பாலியல் துஷ்பிரயோகத்துடன் பொதுபல சேனா தொடர்பு - கண்டியில் சம்பவம்

கண்டிப் பிரதேசத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் பொதுபல சேனா அமைப்பின் முக்கிய தலைமைப் புள்ளிகளுக்கு நேரடிச் சம்பந்தம் இருப்பதாக சகோதர சிங்கள பத்திரிகையொன்று பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி வருமாறு,

கண்டிப் பிரதேசத்தில் நடாத்தப்பட்டு வந்த உளநல விருத்திக்கான வதிவிடப் பயிற்சி நெறியில் கலந்துகொண்ட மாணவியர்களில் 9 பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு தங்கியிருந்த பெண் பிள்ளைகள் 17 பேரில், 15 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட 9 பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டுள்ளதாக வைத்தியப் பரிசோதனை அறிக்கை குறிப்பிடுவதாக பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸ் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிபுன தெஹிகம தெரிவித்திருந்தார்.

வதிவிடப் பயிற்சி நெறியைப் பெற்றுக் கொண்டிருந்த ஆறு மாணவர்கள் தங்கள் மீது புரியப்படும் இம்சைகளை பொறுக்க முடியாமல் கடந்த திங்கட்கிழமை அதிகாலை குறித்த நிலையத்திலிருந்து தப்பிச் சென்று காட்டில் தங்கியுள்ளனர். பின்னர் அயலிலிருந்தவர்களின் உதவியைப் பெற்று பொலிஸுக்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியெய்தத் தவறிய மாணவர்களுக்கு உளவளத்துறை பயிற்சியை வழங்கி, அவர்களை மீண்டும் பரீட்சைக்குத் தயார்படுத்தும் 6 மாத வதிவிடப் பயிற்சி தொடர்பில் பத்திரிகைகளில் வெளியான விளம்பரத்தையடுத்து பெற்றோர் தமது பிள்ளைகளை அங்கு சேர்த்துள்ளதாக பிரசாத புர்னிமால் ஜயமான்ன பி.பி.சி. சிங்கள சேவைக்கு அறிவித்துள்ளார்.

பிள்ளைகளின் பெற்றோர் இப்பயிற்சி நெறிக்கான கட்டணமாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாவை செலுத்தியுள்ளனர். இவ்வாறு பயிற்சி நெறியில் இணைந்து கொண்ட மாணவிகளுக்கு தமது பெற்றோரை சந்திப்பதற்கு மாதத்துக்கு ஒரு தடவைதான் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பிள்ளைகளின் பெற்றோருக்கு அறிவித்தல் வழங்காமல் இவர்களை இரண்டு நாட்கள் இரவு வேளையில் வெளியிலும் அழைத்துச் சென்றுள்ளதாக துஷ்பிரயோகத்துக்குட்பட்ட சிறுமியின் தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனது பிள்ளையைப் பார்க்கச் சென்றசமயம் தனது பிள்ளையுடன் ஒழுங்கான முறையில் கதைக்க முடியாதவாறு இடைஞ்சல் ஏற்படுத்தும் விதமாக அங்கிருந்தவர்கள் நடந்துகொண்டதாகவும் குறித்த தாய் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் திருப்தியளிக்காத வகையிலேயே காணப்பட்டதாக பிள்ளைகளின் பெற்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பி.பி.சி. சிங்கள சேவைக்காக பிரசாத் புர்னிமால் சம்பவம் தொடர்பில் குறிப்பிடுகையில்,

சம்பவம் குறித்து இருவேறு கருத்துக்கள் கிடையாது. இது தொடர்பில் பொதுபல சேனாவின் தலைவர்கள் மீதே நேரடியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மொரட்டுவ பிரதேசத்தில் கத்தோலிக்க ஆலயமொன்றில் இது போன்ற துஷ்பிரயோக சம்பவம் இடம்பெற்றதாக கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்போது, பொதுபல சேனா அமைப்பினரே முதலில் பாதைக்கு வந்து எதிராக குரல் கொடுத்தனர்.

இவர்கள் பொலிஸாரிடம் சம்பந்தப்பட்டவர்களை உடன் கைது செய்யுமாறு வற்புறுத்தினர். இதற்காக செயற்பட்டவர்களின் ஆடையே தற்பொழுது கலையப்பட்டுள்ளது. பொதுபல சேனா எனும் பெயரிலான அடிப்படைவாத அமைப்பு, கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று.

இந்த அமைப்புக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாய ராஜபக்ஷவின் முழுமையான அனுசரணை இருந்தது என்பதற்கு தக்க ஆதாரங்கள் காணப்படுகின்றன.

அக்காலத்தில் அரசாங்கத்துக்கு எதிராக எழுந்த மக்கள் எதிர்ப்பை முறியடிப்பதற்கு இந்த அமைப்பு இனவாதத்தையும், மதவாதத்தையும் பயன்படுத்தினர்.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இது போன்ற போட்டுக் கொடுக்கும் வேலையை செய்த பொதுபல சேனாவின் டிலந்த மற்றும் சந்திமால் ஆகிய இரு தலைவர்களுக்கு எதிராகவே மேற்படி துஷ்பிரயோக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவர்களே இந்தப் பயிற்சி நிலையம் தொடர்பிலான விளம்பரத்தை செய்துள்ளனர். இதற்காக சில ஊடகவியலாளர்களுக்கு பாரிய கொடுப்பனவை செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையம் குறித்த குற்றச் செயல் குறித்து சில பெற்றோர்கள் ஊடகங்களிடம் தெரிவிக்க முயற்சி எடுத்த போதிலும், ஏற்கனவே பணம் பெற்ற ஊடகவியலாளர்கள் அதற்கு தடையாக செயற்பட்டுள்ளனர்.

பொதுபல சேனாவின் உயர் பீடத்தினர் ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் இதற்கு முன்னரும் எழுதியுள்ளோம். இருப்பினும், ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் அவர்களுக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவற்றை மறைத்துக் கொண்டனர். அப்போதைய பாதுகாப்பு அமைச்சு இந்த தலைவர்களை பாதுகாத்தனர். இந்த பொதுபல சேனா அமைப்பினருக்கு பல கோடி ரூபா நிதி வந்துள்ளது. இதுதொடர்பில் விசாரணை நடாத்த தடைவிதிக்கப்பட்டது.

கடந்த 2015 ஜனவரி 08 ஆம் திகதி புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டதன் பின்னர், இந்த பொதுபல சேனா அமைப்பும் அதன் தலைவர்களும் அமைதியான ஒரு போக்கை கையாண்டனர். சப்தமில்லாது இருந்தனர். இருப்பினும், இதற்கிடையிலும், புதிய அரசாங்கத்தின் சில “டீல்” காரர்களுக்கு பணம் வாரி இறைக்கப்பட்டது.

இதனால், இவர்களின் பாதுகாப்பு இந்த அரசாங்கத்திலும் உறுதி செய்யப்பட்டது. புதிய அரசாங்கத்திலும் சுமார் ஒன்றரை வருடங்களாக டிலந்த விதானகே எந்தவிதப் பிரச்சினையும் இன்றி இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வந்தமை இதனாலாகும்.

இச்சம்பவத்துடன் அவரது துணி களையப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த அரசாங்கத்திலுள்ள தலைவர்களைப் போன்று இந்த அரசாங்கத்திலுமுள்ள சில தலைவர்கள் அவர்களுக்கு மீண்டும் ஆடை அணிவிக்க முயற்சி எடுக்கின்றார்கள் என்பது நிச்சயம். இதனால், அரசாங்கம் முதுகெலும்புடன் இது தொடர்பில் செயற்படுவது அவசியமாகும்.

இனவாதத்தையும் மதவாதத்தையும் துண்டி நாட்டில் தீ மூட்டி கூட்டிக் கொடுக்கும் வேலையை செய்துவந்த பொதுபல சேனா அமைப்பு, தற்பொழுது முழு நிர்வாணமாக நின்று கொண்டுள்ளது. இவர்களின் சுயரூபம் தெரியாது ஏமாந்த அப்பாவி மக்கள் இப்போதாவது உண்மையைத் தெரிந்துகொள்வார்கள்.

அத்துடன், தங்களையே படுகுழியில் தள்ளிக் கொண்ட இந்த மோஷமானவர்களுக்கு தப்பித்துக் கொள்ள இடமளிக்கக் கூடாது. பாதிக்கப்பட்ட குறித்த சிறுமிகள் இந்த நியாயத்தைப் பெற்றுத் தருமாறே கேட்கிறார்கள் எனவும் புர்னிமால் மேலும் கூறியுள்ளார். 

dailyceylon 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -