ஆயிரம் விதைகளை தூவிவிட்டு நீ ஆழ்துயில்கொள்கிறாய் அண்ணா.
எளிமையான வார்த்தைகளில்
வலிமையான கருத்துக்களை குழைத்து
வாழ்வு கலந்து வழங்கியவன் நீ
வளையாத வயதிலே இலையாக உதிர்ந்தாயே.
நான் மலராத காலத்திலும் காயாகும் நேரத்திலும் கனியான உன் பாடல்களில் பலதடவைகள் பசிதீர்த்திருக்கிறேன்.
நீ பாராட்டுகளில் வளர்ந்தாய் உன்னை பார்த்து பார்த்து நான் வளர்ந்தேன்.
ஏனோ தெரியவில்லை நீ உன் பேனைக்கு ஓய்வுகொடுக்கும் முதல்நாள் சனிக்கிழமை நீ எழுதிய 'அணிலாடும் முன்றில்' நூலை மீண்டும் படிக்கவேண்டும் என்ற எண்ணம் முளைத்தது.
கடந்துபோன வெள்ளப்பெருக்கினால் தளர்ந்துகிடக்கும் எனது நூலகத்தில் உன்னை தேடித்தேடி களைத்துப்போனேன்.கடைசிவரை தேடியும் உன்னை காணவில்லை. நண்பனுக்கு இரவல் கொடுத்தது பின்னர்தான் நினைவுக்கு வந்தது.மறுநாள் காலை நீ இறந்த செய்தி அறிந்து இடிந்துபோனேன்.
கண்ணதாசனுக்கு 'கண்ணே கலைமானே' பாடல் எப்படியோ அதுபோல உனக்கு 'ஆனந்த யாழ்' என்பது எவ்வளவு உண்மையானது.
இதுவரை உன்னை நான் சந்திக்கவில்லை.அந்த ஆனந்த நாளுக்காக வழிமேல் விழிவைத்து காத்திருந்தேன்.
நீ பாடல் எழுதிய 'சூதுவாது' திரைப்படத்தில் நானும் ஒரு பாடல் எழுதியிருந்தேன். இசை வெளியீடு விரைவில் இருப்பதாக அறிந்தேன் அந்த தருணமும் பறிபோனது.
இயக்குனர் செல்வாவின் இயக்கத்தில் வெளிவரவுள்ள 'தொப்புள்கொடி' திரைப்படத்தில் மொத்தமாய் ஐந்து பாடல்கள். இரண்டுபாடல்களை நீ எழுதியிருந்தாய். மூன்று பாடல்களை நான் எழுதியிருந்தேன் .
உண்மையை சொல்கிறேன் அந்த திரைப்படத்தில் நீ எழுதிய பாடல்களை படித்த பிறகே நான் பாடல் எழுத ஆரம்பித்தேன். மாபெரும் கவிஞன் உனக்கருகில் என் பாடல்கள் காணமல் போகக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தேன்.
உன்னை விட சிறப்பாக எழுதவேண்டும் என்ற துடிப்பு என்னை அடிக்கடி துளைத்தது. அத்தனை அருமையாய் நீ எழுதியிருந்தாய்.
அழகு மயிலே உன்னைப்பாரத்து ஆடத்தோடங்கிய வான்கோழி நான்...
நீ பணிபுரிந்த படத்தில் நானும் இருப்பதே
உனதருகில் இருப்பதாய் உணர்ந்தேன். நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்தேன்.
உன்னை தரிசிப்பதற்காய் காத்துக்கிடந்தேன். கடைசிவரை அண்ணா உன்னை காண்பதற்கு முடியவில்லை. ஆனாலும் இதோ ஈழத்தில் இருந்து இரங்குகிறேன்.
ஆயிரம் விதைகளை விட்டுச்சென்ற ஆலவிருட்ஷம் நீ உன் பாதச்சுவடுகளை தொட்டு ஆயிரமாயிரம் இளைஞர்கள் படை படையாய் வருவார்கள்.
காலம் பறிந்த கவிஞனே
காலம் உள்ளவரை
காற்று உள்ளவரை
உன் பாடல்கள், படைப்புகள் மனித மனங்களில் பயணிக்கும். அண்டம் அழிந்தால்தான் அது சயனிக்கும்.
முத்துக் கவித்தமிழில் முத்துக்குளித்த
முத்துகுமாரா என்னில் மூத்தவனே
தினம் தினம் ஈர்த்தவனே
என்னை யாத்தவனே உனக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
வானுயர்ந்த கவிதந்தாய் வாழ்வுதனை பாட்டிசைத்தாய்
-----------------------------------------------------------------------------------
இத்தனை புகழைநீ பெற்றிருந்தாய் என
இறந்த பிறகே தெரிகிறது...
பித்தனாய் பலரையும் மாற்றிவிட்டாய்-இன்று
பிஞ்சுமனங்களும் எரிகிறது.
எத்தனை வலிகளை பட்டுயர்ந்தாய் என
எண்ணுகையில் மனம் கனக்கிறது
முத்தனை நிகரயுர் நாமுத்துன் நாமத்தை
மூச்சென காற்றலை சுமக்கிறது.
கனவாகி கதையாகி போகாதோ எனமனம்
கவிஞனுன் வருகைக்காய் ஏங்கியது-வாழ்வு
நினைவாகி மறையுமிங்கு நிலையாது எனப்பாடி
நிம்மதியாய் பொன்னுடலோ தூங்கியது..
"போனவுடன்"போய்விட்டார்
எனப்போற்றும் பலரிங்கு
இருக்கையிலே கண்திறவா திருந்திடுவார்.
வேதனைதான் கலைஞனது
வாழ்வுதனை உள்ளுணர்ந்தால்
வேகுதடா எனமனமும் யார்புரிவார்..?
வானுயர்ந்த கவிதந்தாய்
வாழ்வுதனை பாட்டிசைத்தாய்
உலகளவும் உன்பாடல் இருந்திடுமே..-அவை
உன்னை ரசித்தோர்க்கு மட்டுமல்ல
வெறுத்தோரின் துயர்களுக்கும்
விருப்போடு நாள்தோறும் மருந்திடுமே...!!
கவிஞர் அஸ்மின்.