பொருளதார ரீதியில் சுபீட்சமுள்ள நாடாக இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமாயின் அதற்கான சூழ்நிலைகளை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முதலில் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வர்த்தக அமைச்சின் திருத்த யோசனை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
பொருளாதார ரீதியில் நமது நாட்டை கட்டியெழுப்புவதற்கான பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொருளாதார ரீதியில் நாட்டை கட்டியெழுப்பி சுபீட்சமுள்ள நாடாக மாற்றுவதில் கைத்தொழில் துறை – வர்த்தக துறை மிக முக்கியமான அம்சமாகும். வர்த்தகமும் - கைத்தொழிலும் முன்னேறும் போதே ஒரு நாட்டை முன்னேற்ற முடியும். இந்த இரண்டு துறைகளையும் கொண்டு செல்லுவதற்கு முக்கியமாக பயன்படுத்த வேண்டிய அமைச்சாக இது உள்ளது.
இந்த நாடு பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டுமாக இருந்தால் பொருளாதார ரீதியில் முன்னேறக் கூடிய சூழல் இங்கு இருக்க வேண்டும், நாடு சமாதானமாக இருத்தல் வேண்டும், நாட்டிலே வாழ்கின்ற சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு தேவைய சூழல் இருக்க வேண்டும்;, அரசியல் ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருத்தல் வேண்டும். இவ்வாறான சூழ் நிலைகள் இருக்கின்ற போதுதான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நமது நாட்டுக்கு கொண்டு வரமுடியும்.
நமது நாட்டிலே அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்ச்சியாக பேசப்பட்டு வரும் பிரச்சினையாக உள்ளது. யுத்தம் நிறைவடைந்து 07 வருடங்களை கடந்து விட்டோம். யுத்தத்தில் நேரடியாக ஈடுபட்டவர்கள் எல்லாம் மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், யுத்தகாலத்திலே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல நூற்றுக்கணக்கான தமிழ் சகோதரர்கள் இன்னும் சிறைகளிலே வாடுகின்றனர். அவர்களுக்கான விசாரணைகள் கூட இன்னும் நடத்தப்படவில்லை. இவ்வாறு தொடர்ந்தும் செல்ல எமக்கு முடியாது. இப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க கடந்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அரசாங்கம் பொறுப்பேற்று ஒருவருடங்களை கடந்துள்ளது. எனினும் இப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதாக தெரியவில்லை.
தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். யுத்தத்தின் போது ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தமது வீடுகளிலே இன்று நிம்மதியாக – சுதந்திரமாக இருக்கின்றனர். எனினும், எவ்வித குற்றச்சாட்டுமின்றி சந்தேகத்தின் பேரில் யுத்ததின் இடைநடுவில் பல அப்பாவி சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் பாடசாலை மாணவர்கள் உள்ளடங்குவதுடன் 20 வருடங்களுக்கு மேலாக சிறைகளிலே எவ்வித விசாரணைகளும் இன்றியும் சிலர் உள்ளனர்.
அவர்கள் நிபந்தனைகளின் அடிப்படையிலாவது விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான சூழல்கள் உருவாக்கப்படும் போதுதான் நாட்டின் பொருளாதாரம் - வர்த்தக்துறைகளைக் கட்டியெழுப்ப முடியும். – என்றார்.