மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா மற்றும் பாசிக்குடா பிரதேசத்தில் ஏற்படவிருந்த இனமுறுகல் நிலை பொலிஸாரினதும் அரசியல் பிரமுகர்களின் தலையீட்டையடுத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (07) இரவு கல்குடா பொலிஸ் பிரிவில் கல்குடா வாழைச்சேனை பிரதான வீதியில் வைத்து தமிழ் சகோதரர் தாக்கப்பட்டு அவரிடம் இருந்து இரண்டரை பவுன் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட நிலையில், தாக்கப்பட்டவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பாசிக்குடா கடற்கரையில் சுற்றுலா படகு ஓட்டுனரான வாழைச்சேனை வீதி கல்குடாவை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பிப்பிள்ளை பாக்கியராசா தனது வீட்டுக்கு அருகாமையில் வாடகைக்கு இருக்கும் இரண்டு சிங்கள சகோதரர்களுடன் இரவு 10.30 மணியளவில் தனது வீட்டில் இருந்து பக்கத்தில் உள்ள கடைக்கு சிகரெட் வாங்குவதற்காக சென்ற வேளை, பாசிக்குடா ஹோட்டல்களில் தொழில் செய்து கொண்டு கல்குடா பிரதேசத்தில் வாடகைக்கு வீடு எடுத்துக் கொண்டு இருக்கும் சிங்கள சகோதரர்கள் கடைக்குச் சென்றவர்களை தாக்கியதில் ஒருவர் தப்பியோடியுள்ளதுடன், ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், மற்றையவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து கல்குடா மற்றும் பாசிக்குடா பிரதேசத்தில் இன முறுகல் ஏற்படக்கூடிய பதற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் யூ.பி.டி.ஏ.கருநாயக்க தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் கல்குடா பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனும் கலந்து கொண்டுள்ளார்.
அந்த கூட்டத்தில் கல்குடா பிரதேசத்தில் ஹோட்டல்களில் வேலை செய்து கொண்டு வீடுகளில் தங்கியுள்ளோர் இன்று மாலை 03.00 மணியுடன் வீடுகளை விட்டு வெளியேறி, ஹோட்டல் விடுதிகளில் தங்க வேண்டும் என்றும், ஹோட்டல்களில் பணி புரியாமல் வேறு வேலைகளுக்கு வந்துள்ளோர் தங்களது பிரதேசத்திற்கு செல்ல வேண்டும் என்று எடுக்கப்பட்ட தீர்மானத்தை பொதுமக்களிடம் அறிவிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் அமைதி காத்து கலைந்து சென்றுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கல்குடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இச்சம்பவத்துடன் வேறு எவரும் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கல்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பிரதேசத்தில் சிங்களவர்களின் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டமையாலும், மது பாவனை அதிகம் காணப்படுவதாலும் பல இன முறுகல் நிலைகள் காணப்படுகின்றது. அண்மையில் இரண்டு ஹோட்டல் ஊழியர்களுக்கு நடைபெற்ற மோதலில் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.