அகில இலங்கை முஸ்லிம் லீக் யாழ் மாவட்டக் கிளை மற்றும் கியூடெக் ஹரிதாஸ் நிறுவனத்தின் சர்வமதப் பேரவை இணைந்து யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் நடாத்திய இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே நல்லாட்ச்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) பிரதிநிதியும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய அய்யூப் அஸ்மின் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்,
அவர் மேலும் தெரிவிக்கையில்;
இன்றைய இப்தார் நிகழ்விலே எனக்கு முன்னர் உரை நிகழ்த்திய மதிப்பிற்குரிய கத்தோலிக்க மற்றும் இந்து மதகுருமார்கள் நோன்பு குறித்தும், விரதம், உபவாசம் குறித்தும் தங்களுடைய மதங்களில் சொல்லப்பட்டிருக்கின்ற விடயங்களை மிகவும் அழகாக எடுத்துரைத்தார்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் நோன்பு குறித்து சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்குத் தரப்பட்டிருக்கின்றது. மிகவும் சுருக்கமாக இரண்டு விடயங்களை இவ்விடத்தில் குறிப்பிடுவது சிறப்பானது என்று நினைக்கின்றேன்.
முஸ்லிம்கள் தம்முடைய வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள், இஸ்லாமிய வாழ்விற்கான வழிகாட்டல்களை அல்லாஹ் அவனுடைய தூதுவர் ஊடக மனித குலத்திற்கு வழங்கியிருக்கின்றான், அவ்வழிகாட்டல்களுக்கான கொள்கைசார் வழிகாட்டல்களை அல்லாஹ் வஹியின் மூலம் அறிவிப்பான், அதற்கான செயன்முறையினை நபிகளார்கள் எமக்குக் காட்டித்தருவார்கள், இவை இரண்டுமே முஸ்லிம்களை வழிநடாத்துகின்றன. இஸ்லாம் முஸ்லிம்களின் மீது ஐந்து பிரதான கடமைகளை விதியாக்கியிருக்கின்றான். ஈமான் கொள்தல், அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்கும், வழிகாட்டல்களை வழங்குவதற்கு உரியவனாகவும், அதிகாரத்திற்குரியவனாகவும் ஏற்றுக்கொள்தல், அவனுடைய தூதராக முஹம்மத் நபி (ஸல்) அவர்களை ஏற்றுக்கொள்தல் என்பது முதலாவது அம்சமாகும், இரண்டாவது ஐவேளை தொழுகைகள், அடுத்து ஸக்காத் தான தர்மம், நான்காவது கடமையாக நோன்பு இருக்கின்றது, புனித றமழான் மாதத்திலே நோன்பிருப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயமாக கடமையாகும், இறுதியாக மக்காவிலே அமைந்திருக்கின்ற அல்லாஹ்வின் முதல் மாளிகைக்குச் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றுவதாகும், இவை ஐந்துமே இஸ்லாத்தின் கடமைகளாக இருக்கின்றன
“நீங்கள் இறையச்சம் உடையோராக இருக்க வேண்டும் என்பதற்காகவே உங்களுக்கு முன்பிருந்தோரின் மீது விதியாக்கப்பட்டதுபோல உங்களின் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டிருக்கின்றது” என்று அல்-குர்ஆனிலே அல்லாஹ் எமக்கு வழிகாட்டியிருக்கின்றான்; இங்கு இறையச்சமே நோன்பின் நோக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அந்த இறையச்சம் மனிதர்களை நேர்வழிப்படுத்தும், மனிதர்களை ஒழுக்க சீலர்களாக மாற்றியமைக்கும். இதுவே நோன்பின் நோக்கமாக இருக்கின்றது. குறிப்பாக யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு நோன்பு இன்னுமொரு காரணத்திற்காகவும் அவசியப்படுகின்றது.
நாம் எல்லோருமே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள்; கொடிய யுத்தம் எமது மண்ணிலே வாழ்ந்த இந்துக்களை, கிறிஸ்த்தவர்களை, முஸ்லிம்களை பௌத்தர்களை என எல்லோரையும் தாக்கியிருக்கின்றது, இதனால் நாம் எல்லோருமே பாதிக்கப்பட்டிருக்கின்றோம். இப்போது யுத்தம் நிறைவடைந்திருக்கின்றது.
கடந்த ஐந்துவருடகால வாழ்வை எடுத்துப்பாருங்கள் யாழ்ப்பாணத்திலே பேசப்பட்ட முக்கிய விடயங்களைப் பாருங்கள் கற்பழிப்பு, சிறுவர் துஷ்பிரயோகம், கொலை, கொள்ளை,தற்கொலை, போதைவஸ்த்துப் பாவனை என எமது மக்களின் வாழ்வு சீரழிந்திருக்கின்றது. கடந்த வாரம் மாணவர்கள் தொடர்பிலான துஷ்பிரயோகங்கள் அமைந்து காணப்படுகின்றன, பல அதிபர்கள், ஆசிரியர்கள் இன்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள், ஒருசில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி அவர்கள் “யாழ்பாணத்திலேயே அதிக அளவிலான மதுபான விற்பனை நடக்கின்றது” என்று கூறியிருக்கின்றார். இவை எல்லாமே சமூகத்தீமைகள்தான், இவற்றுக்கான காரணம் என்னவென்று ஆராய்கின்றபோது “கொடிய நீண்டகால யுத்தம்” என்ற பதிலே எமக்குக் கிடைக்கின்றது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு சமூகங்கள் உலகில் இருக்கின்றன, வியட்னாம், ஜேர்மனி, கொரியா, ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான், ஜப்பானின் நாகசாகி ஹிரோஷிமா போன்ற நாடுகள் கொடிய யுத்த அழிவுகளை எதிர்நோக்கியிருந்தன, மேலைத்தேய நாடுகள் பல யுத்த அழிவுகளை எதிர்நோக்கியிருந்தன ஆனால் இன்று அவை முன்னேற்றப்பாதையில் பயணிக்கின்றன. இவற்றிற்கான காரணம் என்ன? அந்த சமூகங்கள் தாங்கள் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று விரும்பினார்கள், தமக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார்கள், முன்னோக்கி நகர்ந்தார்கள், அர்ப்பணங்களை செய்தார்கள், கடுமையாக உழைத்தார்கள்; அவர்களுக்கு ஒரு புதிய வாழ்வு கிட்டியது.
நாங்களும் ஒரு புதியவாழ்வை வேண்டி நிற்கின்றோம்; கட்டிடங்களை கட்டிவிட்டால், வீதிகளை அமைத்துவிட்டால், உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்துவிட்டால், புதியவாழ்வு வந்துவிடாது. இங்கிருக்கும் மக்களை சீரமைக்க வேண்டும், எமது மக்களை சீரமைக்க வேண்டும், எமது மக்கள் தம்மை மாற்றியமைத்து புதிய பாதையில் முன்னோட்டி நகரவேண்டும். இதற்கு யாழ்ப்பாணத்து முஸ்லிம்கள் றமழானை, நோன்பை பயன்படுத்த வேண்டும், நோன்பு ஏறபடுத்திய மாற்றங்கள் எமது பிரதேசத்தில் புதிய வாழ்வொன்றிற்கான ஆரம்பத்தை எமக்குத் தரும் என்ற எதிர்பார்ப்போடு வாய்ப்புக்கு நன்றிகூறி விடைபெறுகின்றேன். என்று தெரிவித்தார்.
மேற்படி இப்தார் நிகழ்வை ஜனாப் எம்.எம்.எம்.நிபாஹிர் தலைமையேற்று நடாத்தினார், எம்.எல்.லாபிர், ஜானாப் நிராஸ், ஜனாப் மஹனாஸ் ஆகியோரு நெறிப்படுத்தியிருந்தனர். இந்நிகவில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான கௌரவ.அ.பரஞ்சோதி, கௌரவ.எஸ்.சுகிர்தன், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பொ.தயானந்தன், மற்றும் அதிகாரிகள், மதகுருமார்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
எம்.எல்.லாபிர்