முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் வேண்டுகோளையடுத்து கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் முஸ்லிம் மாணவர்களினதும் ஆசிரியர்களதும் நலன்கருதி எதிர்வரும் 7 ஆம், 8 ஆம் திகதிகளில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கியுள்ளார்.
குறிப்பிட்ட இரு தினங்களுக்கு மாற்றீடாக எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம், 16 ஆம் திகதியான விடுமுறை தினங்களில் முஸ்லிம் பாடசாலைகள் நடாத்தப்பட வேண்டுமெனவும் கல்வி அமைச்சு மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நோன்பு விடுமுறைக்காக கடந்த ஜுன் மாதம் 3 ஆம் திகதி மூடப்பட்ட முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் ஜுலை 7 ஆம் திகதி திறக்கப்பட வேண்டும் எனக் கல்வி அமைச்சு வெளியிட்டிருந்த பாடசாலைகளுக்கான விடுமுறை அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமைச்சர் ஹலீமின் வேண்டுகோளுக்கமைய எதிர்வரும் 7 ஆம், 8 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படவுள்ள முஸ்லிம் பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 11 ஆம் திகதி திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.