நல்லாட்சி அரசு ஒலுவில் கிராம மக்களின் துயர் துடைக்க முன்வருமா...?

எம்.எல்.பைசால் காஷிபி-
கிழக்கு மாகாணப் பொருளாதாரத்தின் தரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணி மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டு கடந்த அரசாங்க காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இத்துறைமுக நிர்மாணத்தினால் அக்கிராம மக்களின் மீன்பிடி,தெங்கு உற்பத்தி,கற்பன் உற்பத்தி போன்ற தொழிற்கள் பாதிப்புக்குள்ளாகின. இவ்விழப்புக்கள் அனைத்தும் துறைமுகம் என்ற பெரிய அபிலாசையினை பெற்றுக்கொள்வதில் இருந்த ஆர்வம்​ அன்று பெரிய தாக்கமாகத் தெரியவில்லை.

கடந்த ஒரு வருட காலமாக ஒலுவில் பிரதேசம் இத்துறைமுகத்தின் மூலமாக கடல் அரிப்புக்குள்ளாகி அக்கிராமத்தின் கரையோரம் கடலுக்குள் காவு கொள்ளப்பட்டுக் கொண்டிருப்பபதையும், அதனால்​ அக்கிராமத்தின் அழகிய கரையோரம் அழிந்ததோடு மட்டுமல்லாமல் குடியிருப்புக்கள் அண்மித்த காலத்திற்குள் கடலோடு சங்கமிக்கும் அபாய அறிகுறி தென்பட்டுக் கொண்டிருப்பபதையும், மீனவர்கள் தமது தொழிலினை முன்னெடுப்பதில் மிகுந்த சிரமத்தினை எதிர் கொண்டிருப்பபதையும் அம்மக்கள் அனுபவரீதியாக அறியும் போதுதான் தமது கற்பனைகள் கலைந்த நிலையில் இவ்வாறான ஒரு நிகழ்வுக்காகவா இத்துறைமுகம் இக்கிராமத்தில் திணிக்கப்பட்டது ? என்று வேதனைப் பட்டுக் கொள்கின்றனர். 

இது பற்றி அரசியல் கட்சி தலைவர்களிடமும்,மக்கள் பிரதிநிதிகளிடமும், அமைச்சர்களிடமும் தெரியப்படுத்தினர்.பல கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் பலர் பாதிப்பினை பார்வையிட்டுச் சென்றதோடு உரிய நடவடிக்கை எடுத்து தீர்வினைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்தனர்.இச்செய்திகள் பத்திரிகைகளையும், சமூக வலைத்தளங்களையும் அலங்கரித்ததே தவிர மக்கள் எதிர் கொண்டுள்ள துயரத்திற்கு உரிய பலன் கிடைப்பதாகத் தெரியவில்லை. 

தாம் நேசித்த கட்சிகள் இவ்விடயத்தில் பாராமுகமாக இருப்பதை அறிந்த அக்கிராமத்தின் கல்விமான்கள் பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் குரல் கொடுத்தனர். குறிப்பாக முகநூல் பகுதியில் தமது அபிமானத்திற்குரிய கட்சிகளை அதன் போராளிகள், இளைஞர்கள் மிகக் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து விமர்சித்த வண்ணமே இருந்தனர். மூன்று மாத காலத்திற்கும் அதிகமாக முகநூலில் பெரிய போராட்டம் ஒன்றையே அவர்கள் நடாத்தினர். மேலும் இளைஞர்கள் கிராமத்தின் முக்கியஸ்தர்களை இவ்விடயத்தில் கவனத்தினை செலுத்துமாறு வலியுறுத்தி நின்றதையும் கவனத்திற் கொள்ள முடியும்.

இந்நிலையில் சென்ற வாரம் நடைபெற்ற மாகாண சபை அமர்வில் கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ .எல். தவம் அவர்கள் ஒலுவில் பிரதேசம் துறைமுகத்தினாலேயே கடல் அரிப்புக்குள்ளாகி குடியிருப்பு நிலங்களை காவுகொண்டு முழு கரையோரத்தினையும் கடல் அழித்து விடும் அபாய நிலையினை எதிர் நோக்கியுள்ளதாக தனிநபர் பிரேரணை ஒன்றினை சமர்ப்பித்து மாகாணத்தின் சகல தரப்பாரின் கவனத்தினையும் ஈர்கச் செய்து இவ்விடயத்தில் இச்சபை உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும் எனக் கோரி நின்றார். அதன் போது ஒலுவில் கிராமத்தின் முக்கியத்துவத்தினை விளக்கி இப்பிரச்சினையினை நாடறிய வைத்தமை அம்மக்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. அதேபோன்று கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ. எம். மன்சூர் அவர்களும் பாராளுமன்றத்தில் நிலைமையின் கனதியினை விபரித்தார். 

கடல் அரிப்பினால் துறைமுகத்தின் கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கொண்டு தற்காலிக ஏற்பாடுகளையே மேற்கொள்ள சில போது கற்கள் கொண்டு நிரப்பப் படுவதும் பின்னர் அவை கடலுக்குள் அள்ளுண்டு போவதும் வழமையாக இருந்து வருகின்றது. இந்நிலை மாற்றியமைக்கப்பட்டு நிரந்தர தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என்பதே இம்மக்களின் எதிர் பார்ப்பாகும். 

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய பலனை பொறுப்புணர்வோடு அரசியல் தலைவர்கள் பெற்றுத் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு தூரத்தில் இருப்பதைக் கண்ட அம்மக்கள் அமைதிப் பேரணி மூலம் தமது கோரிக்கையினை அரசுக்கு முன்வைத்துள்ளனர்.

இதற்காக கடந்த 2016/07/29 ம் திகதி துறைமுகத்தின் மூலமே ஒலுவில் கிராமம் கடல் அரிப்புக்குள்ளாகி அழிந்து கொண்டு வருகின்றது அதனை அரசு கவனத்திற் கொண்டு கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒலுவில் கிராமத்தின் பெரிய பள்ளி தலைமையில் ஜம் இய்யதுல் உலமா, மற்றும் அனைத்து பள்ளி வாசல் நிருவாகம், இளைஞர் அமைப்புக்கள், அபிவிருத்தி சபைகள்,அரசியல் கட்சி பிரதிநிதிகள் ,மற்றும் பொது நல அமைப்புகள் போன்றன அமைதிப் பேரணி ஒன்றினை முன்னெடுத்தன. 

அதன் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும்,அதிகாரிகளுக்கும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் மூலம் மகஜர் ஒன்றினை கிராமம் சார்பாக சமர்ப்பித்தனர்.

துறைமுகத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றோம், வாழ்வதர்க்கான இருப்பிடத்தினை இழந்து வருகின்றோம், கிராமம் இலங்கை வரைபடத்தில் இருந்து நீங்கும் அபாயத்தினை எதிர்கொண்டிருக்கின்றது என்று ஒலுவில் கிராம மக்கள் ஒற்றுமைப்பட்டு அரசுக்கு உரத்துச் சொன்னது வரலாற்றுத் திருப்பமாகும்.

“துறைமுகத்தினால் ஏற்பட்ட கடல் அரிப்புக்கு நிரந்தர தீர்வினை அரசு பெற்றுத்தர வேண்டும்” என்றும், “துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் நிம்மதி இழந்து அபாயத்தின் விழிம்பில் வாழும் எமக்கு தற்காலிக தீர்வின் மூலம் பூரணமான நிம்மதி கிடைக்காது” என்றும், “கற்களை அலைத் தடுப்பிற்கு போடுவதற்குப் பதிலாக கரையோரத்தினை பாதுகாப்பதற்காக அணைகட்டினை ஏற்படுத்தித் தரவேண்டும்” போன்ற கோரிக்கையினை அம்மக்கள் மகஜர் மூலம் முன்வைத்துள்ளனர். 

கடந்த காலங்களில் அபிவிருத்தி எனும் பொறிக்குள் சிக்குண்டு தமது கிராமத்தின் அடையாளத்தினை பறிகொடுத்த இம்மக்கள் குறிப்பிட்ட சில பகுதிகளுடன் தமது நடமாட்டங்கள் சுருங்கிய நிலையில் நிம்மதி இழந்து வாழ்ந்து கொண்டிருக்குகின்றனர். இந்நிலையில் தமது இருப்பே பறிபோகும் அபாய நிலை பெரிய ஏமாற்றத்தினை அம்மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் காலங்களில் இரவும், பகலுமாக பட்டி தொட்டியெல்லாம் சென்று மக்களை சந்தித்த அரசியல்வாதிகள் அரசியல் அதிகாரம் இல்லாத இம்மக்களை பாதிப்பின் போது சந்திக்காமல் போனமை மிகுந்த விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது. 

வெள்ளக்கல் தோட்டம், அடம்பன் குளம், முதிரியடிவட்டை, பால் கேணி, விளாவடி மடு, பொன்னம் வெளி, விசாரை, கத்தாளை மலை ,காசாங்கேணி மற்றும் ,ஆலிம் சேனை போன்ற வயல் நிலங்கள் ஒலுவில் கிராம மக்களிடம் தானே இருந்தன!, அதன் தற்போதய நிலையினை அம்மக்கள் மறப்பதற்கில்லையே!, அரசியல் அதிகாரங்கள் உச்ச நிலையில் இருந்த கால கட்டத்திற்கூட அதனை அம்மக்களுக்கு பெற்றுத்தர முடியாமல்த்தானே போய்விட்டது!, வெற்றுக் காகிதத்தோடு கோடும்,பொலிஸ் நிலையம் என்றும் அலைந்ததுதானே எஞ்சிப்போயின! அவ்வாறான நிலைதான் ஒலுவில் கிராமத்திற் ஏற்படப் போகின்றதா? துறைமுகத்திற்காக வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தல் சொல்லும் செய்தியின் பூரண விளக்கத்தினை அரசியல் தலைவர்கள் மீண்டும் ஒரு தடவை மீளாய்வு செய்து அம்மக்களின் அச்சத்தினை போக்க முயற்சிப்பார்களா?

தமது விருப்பத்திற்கேற்ப நாட்டின் அபிவிருத்தியினை கவனத்திற் கொண்டு இக்கிராமத்தினை துண்டாடியவர்கள் இம்மக்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைக்கு இதய சுத்தியுடனான பங்களிப்பினை செலுத்த முற்படுவார்களா?.

ஒலுவில் கிராம மக்கள் எதிர் நோக்கியுள்ள இப்பிரச்சினையின் செய்தி தேசிய மயப்படுத்தப் பட்டிருக்கும் இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தினை உருவாக்குவதில் பூரண ஈடுபாடு காட்டிய இம்மக்களின் பிரச்சினையினை நிரந்தர தீர்வு நோக்கி கொண்டு செல்ல அரச தலைவர்கள் சிறந்த தீர்மானத்தினை எடுத்து அம்மக்களின் துயர் துடைப்பார்கள் என்ற அதீத எண்ணத்தில் அம்மக்கள் உள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -