கடந்த 20 வருடங்களாக நாட்டின் எதிர்கட்சியாகவிருந்த ஐக்கிய தேசிய கட்சி இன்னும் 20 வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்யும் என இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். குறித்த 20 வருடங்களுக்குள் நாட்டின் அபிவிருத்தியை அதிகரிக்கவும் நாட்டு மக்களுடைய அடிப்படை வசதிகளை உயர்த்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று ஸ்ரீகொத்தா தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சி மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டதோடு தமது கட்சியின் பிரபலமான இருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது சுபீட்சமான காலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருப்பதால் கட்சிக்கு பெரிய பலம் என்றும் பிரதமர் தனக்கு கிடைக்கவிருந்த ஜனாதிபதி பதவியையும் விட்டுக்கொடுத்துள்ளார் என்றும் இராஜாங்க அமைச்சர் சுஜீவ தெரிவித்துள்ளார்.