நெருப்புக்குள்ளே நின்று போராடும் சமூகமாக முஸ்லிம் சமூகம் இருக்கின்றது - அமைச்சர் றிசாத்

சுஐப் எம்.காசிம் 

பெரும்பான்மை இனவாத சக்திகளைத் தோற்கடிக்க வேண்டுமென்ற நோக்கிலே கடந்த ஆட்சியில் ஒன்றுபட்ட தமிழர்களும், முஸ்லிம்களும் தற்போதைய நல்லாட்சியிலும் ஆரோக்கியமான சிந்தனைகளை வளர்த்து, தொடர்ந்தும் நல்லுறவு பேணவேண்டியது காலத்தின் தேவையாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். 

சாய்ந்தமருது பன்னூலாசிரியர் எம்.எம்.எம்.நூருல் ஹக் எழுதிய “முஸ்லிம் அரசியலின் இயலாமை” என்ற நூல் வெளியீட்டு விழா, கொழும்பு வை.எம்.எம்.ஏ அரங்கில் நேற்று மாலை (07/08/2016) இடம்பெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர், நூலை வெளியிட்டு வைத்ததுடன், நிகழ்விலும் உரையாற்றினார். 

முஸ்லிம் மீடியா போரத் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேஷன், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஜெமீல் ஆகியோரும் உரையாற்றினர். தொடக்க உரையை அஷ்ரப் சிஹாப்தீன் நிகழ்த்த, நூல் ஆய்வை எழுத்தாளர் பீர் முஹம்மத் மேற்கொண்டார். தொழிலதிபர் முஸ்லிம் ஹாஜியார் முன்னிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், புரவலர் ஹாஷிம் உமர் முதல் பிரதியைப் பெற்றார். பிரதி அமைச்சர் அமீர் அலியும் சிறப்பு அதிதியாகப் பங்கேற்றிருந்தார். 

அமைச்சர் இங்கு உரையாற்றியதாவது, 

மனித வாழ்வென்பது குறுகியது. வாழும் காலத்திலே நம்மால் முடிந்ததைச் செய்யும் மனப்பாங்கு வேண்டும். உலகத் தலைவர்களிலே, உன்னதமான தலைவராக முதற்தர பெருந்தலைவராக பெருமானார் (ஸல்) அவர்களை அமெரிக்க சிந்தனையாளர் ஒருவர் அடையாளங்கண்டுள்ளார். புத்தபெருமான், இயேசுநாதர் ஆகியோரையும் தனது நூலில் உள்ளடக்கிய அவர், இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்களையும் 100 பேர்கொண்ட அந்த வரிசையில் இடம்பெறச் செய்துள்ளார். பெருமானாரையும், உமர் ரலியையும் அவர் உள்வாங்கியமைக்கு, அவர்களது ஆட்சி முறையும், மக்கள்பால் அவர்கள் கொண்ட நேசமும், நேரிய பணிகளுமே காரணமென குறிப்பிடுகிறார். 

பெயரளவில் நாங்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது. பெருமானார் காட்டித்தந்த வழிமுறையில் வாழ வேண்டும். மனிதன், புனிதன் அல்லன். பிழை விடக்கூடியவன். எனவேதான் இறுதித்தூதர் பெருமானார் எவ்வேளையிலும் பாவமன்னிப்புக் கேட்பவராக இருந்தார்கள்.

சமூகங்களுக்கிடையே பாரிய இடைவெளி அதிகரித்து வருகின்றது. கடந்த காலங்களில் பேதங்கள் குறைவாகவே இருந்தன. புத்தளம் பள்ளிவாயலில் முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போது, தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்றோர் எமக்காக குரல்கொடுத்தனர். “புலிகளால் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்தில் குடியேற்றப்படும் வரை எனது கால்களை அந்த மண்ணில் பதிக்கமாட்டேன்” என சிவசிதம்பரம் ஐயா சூளுரைத்தார். கடைசியில் அவரது பூதவுடலே அங்கு சென்றது. 

முஸ்லிம் சமுதாயத்தின் முன்னோடித் தலைவர்களான சேர் ராசிக் பரீத், டீ.பி.ஜாயா போன்றவர்கள் பிறசமூகங்களுடன் ஐக்கியமாக வாழ எமக்குக் கற்றுத் தந்திருக்கின்றனர். தமிழ்,சிங்களச் சகோதரர்களுடன் இன உறவைப் பேணி வாழவே இன்னும் நாம் முயல்கின்றோம். அந்த உறவுக்கு முட்டுக்கட்டையாக ஒருசில அரசியல்வாதிகளும், இனவாதிகளும் இன்னும் இருப்பதுதான் வேதனையாக இருக்கின்றது. ஒருசிலர் தமது அரசியல் இருப்புக்காக இரண்டு சமூகங்களையும் மாறிமாறி பந்தாடி வருகின்றனர். கலந்துரையாடல்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதே மிகச்சிறந்த வழிமுறை. இதய சுத்தியுடன் மனந்திறந்து பேசினால் நல்லுறவு நீடிக்கும். 

எழுத்தாளர் நூறுல் ஹக் எழுதிய முஸ்லிம் அரசியலின் இயலாமை என்ற நூலின் பின்னணியில் நாம் சில யதார்த்த விடயங்களைக் கூர்ந்து நோக்க முடிகின்றது. பாதிக்கப்பட்ட சமுதாயத்தில் வாழும் அவர், தமது உள்ளக்கிடக்கைகளையும், வேதனைகளையும் எழுத்துக்களாக வடித்துள்ளார். 

உதாரணமாக மர்ஹூம் அஷ்ரபின் காலத்தில் அவரது சிந்தனையில் உருவாக்கப்பட்டதே ஒலுவில் துறைமுகம். அம்பாறை மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தூரநோக்கில், அவரது பகீரத முயற்சியினால் அமைக்கப்பட்ட அந்தத் துறைமுகம், இன்று அவரது மறைவின் பின்னர், சீரற்றுக் காணப்படுவதை நாம் அவதானிக்கின்றோம். இங்கே ஏற்பட்டிருக்கும் கடலரிப்பால், ஒலுவில் கிராமமக்கள் படுகின்ற வேதனைகள் ஏராளம். அவர்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு இன்னும் நஷ்டஈடு வழங்கப்படவில்லை. அந்தப் பிரதேச விவசாயக் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. அதே போன்று நுரைச்சோலை வீடுகளின் பரிதாப நிலை. அம்பாறை கரும்புச் செய்கையாளர்கள் வாழ வழியின்றி படுகின்ற கஷ்டங்கள். இவைகளை நாம் சர்வசாதராணமாக எடுத்துவிட முடியாது. 

24 வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமது பூர்வீகப் பிரதேசத்தில் குடியேற முனையும் போது. வில்பத்துவை அழிப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர். அவர்களின் பிரதிநிதியான என்னை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு முயற்சிக்கின்றனர். இனவாத ஊடகங்கள் திட்டமிட்டு இந்தப் பரப்புரைகளை மேற்கொள்கின்றனர். இதற்கென்றே பிரத்தியேகமான முகநூல்களும், இணையத்தளங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 

நண்பர் பிரபா கணேஷன் கூறியதுபோன்று, நல்லாட்சியிலும் தொடரும் இந்த அட்டூழியங்களை மேற்கொண்டு வரும் எதிரிகளை நாம் இனங்காண முடியாது தவிக்கின்றோம். ஏதாவது முயற்சிகளை அதற்காக நாம் மேற்கொண்டால் சட்டத்தில் இடமில்லை என்று சாக்குப்போக்குச் சொல்கின்றார்கள். மொத்தத்திலே முஸ்லிம் சமூகம் நெருப்புக்குள்ளே நின்று போராடும் சமூகமாக இருக்கின்றது என்பதை வேதனையுடன் கூறுகின்றேன். 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -