ஊரான் வீட்டுக் கோழியை அறுத்து உம்மா பேரில் கத்தம் ஓதுவது மக்களிடம் இனிமேல் எடுபடாது..!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

சாய்ந்தமருதுக்கான தனியார் உள்ளுராட்சி மன்றம் என்ற விவகாரம் ஒன்றும் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று விண்ணப்பம் செய்து பெறும் ஒரு விடயமல்ல.. இது ஒரு சின்ன விடயம். ஆனால், சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு காரணமாகவே இந்த விடயம் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு இன்று பூதாகரமாக மாற்றப்பட்டுள்ளது.

மக்களின் அபிலாஷைகளோடு விளையாடும் சில அரசியல்வாதிகளின் ஓடிப்பிடித்து ஒளிந்து விளையாடும் போக்கினால்தான் இந்த விடயம் இன்று இவ்வாறானதொரு இழுபறிக்குச் சென்றுள்ளது.

இறுதியில் இன்று ஒரு தரப்பு அரசியல்வாதிகளை நம்பாத சாய்ந்தமருது மக்கள், இறைவனே தங்களுக்கு போதுமானவன். தங்களது தேவைகளை அவனே நிவர்த்தி செய்வான் எனற அடிப்படையில் பிரார்த்தனையிலும் வழிபாட்டிலும் தங்களை ஆத்மாத்தமாக இணைந்து கொண்டுள்ளார்கள். நிச்சயம் இதில் அவர்கள் வெற்றி பெறுவர் என்பது நிச்சயம்.

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்ற விடயத்தை ஆரம்பத்திலிருந்து ஆழமாக இங்கு அலசுவதனை விட இடையிலிருந்து சற்று பார்த்தாலே போதும்.

நானும் சாயந்தமருதைச் சேர்ந்தவன் என்பதால் சாய்ந்தமருதுக்கான தனியார் உள்ளுராட்சி மன்ற விவகாரம் எழும் போதெல்லாம் இந்த விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தனிப்பட்ட முறையில் பேசுவேன். அவர்களது இதற்கு தரும் பதில் எனக்கு ஏமாற்றமாகவே இருக்கும்.

அந்தளவுக்கு சில முஸ்லிம் அரசியல் தரப்புகள் இந்த விடயத்தை தங்களுக்கான பிரசாரப் பொருளாக்கினார்களே தவிர பெரிதாக அவர்கள் ஈடுபாட்டு காட்டவில்லை. மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதனை அவர்கள் எனக்கு தெரிவித்த பல விடயங்கள் மூலம் புரிந்து கொண்டேன்.

ஏ.எல்.எம்.அதாஉல்லா இந்த விடயத்துக்கான அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவர் உண்மையில் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி தனது அளப்பரிய பங்கினை ஆற்றினார் என்ற உண்மையை மறுக்க முடியாது. வர்த்தமானி அறிவித்தல் கூட இது தொடர்பில் வெளியாக இருந்த நிலையில் அதற்கு தடையேற்படுத்ததப்பட்டது.

இவ்வாறு, சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றம் அன்றைய நிலையில் வழங்கப்பட்டால் மக்கள் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கி மைத்திரியை தோற்கடித்து விடுவார்கள் என்று கூறி, வேறொன்றை மனதில் வைத்து இந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதில் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் வெற்றி கண்டனர்.

ஆனால் இது அல்ல உண்மை... சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றம் கிடைத்து விட்டால் சாய்ந்தமருது மக்களால் தாங்கள் நிராகரிக்கப்பட்டு, அதாஉல்லாவின் செல்வாக்கு அதிகரித்து விடலாம் என்ற பீதியினாலேயே சில முஸ்லிம் அரசியல்வாதிகள் மஹிந்தவின் தலையில் விடயத்தை போட்டு இந்த வர்த்தமானி அறிவித்தலை சுய நலத்துக்காக தடை செய்வதில் இரவு பகலாக ஈடுபட்டிருந்தார்.

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றம் கிடைக்கப் போகிறது.. இன்றிரவு எமக்கு விடிவு என்று அந்த ஊர் மக்கள் ஆவலுடன் காணப்பட்ட போது, கொழும்பிலிருந்து சில முஸ்லிம் அரசியல்வாதிகளால் இது கிடைத்தால் தாங்கள் தோற்கப் போகிறோமென்ற ஆதங்கங்கத்தில் அநியாயம் செய்வதில் ஈடுபட்டிருந்தனர் என்பதே உண்மை.

வெளிப்படையாகச் சொன்னால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றம் விவகாரத்தில் திரிகரணசுக்தியுடனான செயற்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் சாய்ந்தமருது தனியாக பிரிவதனையும் விரும்பவில்லை.

அவ்வாறு பிரிந்தால் தங்கள் அரசியல் இருப்பு இறுதி செய்யப்பட்டு அரசியல் வாழ்க்கையே கபனிடப்படும் என்ற எண்ணம் அந்தக் அந்தக் கட்சியைச் சேர்ந்த இருவருக்கு இன்றுவரை இருந்து வருகிறது. இதன் காரணமாகவே கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்றுவரை இந்த விடயத்தில் இரு தலைக்கொள்ளி எறும்பாக துடித்துக் கொண்டிருக்கிறார்.

கட்சியின் பல முக்கியஸ்தர்கள், வெளியேறி அல்லது வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் போது, குறித்த இரு நபர்களையும் இழப்பதால் ஏற்படக் கூடிய பாதக நிலைமை தொடர்பில் ஹக்கீம் அதிகம் சிந்திப்பதால்தான் இன்று கூட சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றம் தொடர்பில் அந்தக் கட்சி வெளியில் சொல்வது போன்று ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்பதனை நான் தெளிந்து கொண்டுள்ளேன்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமை நினைத்திருந்தால் இந்த விடயம் என்றோ தீர்க்கப்பட்டு இன்று சாய்ந்தமருவில்”சாய்ந்தமரு நகர சபை உங்களை வரவேற்கிறது” என்ற பதாகை காணப்பட்டிருக்கும்.

மேலும், இன்றைய நிலையிலும் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றம் வேண்டுமென்றும் நாங்கள் பெற்றுத் தருவோம் என்றும் மீண்டும் முருங்கையில் ஏறும் வேதாளமாக முஸ்லிம் காங்கிரஸ் காணப்படுகிறது.பல வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. அமைச்சர் பைஸர் முஸ்தபாவையும் சந்தித்து பேசியுள்ளார்கள்.

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றத்துக்கு கட்சிக்குள் இருவர் காட்டும் அதீத எதிர்ப்புக்கும் மத்தியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த விடயத்தை முன்னெடுத்துள்ளார். ஆனால், இதிலும் போட்டி அரசியலே காணப்படுகிறது. மக்களின் அபிலாஷைகளுக்காக இந்த விடயத்தை அவர்கள் இன்று கையில் எடுக்கவில்லை என்பது மட்டும் உண்மை.

சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபை என்ற விடயத்தில் அமைச்சர் ரிஷாத் இன்று காட்டி வரும் அக்கறை காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸ் இவ்வளவு தீவிரம் காட்டி வருகிறது.

அமைச்சர் ஹக்கீமை விட பல விடயங்களை அமைச்சர் ரிஷாதினால் இந்த அரசாங்கத்தின் ஊடாகச் செய்ய முடிகிறது. சமூகத்துக்காக யாரின் கை, கால்களையாவது பிடித்து காரியம் செய்தவதில் ரிஷாத் பலே மனிதர் என பல அரசியல்வாதிகள் அமைச்சர்கள் என்னிடம் கூறுவர்.

இந்த அடிப்படையிலேயே இப்போது இந்தக் காரியத்தில் அவர் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளார். இதில் வெற்றி பெறும் வாய்ப்பு அவருக்கு உள்ளது. சாய்ந்தமருது மக்களும் மகிழ்ச்சியடையும் நிலை ஏற்படும் என நம்புகிறேன். ஆனால்,வெண்ணெய் திரண்டு வரும் நிலையில் தாழி உடைந்து போகுமா அச்சமும் கவலையும் என்னுள் உள்ளன.

அமைச்சர் ரிஷாதினால் இந்த விடயம் கைகூடுமாக இருந்தால் அதனை முஸ்லிம் காங்கிரஸ் விரும்புமா என்பதும் இங்கு கேள்விக்குறிதான். ஏனெனில், அரசாங்கமோ அமைச்சர் பைஸர் முஸ்தபாவோ இந்த விடயத்தில் நல்ல முடிவைத் தந்தாலும் ஹக்கீம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால். நிச்சயம் அமைச்சர் ரிஷாத் தோல்வியடைவார். அத்துடன் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் கிடைக்கவும் மாட்டாது என்பதும் எனது ஆரூடம்.

ஏனெனில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதான தளம் கிழக்கு என்பது அரசுக்கும் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் அங்கு முன்னெடுக்கப்பட வேண்டியவை தொடர்பில் யார் எந்தத் திட்டங்களை முன்வைத்தாலும் ஒரு தடவை முஸ்லிம் காங்கிரஸிடம் கேட்டுப் பார்ப்போம் என்ற நிலைப்பாடு அரசாங்கத்துக்கும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கும் இருக்கும். இதுவே யதார்த்தம். இந்த நிலையில், ரிஷாதின் கோரிக்கையை நிறைவேற்ற ஹக்கீம் தரப்பு விரும்பாது.

மேலும், அமைச்சர் ரிஷாத் பதியுதீனால் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை கிடைத்தால் அந்தப் பிரதேச மக்கள் ரிஷாத் பதியுதீனுக்கே கால காலமாக தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டிருப்பர். அவரது கட்சி அங்கு காலூன்றி விடும். மேலும் ஊரான் வீட்டு கோழியை அறுத்து உம்மா பேரில் கத்தம் ஓதக் கூடியவர்கள் யார் என்பதனையும் சாய்ந்தமருது மக்கள் அரசியல் அடிப்படையில் கடந்த காலத்தில் ஒரு பாடமாக கற்றுக் கொண்டனர்.இது முகாவினருக்கு பாதக அமையும்.

அத்துடன் முஸ்லிம் காங்கிரஸுக்கான சாய்ந்தமருது என்ற தளம் அகில இலங்கை மகக்ள் காங்கிரஸுக்கு உரித்தாகி விடுவதனை விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.

சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்க நிர்வாகம் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்டுப்பாட்டுக்குள் சென்று முஸ்லிம் காங்கிரஸுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ள நிலையில், இன்னொரு பேரிடியை முஸ்லிம் காங்கிரஸ் தாங்குவதற்கான நதிமூலத்தை ஒரு போதும் அது ஏற்படுத்தாது.

இறுதியாக, முஸ்லிம் காங்கிரஸிடம் நான் கேட்பது இதுதான்.. அண்மையில் அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அந்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரை முஸ்லிம் காங்கிரஸ் தலைவருர் அமைசச்ர் ஹக்கீமும் அகில இலங்னை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனும் சந்தித்து பேசினீர்கள் தானே?

அது போன்று சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும் இணைத்துச் சென்று மனம் திறந்து இன்னொரு தடவை பேசுங்களேன் பார்ப்போம். அவ்வாறு ஒன்று நடந்தால் உங்கள் மீது பழியும் வராது... பம்மாத்துகாரர்கள் என்ற இழி நாமம் வராது அல்லவா?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -