காணப்படுகின்றனர்.

கேள்வி:- தலைவர் அஷ்ரப்பின் அகால மரணம் இன்னமும் மர்மமாகத்தான் உள்ளது என்று அழுத்தி கூறி வருகின்றீர்களே?

பதில்:- எனக்கு மாத்திரம் அல்ல மறைந்த தலைவர் அஷ்ரப்பின் மரணத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்துக்குமே சந்தேகம் உள்ளது. அன்றைய அரசாங்கத்துக்கும் இதே சந்தேகம் காணப்பட்டது. இதனால்தான் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் இம்மரணத்தை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

ஆனால் இவ்வாணைக்குழுவின் முடிவு கையளிக்கப்பட்டு மிக நீண்ட காலம் ஆகி விட்டபோதிலும் அறிக்கையில் சொல்லப்பட்ட விடயங்கள் இன்னமும் வெளிப்படுத்தப்படவே இல்லை. இதை மர்மம் என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது?

ஆணைக்குழுவை அப்போது நியமித்தபோது சந்திரிகா அம்மையாரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை பெற விண்ணப்பித்து உள்ளேன். கிடைத்ததும் ஆணைக்குழுவின் தன்மை குறித்து துறை சார்ந்த நிபுணர்களுடன் ஆராய்வேன். ஆணைக் குழுவின் அறிக்கையை வெளியிடுமாறு சட்ட ஏற்பாடு அனுமதிக்கின்ற பட்சத்தில் நிச்சயம் கோருவேன். தேவையேற்பட்டால் இதற்காக நீதிமன்றம் செல்லவும் தயாராக உள்ளேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -