” கட்சிக்குள் அமைச்சுப் பைத்தியங்களாக சிலர் தட்டுத்தடுமாறித் திரிகின்றனர்” ஹனீபா மதனி

சப்றின்-

னி தரும் மரங்களையும் நிழல் கொடுக்கும் விருட்சங்களையும் நடுவதை இஸ்லாம் தர்மமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. மனிதனின் சுகவாழ்விற்கு இன்றியமையாத சுத்தமான சுற்றுச்சூழலுக்கு மரங்களையும், காடுகளையும் வளர்க்கும்படி விஞ்ஞானம் வலியுறுத்துகிறது என அக்கரைப்பற்று அமைப்பாளரும், மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், உயர்பீட உறுப்பினருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி கூறினார்.

அக்கரைப்பற்று புதுப்பள்ளிடியில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட காரியாலயத்தில் முஸ்லிம் காங்கிரஸின் வீட்டுக்கு வீடு மரம் என்ற திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றும் போதே மேற்படி கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;

கட்சியின் உயர்மட்டத்தில் சில கருத்து வேறுபாடுகள் நிலவும் இக்கால கட்டத்தில் தர்மத்தை மையப்படுத்திய 'வீட்டுக்கு வீடு மரம்' எனும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்படுவது கட்சிக்கும் சமூகத்திற்கும் ஆரோக்கியமாக அமையும் புரிந்துணர்வுடன் கூடிய ஒரு கூட்டுக்குடும்பம் போல் நீண்ட காலம் பயணித்து வந்த எமது கட்சி எதிர் காலத்திலும் பயன்தரும் விருட்சமாக நற்பணி செய்ய வேண்டும் என்பதே கட்சியை தூய்மையாக நேசிப்போரின் விருப்பமும் பிரார்த்தனையுமாகும்.

கட்சியின் தலைவர், செயலாளர், தவிசாளர் என்போர் ஒரு குடும்பத்தின் தாய், தந்தை, மூத்த சகோதரன் போன்றவர்கள். இவர்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் தோன்றுவது இயல்பானது. இணக்கமான முறையில் அம்முரண்பாடுகளை தீர்த்துக்கொள்வதற்காக செயற்பட வேண்டியது குடும்ப உறுப்பினர் அனைவரினதும்; முக்கிய கடமையாகும். அதுவே குடும்ப ஆரோக்கியத்துக்கு பயனுள்ளதாக அமையும்.

இதைவிடுத்து குடும்பத்திலுள்ள ஒரு பிள்ளை தாயின் புறமிருந்துகொண்டு பகிரங்கமாக தந்தையை விமர்சிப்பதும், இன்னொரு பிள்ளை தந்தையின் பக்கம் நின்று கொண்டு தாயை விமர்ச்சிப்பதும் குடும்பமானத்தைப் பற்றிய அக்கறை துளியும் இல்லாததன் வெளிப்பாடாகும். இத்தகைய குடும்பத்தில் அமைதியையும், சமாதானத்தையும் கண்டுகொள்ள முடியாது. இது தர்மமோ அல்லது இஸ்லாம் கூறும் வழிமுறையோ அல்ல.

குடும்பங்களில் முரண்பாடுகளும், பிளவுகளும் ஏற்படும் போது நல்ல தீர்வுக்காக எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை எமது வேதம் பின்வருமாறு நமக்கு கட்டளையிடுகிறது. கணவன் மனைவிக்கிடையில் முரண்பாடு தோன்றும் போது அவ்விருவர் சார்பாகவும் இவர்கள் குடும்பங்களிலுள்ள நல்லவர்களும், மூத்தவர்களும், முன்வந்து சமசரப் பேச்சுக்களை ஆரம்பித்து முரண்பாடு தொடர்பான பிரச்சினைகளை தீர விசாரித்து இணக்கப்பாட்டினை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். பிரிந்து நிற்கும் உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் நன்நோக்கில் சமரச முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஆனால் முஸ்லிம் காங்கிரசின் உட்கட்சி முரண்பாட்டினை சிலர் கட்சியின் நலனில் அக்கறை இல்லாமல் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் ஊதிப் பெரிதாக்கி அதில் தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களை சுறுட்டிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படுவது வேதனைக்குரிய விடயமாகும். இது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கும் எதிரானதாகும். இத்தகையவர்களின் விடயத்தில் நாம் அதிகம் விளிப்படையவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டிருக்கின்றது. குடும்பங்கள் மத்தியில் ஏற்படுகின்ற பிணக்குகளையும், முரண்பாடுகளையும் விவாகரத்து (தலாக்) வரை கொண்டு செல்வது இறைவனிடடத்தில் மிகவும் கோபத்திற்குரிய விடயமாகும் என்பதை நாயகத் திருமேனி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக நமக்கு எடுத்தியம்பியுள்ளார்கள்.

முரண்பாட்டினால் பிரிந்து நிற்பவர்களை இணக்கப்பாட்டின்பால் தூண்டி அவர்கள் மத்தியில் சமரசத்தையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதே முரண்பாடு பற்றி பேசுபவர்களின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். இதுவே மிகப்பெரிய கைங்கரியமாகும் என அல்குர்ஆன் எமக்கு கோடிட்டுக் காட்டுகிறது. (4:113)

இறைவனையே நிராகரித்து நியாயங்களையும், தர்மங்களையும் ஏற்கமறுத்த குறைசிக் காபிர்களுடன் கூட உச்சபட்ச விட்டுக்கொடுப்புக்களைச் செய்து ஹுதைபிய்யாவில் செய்து கொண்ட உடன்படிக்கையின் மூலம் இறை நிராகரிப்பாளர்களானாலும் விட்டுக்கொடுப்புக்கள் எப்போதும் வெற்றிகளையே கொண்டுவரும் என்பதை இறைத்தூதர் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் எமக்கு கற்றுத்தந்திருக்கின்றார்கள். ஆனால் இந்த உயரிய தத்துவங்களைக்கூட நம்மில் சிலர் மோசமாக விமர்சிப்பதன்மூலம் இம்முரண்பாட்டினை மேலும் சிக்கலாக்கி அதில் குளிர்காய முற்படுகின்றனர்.

சதா காலமும் கட்சிக்குள் பிச்சைப் பாத்திரம் ஏந்திநிற்பவர்களும் புதிதாக கட்சிக்குள் இணைந்து அமைச்சுப் பைத்தியங்களாய் அலைந்து திரிகின்றவர்களும், கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாட்டிற்கு இணக்கப்பாடான ஒரு தீர்வு காணப்படக்கூடாது என்பதில் மிக தெளிவாக செயற்பட்டு வருகின்றனர். முரண்பாட்டிற்கு சிறந்த தீர்வினை எட்டக்கூடிய வழிமுறைகளை எடுத்துக்கூறுகின்ற கட்சியின் நலன்விரும்பிகளின் கருத்துக்களை மிக மோசமாக இவர்கள் விமர்ச்சிக்கின்றனர், அவற்றிற்கு மிக அசிங்கமான அர்த்தங்களையும் கற்பிக்க முற்படுகின்றனர். இது எமது கட்சிக்குள் ஏற்பட்டுள் மிகப்பெரும் சாபக்கேடாகும்.

கட்சிக்குள் இருந்து கொண்டு அமைச்சுப் பைத்தியங்களாக தட்டுத்தடுமாறித் திரியும் இத்தகையவர்களின் கால்களுக்கு தட்டுக்குத்தி இடப்படும்வரை நாம் பொறுமை காத்தாகவேண்டியுள்ளது. வீட்டுக்கு வீடு மரம் எனும் இத்தகைய ஒரு நல்ல திட்டத்தை ஆரம்பித்துவைக்கும் இத்தருணத்தில் எமது கட்சியின் ஆரோக்கியத்திற்கு எதிராக கட்சிக்குள் இருந்துகொண்டே செயற்படும் துரோகத்தனங்களிலிருந்து எமது கட்சியை பாதுகாக்க எல்லாம் வல்ல இறைவனை நாம் பிரார்த்திப்பதுடன் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்' எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -