ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என, அக் கட்சியின் முன்னாள் மாகாண சபை செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இந்த நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமைமையில் நடைபெறுமானால் அதில் பங்கேற்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று நெலும் மாவத்தையிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
வலல்லாவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உதேனி அதுகோரல, வென்னப்புவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சுசந்த பெரேரா, ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த, நாத்தாண்டிய பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் நிலந்த பிரணாந்து மற்றும் சிலாபம் பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் ரங்க பெரேரா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
மைத்திரிபால சிறிசேனவால் மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து கட்சித் தலைமைப் பொறுப்பு பலவந்தமாக பறிக்கப்பட்டதாக இதன்போது சுட்டிக்காட்டிய அவர்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஊட்டமளிக்கும் ஜனாதிபதியின் தலைமையை ஏற்கப் போவதில்லை எனவும் கூறியுள்ளனர்.
இன்றும் சில நாட்களில் மஹிந்தவின் தலைமைத்துவத்தின் கீழ் சம்மேளனம் ஒன்றை அமைக்க இடமுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.