"இலங்கை முஸ்லிம்களுக்கு இன ரீதியாக தனியான கட்சிகள் அவசியமில்லை" அமீர் அலி

அஸ்லம் எஸ்.மௌலானா-

லங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இன ரீதியாக தனியான கட்சிகள் அவசியமில்லை. அவ்வாறான கட்சிகளின் தோற்றத்தினால்தான் இன்று முஸ்லிம்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என அவுஸ்திரேலிய பல்கலைக்கழக பொருளியல்துறை பேராசிரியரான காத்தான்குடியைச் சேர்ந்த டொக்டர் அமீர் அலி தெரிவித்தார்.

மர்ஹூம் சேர் ராசிக் பரீத் தேசியக் கட்சியில் அங்கம் வகித்து கொண்டு, முஸ்லிம் சமூகத்திற்காக ஆற்றிய சேவைகளை விட வேறு எந்த முஸ்லிம் அரசியல் தலைமையும் தனிக் கட்சிகளினால் எதையும் சாதித்து விடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அறிஞர் சித்திலெப்பை ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சட்டத்தரணி மர்ஸூம் மௌலானா தலைமையில் அக்கரைப்பற்றில் நடைபெற்ற அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடலில் உரையாற்றுகையிலேயே அவர் இவற்றைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் பேசுகையில் மேலும் கூறியதாவது;

"முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்க போராடுவோம் என்று கூறுகின்றார்களே. அப்படி இந்த நாட்டில் மாற்று இனங்கள் அனுபவித்துக் கொண்டு, எமக்கு மறுதலிக்கப்பட்டிருக்கின்ற உரிமைகள் எவை என்பதை யாராவது பட்டியலிட்டு சொல்ல முடியுமா? நிச்சயமாக ஒன்றும் இல்லை. அவரவர் அரசியலுக்கான கோஷங்கள்தான் அவை என்பதை மக்கள் புரிந்து கொள்ள தயாரில்லை. அதனால் இந்த இழிநிலை தொடர்கின்றது.

இந்த நாட்டு முஸ்லிம்கள் உணர்ச்சிகளுக்கு அடிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். எதையும் நேர்மையாக சிந்திப்பதற்கு தயாரில்லை. எமது பெறுமதியான இளைஞர்கள் வைராக்கியமிக்கவர்களாக மாற்றப்பட்டிருக்கின்றனர். எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் பிரிந்து நின்று கோஷமிடவே பழக்கப்பட்டிருக்கின்றோம். இவைதான் முஸ்லிம் கட்சிகளினால் எமது சமூகத்திற்கு ஆற்றப்பட்டுள்ள சாதனைகளாகும்.

இந்த நாட்டில் முஸ்லிம்கள் பூர்வீக குடிமக்கள் என்கின்றோம். நூற்றாண்டு கால பழைமையை சொல்கின்றோம். ஆனால் அதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உண்டா? எமது வரலாறு எழுதப்பட்டிருக்கிறதா? புராணக் கதைகள், சட்டத்தின் முன் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. எமது சமூகம், எமது பிரதேசங்கள் தொடர்பில் முக்கிய விடயங்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் எம்மிடம் கிடையாது. ஆவணங்கள் இல்லை. அவற்றை சேகரிப்பதற்காக முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. ஆனால் கோஷம் மட்டும் எழும்பிக் கொண்டிருக்கின்றோம்.

பிரச்சினைகள் எழுகின்றபோது நாம் இனத்தை முன்னிறுத்துகின்றோம். அது பிரச்சனைகளை இன்னும் ஊதி பெருப்பித்து பூதாகரமாக மாற்றி விடுகின்றன. நாமும் இந்த நாட்டு பிரஜைகள் என்றே எமது தேவைகளைக் கேட்க வேண்டும். எமது பிரச்சனைகளை நாட்டுப் பிரஜை என்ற ரீதியில் அணுகினால் நீதிமன்றம் கூட எமக்கு சாதகமான தீர்வுகளை பெற்றுத்தரும். அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் அவ்வாறுதான் தமது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்கின்றனர்.

உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு, மாற்று இனத்தவருடன் பகைமை பாராட்டுவதனால் நாம் எதனையும் சாதித்து விட முடியாது. பல்லின சமூகங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில், அதுவும் நாம் சிறுபான்மையினராக வாழ்கின்ற சூழ்நிலையில் அனைத்து விடயங்களிலும் மாற்று இனத்தவருடன் கைகோர்த்து செயற்படுவதன் மூலமே அவர்களது அரவணைப்பை முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ள முடியும். அப்படி ஒரு நிலைமை தோன்றுமாயின் நமக்கு யார் அநியாயம் இழைக்கப்போகிறார்கள்? 

சிந்திக்காமல் செயற்படுவதனால்தான் நாம் சாதாரண விடயங்களை கூட சாதித்துக் கொள்ள முடியாமல் திண்டாடுகின்றோம். கசப்பாக இருந்தாலும் உண்மைகளை ஏற்றுக் கொள்கின்ற பக்குவம் எம்மிடம் வர வேண்டும்.

முஸ்லிம் தேசியம் பற்றி பேசுகின்றோம். ஆனால் நம்மிடம் போதுமான நிலம் இல்லை என்பதை நாம் அறியாமல் இருக்கின்றோம். நிலம் இல்லா விட்டால் தேசியம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் 30 வீதமாக வாழ்கின்ற நிலையில் அவர்களுக்கான நிலம் 03 (மூன்று) வீதம் மட்டுமே உள்ளது. இதனை அதிகரிப்பதற்கோ, இருப்பதை காப்பாற்றுவதற்கோ எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இது போன்று முஸ்லிம்களுடன் தொடர்புடைய புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் வரலாறு பக்கச்சார்பின்றி தொகுக்கப்பட வேண்டும். நிறுவன ரீதியாக இப்பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இந்த யதார்த்தங்களை புரிந்து கொண்டு சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஐம்பது இளைஞர்கள் முன்வருவார்கள் என்றால் அவர்களை வழி நடத்துவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்" என்றார்.

அவரது உரையைத் தொடர்ந்து அவரால் சொல்லப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் அவர் விளக்கமளித்தார். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் முன்னாள் ஸ்தாபகத் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.


(எம்.ஏ.றமீஸ்)

இந்த நாட்டிலுள்ள அனைத்து சமூகத்தினரும் தத்தமது இனத்தை மையப்படுத்திய கோசத்தினைக் கைவிட்டு விட்டு நாம் இந்த நாட்டின் தேசிய பிரஜை என்ற கோதாவில் குரல் எழுப்புகின்றபோது எமது நாட்டிலுள்ள ஒவ்வொரு இனத்தவருக்கும் கிடைக்க வேண்டிய அனைத்து விடயங்களும் மிக எளிதாய்க் கிடைத்து விடும் என அவுஸ்திரேலிய பல்கலைக்கழக பேராசிரியர் அமீர் அலி தெரிவித்தார்.

அறிஞர் சித்திலெவ்வை ஆராய்ச்சி யைத்தினால் ஏற்பாடு செய்யபட்ட அரசியலமைப்பு சீர்திருத்தம் சம்பந்மான விஷேட கலந்துரையாடல் அக்கரைப்பற்று ரீ.எப்.சி.ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆய்வு மையத்தின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.என்.மர்சூம் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடந்தும் அவர் உரையாற்றுகையில், இந்த நாட்டில் எமக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இன ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரிந்து நின்று பேசுவதில் நாம் பூரண பயன்பாட்டினை பெற்றுவிட முடியாது. நாம் அனைவரும் இந்நாட்டின் பிரஜை என்ற அடிப்படையில் செயற்பட்டு குரல் கொடுக்கின்றபோது எமக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் உரிய முறையில் வந்து சேரும்.

கடந்த 1948 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை நம் நாட்டிலுள்ள மூவின சமூகத்தவர்களும் நமது இனம் இனம் என்றுதான் பேசியிருக்கின்றோமே தவிர நாட்டின் உறுதியான பிரஜை என்று பேசவில்லை. தற்போது அதுபற்றிப் பேசவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மூவினத்தவர்களும் இலங்கைப் பிரஜை என்ற அடிப்படையில் ஒன்றுபடலாம். அவ்வாறு ஒன்றுபட்டு எமது கோரிக்கைகள் முன்வைக்கப்டுகின்றபோது நமக்கான அனைத்து விடயங்களையும் இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும். ஆளுக்கொரு கட்சி வைத்துக்கொண்டு பேசுவதெல்லாம் எதிர்காலத்திற்குப் பொருந்தாது. அனைவரும் நாட்டின் பிரஜை என்று ஒருமித்துக் குரல் கொடுப்போமேயானால் எம்மத்தியில் ஒற்றுமை மிளிர்வதுடன் நமக்கு வேண்டியவையினையும் இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் நாம் முஸ்லிம்கள் என்று பிரித்துப் பிரித்து பேசுவதால் எமக்கான தேசியமே கேள்விக்குறியாகி காணப்படுகின்றது. முஸ்லிம்கள் குறிப்பாக மற்ற சமூகத்தனை இணைக்கின்ற பாலமாக செயற்பட வேண்டியவர்கள். இந்த நாட்டிலுள்ள மூவின சமூகங்களையும் இணைத்துச் செயற்படுகின்றபோது பல்வேறான விடயங்களை நமது முஸ்லிம்கள் இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும். முஸ்லிம்களுக்கென்று தனிக் கட்சி என்ற தேவை இல்லை.

கடந்த 1947ஆம் ஆண்டு முதல் இன்று வரை நமது முஸ்லிம்கள் அனைத்து விடயங்ளையும் பிரித்துப் பிரித்துத்தான் பேசி வருகின்றார்கள். தேசியம் என்ற பிரச்சினையை விட்டு தேசிய விடயங்களுக்காக இந்த நாட்டிலுள்ள எந்தவொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராவது தேசிய விடயத்திற்காக உருக்கமான ஓர் உரையை ஆற்றியிருக்கின்றார்களா என்றால் விடை பூச்சியமாகவே அமையும். நமது முஸ்லிம்கள் அவ்வாறு தேசிய விடயங்களுக்காக இலங்கைப் பிரஜை என்ற அடிப்படையில் பேசியிருந்தால் நமது பக்கம் அனைத்துச் சமூகத்தினரும் தலை சாய்த்திருப்பார்கள்.

நமது முஸ்லிம்கள் தேசத்தை இணைத்துப் பேசவில்லை. அனைத்தையும் நாம் பிரித்துப் பிரித்துத்தான் பேசி வருகின்றோம். முஸ்லிம்களுக்கு உரிமை இல்லை, தமிழர்களால் எமக்கு ஆபத்து என்றெல்லாம் பேசுவதால்தான் எமக்கு ஆபத்து நேர்ந்தது. பிரித்துப் பிரித்துப் பேசுவதால் எமக்கான தேசியம் இழக்கப்படுகின்றது. நூம் இந்த நாட்டின் முக்கிய பிரஜை. திடமான வரலாற்றினைக் கொண்டவர்களாக நாம் இருக்கின்றோம். நமது முஸ்லிம்கள் இளம் சமுதாயத்தினரை வைதீக அடிப்படையில் வளர்த்தக்கொண்டு வருகின்றோம். முஸ்லிம்கள் சிந்திக்கத் தொடங்கியதாலேயே முன்னேற்றமடைந்தார்கள். தற்போது நாம் சிந்திக்கமால் இருப்பதால்தான் சில விடயங்களைபக்கூடப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக உள்ளோம். நமது இளைஞர்கள் சுயமாக சிந்தித்து செயற்படும் வகையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் எதைச் செய்ய வேண்டுமாக இருந்தாலும் எமக்கான தகவல் தேவையாக உள்ளது. எம்மிடம் எந்தத் தகவல்களும் புள்ளிவிபர அடிப்படையில் ஆவணமாக இல்லை. இதனை தொகுக்கும் பணியில் யாருமே செயற்படவில்லை. முஸ்லிம்கள் பற்றிய புராணங்களும், இதிகாசங்களும், கதைகளும் பல உள்ளன. அவை ஒன்றும் சட்டத்தின் முன் ஆதாரமாக முடியாது. நமது வரலாறுகள் உடனடியாக ஆவணமாக்கப்பட வேண்டும். அது பக்கச் சார்பற்ற விதத்தில் தொகுக்கப்படவேண்டும்;. அப்போதுதான் உறுதியாக நம்மைப்பற்றி பேசமுடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் நமது முஸ்லிம் சமூகத்தினர் 30 சதவீதத்தினராக வாழ்கின்றனர். இந்த 30 சதவீத முஸ்லிம்கள் மூன்று சதவீத நிலத்தினைக் கொண்டவர்களாகவே உள்ளோம். இவ்விடயத்தினைப் பற்றி எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினராவது பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றார்களா? இவ்வாறான விடயத்தினை தமிழர்கள் நன்குணர்ந்திருக்கின்றார்கள். கடந்த 1956ஆம் ஆண்டு முதல் அமரர் செல்வநாயகம் கேட்டு வந்திருக்கின்றார். நமது முஸ்லிம் சமூகத்தின் முக்கிய பிரச்சினையாக நிலம் உள்ளது. நிலம் இல்லை என்றால் எமது இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தமட்டில் 30 சதவீதமானவர்கள் மூன்று சதவீத நிலத்தில் வாழ்ந்தாலும் அதனை விஸ்தரிக்காவிட்டாலும் அதனை தொடர்ச்சியாக காப்பாற்றக்கூடிய மாற்று வழிபற்றி நாம் ஏதாவது நடவடிக்கைள் மேற்கொண்டிருக்கின்றோமா? அரசியல் சீர்திருத்த சட்டங்கள் வருகின்றபோது எமக்கான முக்கிய பிரச்சினைகளை எப்படி முன்வைக்கலாம் என்று சிந்தித்துச் செயலாற்ற வேண்டியுள்ளது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -