இலங்கை அரசின் முடிவு என்ன

எம்.ஐ.முபாறக்-

லங்கை அரசு இன்று எதிர்நோக்கி இருக்கும் மிகப் பெரிய தலையிட்டு யுத்தக்க குற்ற விசாரணைதான்.இது மஹிந்தவின் ஆட்சிக்கு காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட ஒன்றாக இருக்கின்றபோதிலும்,இதற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் மஹிந்தவைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்துள்ள மைத்திரி-ரணில் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இது கத்தி மேல் நடக்கும் வித்தையாகும்.இந்த விசாரணை தமிழர்களுக்குப் சாதகமாக அமைந்துவிட்டால் அரசு சிங்களவர்களை பகைத்துக் கொள்ள வேண்டி வரும்.படையினருக்கு சாதகமாக அமைந்துவிட்டால் சர்வதேசத்தையும் தமிழர்களையும் பகைத்துக் கொள்ள வேண்டி வரும்.

இதனால்,இதை மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய ஒரு இக்கட்டு நிலைக்கு அரசு இப்போது தள்ளப்பட்டுள்ளது.சர்வதேசத்தைத் திருப்திப்படுத்தும் வகையில் இந்த விசாரணை அமைந்துவிட்டால் படையினரின் ஒட்டுமொத்த ஆதரவையும் அரசு இழக்க வேண்டி வரும்.அது அரசின் இருப்புக்கே ஆபத்தாக அமைந்துவிடும்.அதனால்,சர்வதேசத்தை எப்படியாவது சமாளித்துவிட்டு படையினருக்கு சாதகமாக இந்த விசாரணையை முடித்து வைப்பதற்கு அரசு முடிவெடுத்துள்ளது.

உள்ளகப் பொறிமுறை தொடர்பில் அரசு தொடர்ச்சியாக தெரிவித்து வரும் கருத்துக்கள்-நிலைப்பாடுகள் அனைத்தும் படையினருக்கு சாதகமாகவும் தமிழருக்குப் பாதகமாகவும் அமைந்திருப்பதைக் காணலாம்.

உள்ளக பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்படமாட்டார்கள் என்றும் படையினர் குற்றவாளிகளாகக் காணப்பட்டாலும் அவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள் என்றும் அதற்கு பதிலாக பொறுப்புக்களை அரசு நிறைவேற்றும் என்றும் அரசு கூறி வருவதை நாம் அவதானிக்கின்றோம்.இவை அனைத்தும் படையினருக்குச் சாதகமான கருத்துக்களாகும்.

உள்ளகப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட்டால் அது நிச்சயமாக பக்கச்சார்பற்ற விசாரணையாக அமையும்.அவ்வாறு அமைந்தால் படையினர் இழைத்த குற்றங்கள் அனைத்தும் வெளியே வந்துவிடும் என்றும் அந்தக் குற்றங்களுக்குத் தண்டனை வழங்க வேண்டி வரும் என்றும் அரசு அஞ்சுகின்றது.

ஆக,விசாரணையின் முடிவு இப்படித்தான் அமைய வேண்டும் என்று அரசு முடிவெடுத்துவிட்டது.அரசின் திட்டப்படி அந்த விசாரணைகள் முடிய வேண்டுமாக இருந்தால் வெளி ஆட்களின் தலையீடுகள் அவற்றில் இருக்கக்கூடாது.

ஆனால்,சர்வதேசமோ சர்வதேச விசாரணை என்ற ஒன்றை விட்டுக் கொடுத்து அதற்கு பதிலாக உள்ளகப் பொறிமுறையில் சர்வதேச நநீதிபதிகளை புகுத்த முயற்சிக்கின்றது.அதற்கு இடம் கொடுப்பதும் ஒன்றுதான் சர்வதேச விசாரணைக்கு இடம் கொடுப்பதும் ஒன்றுதான் என்ற உண்மையை விளங்கி வைத்துள்ள அரசு சர்வதேசத்தின் அந்த நிலைப்பாட்டை எதிர்த்து வருகின்றது.

சர்வதேச விசாரணை இல்லாவிட்டாலும் பரவாயில்லை.உள்ளகப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட்டால் போதும் என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வந்திருப்பதன் மூலம் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய பொறிமுறை சர்வதேச விசாரணைக்கு சமமானதாக இருக்கும் என்பதை விளங்கிக்கொள்ள முடிகின்றது.இல்லையேல்,கூட்டமைப்பு சர்வதேச விசாரணையில் விடாப்பிடியாக இருந்திருக்கும்.

கூட்டமைப்பின் இந்த நிலைப்பாட்டையும் அரசு இப்போது கவனத்தில் எடுக்கின்றது.கூட்டமைப்பின் எம்பி எம்.சுமேந்திரன் இப்போது அமெரிக்காவில் இருந்துகொண்டு சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கும் வேலையைச் செய்து வருகின்றார்.

பல விடயங்களில் அரசுக்கு சலுகை காட்டிய ஐ.நா இந்த விடயத்தில் சற்று இறுக்கமாக என்றே தெரிகின்றது.ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை சர்வதேச நீதிபதிகளின் உள்ளடக்கத்தை கடுமையாக வலியுறுத்தி நிற்பதைக் காணலாம்.இதனால்,அரசு இப்போது இதற்கு உடன்பட வேண்டிய கட்டாயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்றே தோன்றுகிறது.

பிரதமரும் ஜனாதிபதியும் சர்வதேச நீதிபதிகளை நிராகரித்துள்ள அதேவேளை,வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர இதை முற்றாக நிராகரிக்கவில்லை.50 இற்கு 50 என்ற நிலைப்பாட்டில்தான் அவர் உள்ளார்.இது அரசில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

படையினர் குற்றமிழைக்கவில்லை என்றால் ஏன் சர்வதேச நீதிபதிகளை பார்த்து அஞ்ச வேண்டும்?சர்வதேச நீதிபதிகளை உள்வாங்குவது மூலம் நாட்டின் இறைமைக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.

பல விடயங்களில் இந்த அரசு சர்வதேசத்திடம் கட்டுண்டுதான் கிடக்கின்றது;இறைமையை இழந்துதான் உள்ளது.ஆனால்,இந்த விவகாரத்தில் மாத்திரம் இறைமை பற்றி யோசிப்பது ஏன்?

மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விசாரணையை நிராகரித்தபோதெல்லாம் ஐக்கிய தேசிய கட்சி அதை விமர்சித்தது.குற்றம் செய்யவில்லை என்றால் நாம் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும் என்று அடிக்கடி கேள்வி எழுப்பும்.அதே கேள்வியை நாம் இப்போது ஐக்கிய தேசிய கட்சியிடம் எழுப்ப முடியும்.

அரசியல் லாபங்களுக்காக எதிர்க்கட்சியில் இருக்கும்போது ஒன்றையும் ஆட்சியில் இருக்கும்போது ஒன்றையும் கூறுவது அரசியல்வாதிகளுக்கு ஒன்றும் புதிதல்ல.ஆனால்,தொடர்ச்சியாக அதைச் செய்துகொண்டிருக்கமுடியாது.

ஆகவே,சர்வதேச நீதிபதிகள் விடயத்தில் அரசு என்ன முடிவை எடுக்கப் போகின்றது என்று சர்வதேசம் பார்த்துக்கொண்டு இருக்கின்றது.சர்வதேசத்தின் கோரிக்கையைத் தொடர்ச்சியாக நிராகரித்தால் அது அரசின் இருப்புக்கே ஆபத்தாக அமைந்துவிடும் என்பதை இந்த அரசு அறியாமல் இல்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -