ஷபீக் ஹுசைன் -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட முயற்சியின் பயனாக மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலிய, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகள் சிலவற்றை அபிவிருத்தி செய்வதற்கு பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசீமினால் 25 மில்லியன் ரூபா உடனடியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக 24.06.2016 ஆம் திகதியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சாந்தி சமரசிங்க, 27.06.2016 ஆம் திகதியிட்ட கடிதத்தின் மூலம் அமைச்சர் ஹக்கீமுக்கு அறிவித்துள்ளார். அத்துடன், மத்திய மாகாண வைத்தியசாலைகளின் மேம்பாட்டில் அமைச்சர் செலுத்தி வரும் கரிசனையையிட்டு அவர் அதில் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த (ஜூன்) மாதம் 20ஆம் திகதி கண்டியில் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அலுவலகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசீம் மற்றும் மாவட்ட மருத்துவ அதிகாரிகள், ஏனைய உயரதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கமைவாக இந்த நிதி ஒதுக்கீடு உரியமுறையில் பயன்படுத்தப்படுமெனவும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சாந்தி சமரசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.