கிழக்கை வடக்கோடு இணைக்க முடியாது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா

எம்.ஜே.எம்.சஜீத்-
கிழக்கு மாகாணத்தை வடமாகாணத்தோடு இணைத்து முஸ்லிம் சமூகத்தை அடிமைச்சமூகமாக மாற்றுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

ஏறாவூர் பிரதேசத்தில் 500 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புக்கான காசோலை கையளிக்கும் நிகழ்வு ஆசிரியர் ஏ. றியாஸ் தலைமையில் நேற்று (21) ஏறாவூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்று அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் நாட்டிலே ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சி அரசும் மிகத் தெளிவாக இருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், சில தமிழ் சகோரர்களும், முஸ்லிம் சகோதரர்களும் வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைய வேண்டும் என்கின்ற கோசத்தையும் யோசனைகளையும் முன்வைத்துவருகின்றனர்.
குறிப்பாக அண்மையிலே சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசினுடைய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் வடக்கும் கிழக்கும் இணைவது தொடர்பாக பேச வேண்டும் நாம் கலந்துரையாட வேண்டும் கலந்துரையாடி பல தீர்மானங்களை எடுக்க வேண்டும் என ஒரு அறிக்கை விட்டிருக்கின்றார்.

ஒரு முஸ்லிம் சமூகத்தினுடைய தலைமைத்துவம் என்ற அடிப்படையிலல்ல சாதாரண போராளி என்ற அடிப்படையிலே 1987ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையும் இந்த சமூகத்தினுடைய அரசியல் விடுதலைக்காக பொராடிக்கொண்டிருக்கின்றவன் என்ற அடிப்படையில் மறைந்த மாபெரும் தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப்போடு சேர்ந்து இன்று வரை இந்த சமூகத்தினுடைய அரசியல் உரிமைகள் இந்த சமூகம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்கின்ற அந்த தோரனையிலே நாங்கள் மிகத் தெளிவாக சொல்லி வைக்க விரும்புகின்றோம் வடக்கும் கிழக்கும் இணைவதினை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இந்த விடயத்தில் நாங்கள் மிகத்தெளிவாக இருக்கின்றோம் இது கூட்டம் கூடி, கலந்துரையாடி அல்லது மாநாடுகளை நடாத்தி தீர்மானிக்கின்ற ஒரு விடயமல்ல வடக்கிலே இருந்து கிழக்கு பிரிந்திருக்கின்றது. மீண்டும் இணைய வேண்டும் என்கின்ற ஒரு வார்த்தையைக்கூட யாரும் பிரயோகிக்கக்கூடாது எந்தவொரு முஸ்லிமும் இவ்வாறான வார்த்தையைப் பயன்படுத்தவும் கூடாது.

வடக்கும் கிழக்கும் இணைந்திருந்த காலத்தில் நமது உறவுகள் கடத்தப்பட்டது இங்கு இரத்த ஆறுகள் ஓடியது ஆயிரக்கணக்கான மக்கள் அநாதையாக்கப்பட்டனர் இவைகளை நேரடியாக கன்டவர்கள் நாங்கள். இன்று இந்த மாகாணம் பிரிந்திருக்கின்றது பிரிந்திருக்கின்ற கிழக்கு மாகாணத்திலே ஹாபீஸ் நசீர் முதலமைச்சராகவிருக்கின்றார். வடக்கும் கிழக்கும் மீண்டும் இணையுமாகவிருந்தால் முஸ்லிம்கள் 16சதவீதமாக மாறி அடிமையிலும் அடிமைகளாக இந்த மண்ணிலே மாற்றப்படுவார்கள் அப்போது ஒரு முஸ்லிம் முதலமைச்சரைப் பெறமுடியுமா? அல்லது இந்த மாகாணம் எங்களுடையது என்று பேச முடியுமா?

இந்த நாட்டிலே ஒன்பது மாகாணங்கள் இருக்கின்றது ஒன்பது மாகாணத்திலும் 36 அமைச்சர்கள் இருக்கின்றார்கள் 8மாகாணத்திலே ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இல்லை இதனை எமது சமூகம் மிகத்தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். கிழக்கு மாகாணத்திலே மாத்திரம்தான் இரண்டு முஸ்லிம் அமைச்சர்கள் இருக்கின்றார்கள் முன்னர் பிள்ளையான் முதலமைச்சராகவிருந்தார். இன்று ஹாபீஸ் நசீர் முதலமைச்சராகவிருக்கின்றார்.

கிழக்கு மாகாணம் வடக்கோடு இணையுமாகவிருந்தால் ரவூப் ஹக்கீம் சொல்லுவதனைப் போல் வடக்கு கிழக்கு இணைய வேண்டுமென்ற அந்தப்பேச்சு உறுதிப்படுத்தப்படுமாக இருந்தால் கலிமாவைச் சொன்ன ஒரு முஸ்லிம் நாட்டிலுள்ள எந்தவொரு மாகாணத்திலும் அமைச்சராக இருக்கமுடியாது.

கடந்த வாரம் நான் பாராளுமன்றத்திலே இந்த விடயம் தொடர்பில் பேசிய போது பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் குறுக்கிட்டு நாங்கள் முஸ்லிம் ஒருவரை வட மாகாண சபையில் உறுப்பினராக்கியுள்ளோம் உங்களை நாங்கள் கௌரவித்துள்ளோம் என்றனர். அவர்கள் பிச்சை போட்டு கௌரவிப்பதல்ல இந்த கௌரவம் யாரும் எங்களுக்குப் பிச்சை போடத் தேவையில்லை யாரும் பிச்சை போட்டு இந்த சமூகத்தை மீண்டும் அடிமையாக்குவதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

வடகிழக்கு இணைப்பு தொடர்பில் திரைமரைவிலே பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சர்வதேச சக்திகள் அமெரிக்கா, நோர்வே போன்ற நாடுகள் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுத்து வருகின்றன. இந்த விடயத்தில் முஸ்லிம்களும், முஸ்லிம் தலைமைகளும் மிகத்தெளிவாக இருக்கவேண்டும் குறிப்பாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த விடயத்தில் மிகத்தெளிவாக பேசவேண்டும். அதேபோன்றுதான் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்டும் தெளிவாக பேச வேண்டும்.

குறிப்பாக வடக்கும், கிழக்கும் இணைவது என்ற பேச்சுக்கே யாரும் இடமளிக்கக்கூடாது அதுபற்றிப் பேசுவதற்கும் நாங்கள் யாரும் அனுமதிக்கவும் கூடாது. இன்று கிழக்கு மாகாணத்திலே மூவின மக்களும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். வடக்கு மாகாண சபையிலே முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் அனைவரும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களே உள்ளனர். கிழக்கு மாகாணத்திலே மாத்திரம்தான் முஸ்லிம், தமிழ், சிங்களம் என மூவின சமூகத்தவர்களும் அமைச்சர்களாக இருக்கின்றார்கள் மூன்று இனங்களும் ஆட்சி செய்கின்ற மாகாணமாக கிழக்கு மாகாணம் மாத்திரமே அமைந்துள்ளது.

எனவே மூவினங்களும் வாழுகின்ற இந்த மாகாணத்தை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டும் சர்வதேச சமூகத்தினுடைய ஒத்துழைப்போடு இந்த மாகாணத்தை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் முன்வர வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிரின் வேண்டுகோளின் பேரில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவின் முயற்ச்சியினால் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள சுமார் 500 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பிற்கான காசோலை இந்நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டது.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -