ஏஎம் றிகாஸ்-
மட்டக்களப்பு- சொறுவாமுனை ஆற்றில் சட்டவிரோத வலைகள் தடைசெய்யப்பட்டதன் பிரதிபலனாக இன்று (11) மிக அதிகமான மீன்கள் பிடிபட்டுள்ளன.
இந்த மீன்களைப் பார்வையிடுவதற்கென பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் வாவிக்கரைக்கு வருகை தந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
இதனால் வாவி மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சுமார் ஓரிலட்சத்து முப்பதாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யக்கூடிய கோல்டன் ரக மீன்கள் இருபது வலைகளில் சிக்கியுள்ளன.
கடந்தகாலங்களில் ஒரு தோணியில் ஒரு நாளைக்கு சுமார் ஐந்நூறு ரூபா பெறுமதியான மீன்களே சிக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் சட்டவிரோத வலைகள் தடைசெய்யப்பட்ட பின்னர் நூல் வலைகளில் மீன்கள் சிக்கும் அளவு சற்று அதிகரித்துவருகிறது.
அண்மைக்காலமாக கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்க அதிகாரிகள்; சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்துவோருக்கெதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் விளைவாக மீன்கள் வளர்ச்சியடைந்துள்ளதுடன் நூல் வலைகளில் மிக அதிகமான மீன்கள் சிக்குவதாக மீனவர்கள் தெரிக்கின்றனர். தங்கூசி, டிஸ்கோ மற்றும் சிறிய கண் களைக்கொண்ட வலைகள் பயன்படுத்தப்படுவதனால் மீன்கள் அழிவடைவதைக் கருத்திற்கொண்டு இவ்வாறான வலைகள் சட்டரீதியில் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.