மேலும் சில அரசியல் பிரமுகர்களின் வாழ்த்துக்கள்..!

இக்பால் அலி

எம்மிடையே அகமும் புறமும் தூய்மைப் படுத்தி , ஒட்டு மொத்தமான பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்திச் செல்லும் நோன்பை நோற்று விட்டு இன்று பெருநாளைக் கொண்டாடும் எமது இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கு மனம் நிறைந்த இனிய பெருநாள் வாழ்துக்களைத் தெரிவிப்பதாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்துள்ளர். 

நோன்புப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் விடுத்துள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்

புனித நோன்பின் முக்கியத்தைவத்தை இலங்கையின் அனைத்து இன மக்களும் விளங்கி அதற்குரிய முதல்மரியாதையை வழங்கி வருவதை நாடு முழுவதும் காண்கிறோம். இது இலங்கையில் மட்டுமல்ல நோன்பின் சிறப்பை அதன் அடிப்படை அம்சங்களை உலகிலுள்ள அனைத்து மக்களது உள்ளதையும் ஈர்த்த இன்றியமையாத ஒன்றாக அது அமைந்துள்ளது. ஏழையின் பசியினை அறியப் பயன்படும் மிகச் சிறந்த ஆயுதமாக நோன்பு உள்ளது. உலக முழுவதிலும் அரசத் தலைவர்கள் கூட தங்களுடைய அரச மாளிகைளில் நோன்பு திறக்கச் செய்வதிலும் நோன்பு தொடர்பான செய்திகளை வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டி வரும் காட்சியை நாம் நாடுகள் முழுவதும் காண்கிறோம்.

இந்நிலையில் இலங்கை முஸ்லிம் எமது உண்மையான இஸ்லாம் மார்க்கம் காட்டும் வழிமுறையில் நின்று எம்மிடையே காணப்படும் கருத்து வேறுபாடுகளை மறந்து பரபரஸ்பர சிந்தனையின் மூலம் விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். எனவே இஸ்லாம் நாட்டின் மீது பற்றுக் கொள்வதை இஸ்லாம் மறுப்பதில்லை. தற்போது எமது நாட்டில் நல்லாட்சி மலர்ந்துள்ளது. எமது தனித்துவமான இஸ்லாமிய கலாசாரத்துடன் நின்று நோன்பு தரும் படிப்பினைளோடு ஏனைய சகோதர மக்களுடன் இணைந்து நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வோம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 ரவூப் ஹக்கீம்

இலங்கையிலும், உலக நாடுகளிலும் சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் முகங்கொடுத்து பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் 'ஈதுல் பித்ர்' பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் அணுகுவதற்குரிய ஆன்மீக பலத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் அருள வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.  ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அமைச்சர் ஹக்கீம் அந்தச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

இறையச்சம், சகிப்புத் தன்மை, ஈகை, புலனடக்கம், பரோபகாரம், புரிந்துணர்வு, நல்லிணக்கம் போன்ற உயர் பண்புகளை புனித ரமழான் நோன்பு காலம் உலகளாவிய முஸ்லிம்கள் மத்தியில் ஆண்டுதோறும் ஏற்படுத்துகின்றது. 

முஸ்லிம்கள்; நோன்பு நோற்று, ஏனைய சன்மார்க்க வணக்கங்களில் ஊறித் திளைத்திருந்த புனித ரமழான் மாதம் விடைபெற்றுச் செல்லும் பொழுது, ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறை தென்பட்டதும் 'ஈதுல் பித்ர்' பெருநாள் கொண்டாடப்படுகின்றது. 

இலங்கையை பொறுத்தவரை பொதுவாக சிறுபான்மை மக்கள் மீதும் குறிப்பாக முஸ்லிம்கள் மீதும் கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த அட்டூழியங்கள், அநியாயங்கள் என்பன இனிமேல் முற்றாக ஒழிந்துவிடும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு தீய இனவாத சக்திகளின் அண்மைக் காலச் செயற்பாடுகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள போதிலும், நல்லாட்சி அரசாங்கம் அதற்கு இடமளிக்க மாட்டாது என நாம் திடமாக நம்புகின்றோம். 

அத்துடன், அண்மையில் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளப் பெருக்கு ஆகியவற்றினால் பாதிப்புக்குள்ளான மக்களும், வடக்கிலும் கிழக்கிலும் இருந்து வெளியேற்றப்பட்டு அகதிகளாக வாழ்ந்து வரும் மக்களும், முன்னர் சுனாமி போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களும் துயரங்களுக்கு மத்தியில் இன்னுமொரு 'ஈதுல் பித்ர்' பெருநாளை சந்திக்கும் இவ் வேளையில் அவர்களது வாழ்விலும் சுபீட்சமும், விமோசனமும் ஏற்படுவதற்கு எங்களால் இயன்ற அனைத்து பங்களிப்புக்களையும் நல்குவதற்கு திடசங்கற்பம் பூணுவோமாக! 

இவ்வாறு அமைச்சர் ஹக்கீமின் பெருநாள் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரமழானில் பெற்ற பயிற்சிகளைத் தொடர்வோம் -மேயர் முஸம்மில்-

ரமழானில் நாம் பெற்ற பயிற்சிகளை தொடர்வதன் மூலமே அதன் வெற்றி தங்கியுள்ளது என்று கொழும்பு மாநகர மேயர் முஸம்மில் தனது பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,

புனித ரமழான் கண்ணியமிகுந்த மாதம். இறை விசுவாசிகளான நாம் இந்த புனித மாதத்திலே பசித்திருந்து விழித்திருந்து பகல் இரவுத் தொழுகைகளை நிறைவேற்றினோம். புனித குர்ஆனை ஓதி விளக்கம் பெற்றோம். இல்லாருக்கு உவந்தளித்து ஏழைகளை வாழ வைத்தோம். அன்பர்கள் அயலவர்கள் மீது பண்பும் பரிவும் காட்டி அவர்களுக்கு உதவி நல்கினோம்.

இந்த அரிய வாழ்க்கைப்பயிற்சி ரமழானுடன் நிறுத்தப்படாது வாழ்வு முழுவதும் தொடர வேண்டும். ரமழான் நிறைவு பெற்ற இன்றைய ஈகைத் திருநாளிலே ஈதுல் பித்ர் தொழுவோம். பித்ராவும் மனமுவந்தளிப்போம். இன்று தொடக்கம் இஸ்லாமிய நெறிகளை பேணி வாழ திடசங்கற்பம் பூணுவோம். பெருநாள் கொண்டாட்டத்தின் போது பிறருக்குத் துன்பம் ஏற்படாதவாறு நம்மை நாமே பேணிக் கொள்வோம். 

இன்று முஸ்லிம்களை இனவாதிகள் சீண்டிக் கொண்டே இருக்கின்றனர். சகோதர இனங்களுடன் மோத வைத்து வேடிக்கை பார்க்க நினைக்கின்றனர். இவர்களின் முயற்சிகளுக்கு நாம் இடமளிக்கக் கூடாது. உணர்ச்சிவசப்படாது பொறுமை காப்போம். விட்டுக்கொடுப்புடன் செயற்படுவோம். இனவாதிகளின் அடாவடித்தனங்களை அடக்க உதவி புரியமாறு இறைவனிடம் பிரார்த்திப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



 பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களின் புனித நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்தி.


மலர்ந்திருக்கின்ற ஈதுல் பித்ர் நோன்புப்பெருநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.   சிறப்பு மிக்க இத்தினத்தில் நம் அனைவரின் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாக வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன்.


 உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு இவ்வீகைத் திருநாளை மிக மகிழ்ச்சியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில்  நமது நாட்டில் முஸ்லிம்களுக்கெதிரான வேண்டத்தகாத சில இனவாத செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கியிருக்கின்றமை மிக வேதனைக்குரிய விடயமாகும்.  எனினும் இலங்கைவாழ் முஸ்லிம்களாகிய நாம் கடந்த காலங்களில் இவ்வாறு திட்டமிட்டு எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத நடவடிக்கைகளை எமது பொறுமையான, நிதானமான முன்னெடுப்புகளினூடாகவும் தொடர்ச்சியான பிரார்த்தனைகளின் ஊடாகவுமே வென்றெடுத்தோம். எனவே இவ்வேளையில் நாம் அனைவரும் எமது நாட்டில் இனங்களுக்கடையில் நிலையான சகவாழ்வும் மத நல்லிணக்கமும் பரஸ்பர நம்பிக்கையும் மேலும் வலுப்பெறுவதறகு  தொடர்ந்தும் பிராத்திக்கவேண்டும்.


 பலத்த எதிர்பார்ப்புக்களுடனும்  பலவேறு அர்ப்பணிப்புகளுக்கும் மத்தியில் நாம் கொண்டு வந்த இந்நல்லாட்சி மாற்றம் இப்பொழுது மக்களின் அபிலாஷகளை போதுமானளவு நிவர்த்தி செய்யும் வகையில் அமையப்பெறவில்லை எனும் ஆதங்கம் எம் அனைவர்களுக்குள்ளும்  தற்பொழுது தோன்றியிருக்கின்றது. எனவே இந்த நாட்டில் நாம் எதிர்பார்க்கும் உண்மையான நல்லாட்சி  ஒன்று உருவாவதற்கும் நாம் இத்தினத்தில் பிரார்த்திக்க கடமைப்பட்டுள்ளதுடன் அதற்காக ஒன்றுபட்டு பாடுபடுவதற்கான உறுதிப்பாட்டினையும் இந்நன்னாளில் நாம் மேற்கொள்ளவேண்டும்.

 அத்துடன் இன்று உலகலாவிய ரீதியில் எமது முஸ்லிம் சமூகம் உட்பட ஏனைய மக்களும் பல இன்னல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் மீட்சிக்காகவும் நல்வாழ்விற்காகவும் நாம் இன்றைய நாளில் பிரார்த்திக்கவேண்டும். 

மீண்டும்மொரு முறை,  அனைவருக்கும் எனது இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். 


அஸ்லம் எஸ்.மௌலானா-

அல்லாஹ்வை அச்சம் கொண்டு, அவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டு, றமழான் மாதம் முழுவதும் நோன்பை நிறைவேற்றி விட்டு பெருநாளை கொண்டாடுகின்ற இவ்வேளையில் முஸ்லிம்கள் தூய்மைமிக்க ஒரு சமூகமாக மாறி, ஏனைய சமூகத்தவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகமும் முன்னாள் கல்முனை மாநகர முதல்வருமான சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

'ஒவ்வொரு மனிதனும் அல்லாஹ்வை பயந்து, அவனது உண்மையான அடியானாக மாற வேண்டும் என்கின்ற உயர்ந்த தத்துவார்த்தத்தின் பேரிலேயே நம்மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும்.

அப்படி ஒரு தூய்மையான நிலைக்குத் திரும்பி, அதன் ஊடாக பாவ மன்னிப்பையும் நரக விடுதலையையும் இலக்காகக் கொண்டு பயணிக்கும் அதேவேளை மாற்று சமூகத்தவர்கள் நம்மைப் பார்த்து வியக்கின்ற அளவுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். அதுவே முஸ்லிம்கள் மீது அவர்கள் கொண்டுள்ள பிழையான- தப்பபிப்பிராயங்களை களைந்து, நல்லபிப்பிராயங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு வழியேற்படுத்தும்.

அதன் மூலம் மாற்று சமூகத்தவர்களுடன் பரஸ்பரம் நல்லுறவையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்பதுடன் முஸ்லிம் சமூகத்தின் மீதான ஒருதலைப்பட்சமான குற்றச்சாட்டுகளையும் நெருக்கடிகளையும் முடிவுக்கு கொண்டு வர முடியும் என நம்புகின்றேன். 

நாடு எதிர்பார்க்கின்ற நல்லிணக்கம், நிம்மதி, சமாதானத்திற்கு முஸ்லிம்களாகிய நாமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு இத்திருநாளில் திடசங்கற்பம் பூணுவோம். அதற்காக கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணைவோம்' என்று அவர் தெரிவித்துள்ளார்.



அனைவருக்கும் எனது இனிய பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் 

இன்று இலங்கையில் இனவாத அமைப்பான போது பல சேனா அமைப்பினர் முஸ்லிம்களின் கலாச்சாரம் மட்டும் பள்ளிவாயல்களை கட்ட விடாமல் தடுக்கின்ற அதேவேளை எல்லாமே வல்ல நாயன் அல்லாஹ் இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களை நின்மதியாக நோன்பு பெருநாளை கொண்டாடுவதற்கு வாய்ப்பளித்திருக்கிறான் அல்ஹம்துலில்லாஹ் 

ஆனால் உலக முஸ்லிம் நாடான ஆப்கானிஸ்தான் சிறிய பலஸ்தீன் போன்ற நாடுகளின் உள்ள முஸ்லிம்களின் உயிர்கள் உடமைகள் அழிக்கபட்டுக்கொண்டு இருக்கின்றன அத்துடன் நோன்பைக்கூட பிடிக்க முடியாத நிலைமையில் திறக்க ஒரு பேரீத்தம்பழம் கூட இல்லாத நிலையில் நாங்கள் இந்த நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியவேண்டும் அதுதான் நாம் முஸ்லிம்கள் என்ற நிலையில் அவர்களுக்கு செய்யும் பெரும் உபகாரமாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்


அஸ்லம் எஸ்.மௌலானா-

முஸ்லிம் சமூகம் தனது பாதுகாப்பையும் உரிமைகளையும் உத்தரவாதப்படுத்திக் கொள்வதற்கு தூய சிந்தனையுடன் ஆக்கபூர்வமான முயற்சிகளை முன்னெடுக்க இன்றைய ஈகைத்திருநாளில் திடசங்கற்பம் பூணுவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

'முஸ்லிம் சமூகத்தின் மீதான பேரினவாத கெடுபிடிகள் இன்னும் முற்றுப் பெறாமல் அங்கும் இங்குமாக தலைவிரித்தாடுகின்ற சூழ்நிலையில் சுயநலமற்றஇ தூரநோக்கு சிந்தனையுடைய மாற்று அரசியல் சக்தியின் தேவை உணரப்படுவதனால் அத்தகைய சக்தியொன்றை பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து எல்லோரும் சிந்திக்க வேண்டியுள்ளது.

தமது சுகபோகங்களுக்காக சமூகத்தை ஏமாற்றி வருகின்ற சக்திகளிடமிருந்து முஸ்லிம்கள் தம்மை விடுவித்துக் கொள்ளாத வரையில் முஸ்லிம் சமூகம் ஒருபோதும் தனது அபிலாஷைகளை அடைந்து கொள்ள முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பள்ளிவாசல்கள் மற்றும் சமய, கலாசார உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும,, கல்வி, பொருளாதார துறைகளுக்கு விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்கள் உடைத்தெறியப்பட வேண்டும், வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும், தென்னிலங்கை முஸ்லிம்களின் அரசியல் இருப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும், கிழக்கு முஸ்லிம்களின் காணிகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் பொதுவாக இந்நாட்டு முஸ்லிம்கள் தமது தாய் மண்ணில் அனைத்து உரிமைகளுடனும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான சூழ்நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும். 

ரமழான் மாதம் நமக்கு கற்றுத்தந்த படிப்பினைகள், சமூகம் வேண்டி நிற்கின்ற இத்தகைய சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்க உறுதுணையாக அமைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்' என்று கலாநிதி ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.


கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி..

அருளில் அளவற்றவனும் அன்பில் நிகரற்றவனுமான எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருநாமத்தை நினைந்தும், பொழிந்தும் புனித நோன்பின் முடிவில் பூத்திருக்கின்ற இவ் ஈகைத்திருநாளில் என் நல்வாழ்த்துக்களை முஸ்லிம் நெஞ்சங்களுக்குத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

இருள்படிந்த இதயங்களை இரா வணக்கங்களின் மூலம் வெளிச்சமாக்கி, இறைவன் தடுத்தவற்றை வெறுத்தும், மறுத்தும், ஒறுத்தும் ஒரு மாத உபவாசத்தின் மூலம் இதய சுத்தியுடன் இலங்கிக்கொண்டிருக்கும் நாம், எமக்கிடையே சகோதரத்துவத்தையும், பரஸ்பர நம்பிக்கையையும், அன்பையும், நேசத்தையும்இபாசத்தையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் பரிமாறிக்கொள்வோமாக !  இப்பரிமாற்றம் அரசியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் அமைய வேண்டுமென அவா கொள்கின்றேன்.

அல்லாஹ்வின் வேத மறைக் கூற்றுக்கு இசைவாகவும், அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரியான வழிகாட்டல்களுக்கு இணக்கமாகவும் நடந்து, நமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வோமாக ! இவ்வாறு நாம் நேரான வழியில் எமது அனைத்துக் காரியங்களையும் சீராக அமைத்துக்கொண்டால் இக்காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சதிமுயற்சிகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி எமது இலட்சியப் பயணத்தை வெற்றிகரமாக தொடரமுடியுமென்ற நிச்சயிக்கப்பட்ட நம்பிக்கை எனக்குண்டு.

ஆகவே, புனித நோன்புப்பெருநாள் எம் அனைவரையும் மனிதத்தை மதிக்கும் மக்களாகவும், புனித பணி தொடர்கின்ற நல்லவர்களாகவும் புடமிடுமாக! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பாதுகாப்பும், நல்லாசியும் எமக்கெல்லாம் மாரி மழையாய்ப் பொழிய வேண்டுமென இப்பொன்னான நோன்புப்பெருநாளில் மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்கின்றேன். உங்கள் அனைவருக்கும் எனது ஈதுல் பித்ர் நல்வாழ்த்துகள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -