அதிர்ஷ்டம் எப்படி வருமென்று முகமது அப்துல் காதர் பஷீரிடம் தான் கேட்க வேண்டும். அப்படி ஒரு அதிர்ஷ்டக்கார மனிதர் அவர். கடந்த 3ம் தேதி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து சென்ற எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், டுபாய் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகி தீ பிடித்தது.
இந்த விபத்தில் சமயோசிதமாக பைலட் செயல்பட்டதில் 300 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அப்படி உயிர் தப்பியவர்களில் ஒருவர்தான், இந்த முகமது அப்துல் காதர் பஷீர். இது பஷீரின் முதல் அதிர்ஷ்டம். பஷீர், டுபாயில் ஒரு கார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். பஷீருக்கு வழக்கமாக லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உண்டு.
ரம்ழான் விடுமுறைக்காக கேரளா திரும்புகையில், பழக்கத்தின் காரணமாக டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் ‘டூட்டி பிரீ’ கடையில் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கி இருந்தார். ஊருக்கு திரும்பிய போதுதான் அந்த இன்ப அதிர்ச்சி அவருக்கு கிடைத்தது. குலுக்கலில் பஷீர் வாங்கிய லாட்டரிச் சீட்டுக்கு 3.67 மில்லியன் திர்ஹாம்ஸ் அதாவது இலங்கை ரூபாவில் பதினான்கரை கோடி பரிசு விழுந்துள்ளது.
இது இரண்டாவது அதிர்ஷ்டம். இதனால் முகமது அப்துல் காதர் பஷீர் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குடும்பத்தினரோ மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய் உள்ளனர். டுபாயில் முகமது அப்துல் காதர் பஷீர், இந்திய மதிப்பில் ஒன்றரை லட்ச ரூபாய் மாதச் சம்பளமாக பெற்று வந்தார்.
இப்போது ஒரே நாளில் கோடீஸ்வரராகி விட்டார். அதிர்ஷ்டக்கார மனிதரான முகமது அப்துல் காதர் பஷீர் இது குறித்து கூறுகையில், கடந்த 37 வருடங்களாக துபாயில் வேலை பார்த்து வருகிறேன். எளிமையான வாழ்க்கைதான் வாழ்கிறேன். தற்போது எனக்கு இரண்டாவது ஒரு வாழ்க்கையை இறைவன் அளித்துள்ளான்.
கருணை கொண்ட இறைவன் எனக்கு பணத்தை அள்ளி வழங்கியுள்ளான். இன்னும் 4 மாத காலத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். இந்தப் பணத்தில் தாய்நாடு திரும்பியபின் புதிய தொழிலும் தொடங்கப் போவதில்லை. ஏழ்மையில் வாடும் மக்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு நேரில் சென்று உதவ திட்டமிட்டுள்ளேன்.
நானும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன். அதனால் ஏழ்மையின் கொடுமை எனக்குத் தெரியும்'' என்றார். முகமது பஷீரின் மகன் பிறந்த 13வது நாளிலேயே உடல் நலம் பாதிக்கப்பட்டார். சிறு வயதில் இருந்தே நடக்க முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி போய் விட்டார்.
தற்போது அவருக்கு 21 வயதாகிறது. மகனது அறுவை சிகிச்சைக்காக பஷீர் 18 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்.