சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் நாளை மறுதினம் சனிக்கிழமை (13) கல்முனை மாநகர சபையினால் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவிருப்பதாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமதின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படவுள்ள இவ்வேலைத் திட்டத்தின் பிரகாரம் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் அன்றைய தினம் முழுவதும் எழுபது ஊழியர்களுடன் 02 கொம்பெக்டர்கள், 02 பெக்கோ இயந்திரங்கள், 09 உழவு இயந்திரங்கள், 01 லொறி என்பன ஒரே தடவையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு, சுமார் 50 ஆயிரம் கிலோ கிராம் திண்மக் கழிவுகளை சேகரித்து அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்..
இத்திட்டத்திற்கு சாய்ந்தமருது பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் பெரிய பள்ளிவாசல் என்பவற்றின் ஒத்துழைப்பும் பெறப்படவுள்ளது. இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுவதுடன் அன்றைய தினம் காலை ஏழு மணி தொடக்கம் குப்பைக்கழிவுகளை பொதி செய்து, தத்தம் வீடுகளுக்கு முன்னால் வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.