முஸ்லிம் காங்கிரஸின் வீட்டுக்கு வீடு மரம் நடுகைத் திட்டம் அமைச்சர் ஹக்கிமினால் கந்தளாயில் ஆரம்பம்..!

ஷபீக் ஹுசைன்,எப்.முபாரக் -
பின்னோக்கிப் பார்த்து காலம் கடத்தாது, கட்சியின் இயக்கத்திற்கு முட்டுக்கட்டை போடக் கூடிய செயல்களை உதறித் தள்ளி, கட்சியின் முன்னேற்றம் கருதி உற்சாகத்தோடு முன்னோக்கிப் பயணிக்க முன்வரவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்துள்ள 'வீட்டுக்கு வீடு மரம்' செயல் திட்டத்தை திங்கட்கிழமை (01) கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் திருகோணமலை, கந்தளாய், பேராறு, முதலாம் கொலனியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்னெடுக்கப்பட்டுள்ள 'வீட்டுக்கு வீடு மரம்' எனப்படும் கட்சிப் பணியின் மூலம் எமது கட்சியின் இளம் போராளிகளை ஒன்றிணைத்து, கட்சியின் வரலாற்றுப் பின்னணியை நன்றாக விளங்கி, புதிய உத்வேகத்தோடு முன்னோக்கிப் பயணிக்கின்ற உற்சாகமான தருணத்தில் இன்று கந்தளாயில் நாம் ஒன்று திரண்டு இருக்கின்றோம்.

எமது கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரின் வீட்டு வளவில் நட்டு வைக்கப்படுகின்ற இந்த மாங்கன்று வளர்ந்து விருட்சமாகி, அந்த வீட்டில் உள்ளவர்களுக்கும், அண்டைய அயலில் வசிப்பவர்களுக்கும் உரிய பயனைத் தர வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலேயே இந்த முயற்சியை நாங்கள் இங்கு ஆரம்பித்து வைக்கின்றோம்.

இத்திட்டத்தின் மூலம், கட்சி குறித்த பூர்வீகம், கொள்கை, பின்னணி, சவால்கள் போன்றவற்றை நினைவுபடுத்திக் கொள்ளவும், கட்சியின் மூத்த போராளிகளை அடையாளம் கண்டுகொள்ளவும் ஏதுவான செயற்றிட்டமாக இதனை பார்க்கின்றேன். இத்திட்டத்தை என்னிடம் எமது கட்சியின் மூத்த போராளியான அதிபர் சாஹித்தீன் கையளித்து, முன்வைத்த போது மெய் சிலிர்த்துப் போனேன். இத்தனை நாளாக நான் தேடிய புதையலொன்றைக் கைப்பற்றிவிட்டதை போன்ற பெருமிதம் எனக்கு ஏற்பட்டது. 

'மரம் எமக்கொரு வரம்' என்ற கோஷத்தினூடாக எங்களுடைய அரசியல் எதிரிகளை மிகவும் உற்சாகத்தோடு முறியடித்த நினைவுகள் எல்லாம் என் கண் முன் நிழலாடுகின்றன.

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை அழைத்து இந்த செயற்றிட்டத்தை ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளோம் என்பதை கூறிய போது, அங்கு வந்திருந்தவர்களில் ஒருவர் எழுந்து, விடுதலை புலிகளினால் பலிகொள்ளப்பட்ட ஏராளமான முஸ்லிம்;கள் வீர மரணம் எய்தியதும் இதே காலப்பகுதியில் தான் என்று கூறினார். நினையாப் புறத்திலிருந்து நாங்கள் இந்த திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இந்த காலப்பகுதியை தெரிவு செய்திருந்தோம். 

கடந்த ஆட்சி வரையில் வன்செயல்களாலும், அட்டூழியங்களாலும் எமது கட்சிக்காக எத்தனையோ பேரை இழந்திருக்கின்றோம். ஒரு சந்தர்ப்பத்தில், அச்சமும் அச்சுறுத்தலும் நிலவிய காலகட்டத்தில் தேர்தல் வேட்பாளர் மனுவை எனது மேற்சட்டையின் உள்ளே மறைத்து வைத்துக்கொண்டு திருகோணமலை கோட்டைக்குள் அமைந்துள்ள மாவட்ட செயலகத்திற்குச் சென்று கையளித்தேன். 

இது போன்ற அச்சம் நிலவிய காலப்பகுதியைத் தாண்டி வந்திருக்கின்ற நாங்கள் எமது கட்சியின் வரலாற்றுப் பின்னணியை அறிந்திருப்பது அவசியமாகும். பின்னோக்கிப் பார்த்து காலம் கடத்தாது, கட்சியின் இயக்கத்திற்கு முட்டுக்கட்டை போடக் கூடிய செயல்களை உதறித் தள்ளி, கட்சியின் முன்னேற்றம் கருதி உற்சாகத்தோடு முன்னோக்கிப் பயணிக்க முன்வரவேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு இந்தக் கட்சியை வளர்ச்சியடைந்த ஸ்திர தன்மை வாய்ந்ததாக நாம் கையளிக்க வேண்டும். இந்த 'வீட்டுக்கு வீடு மரம்' செயற்றிட்டத்தின் பயனாக ஒவ்வொருவருடைய வீட்டு முற்றத்திலும் நடப்படும் மரக் கன்று வளர்ந்து விருட்சமாகி பயனளிப்பதை போல், எமது கட்சியும் வீட்டில் வசிக்கக் கூடிய ஒவ்வொருவருடனும் இணைந்து அவர்களின் தேவைப்பாடுகளையும், பிரச்சினைகளையும், விசாரித்தறிந்து அவர்களை முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லும்;. அவர்களுக்கு கட்சியுடனான தொடர்பாடலை மேலும் அதிகரிக்கவும் இது வழிகோலும் என்றார்.

இந்நிகழ்வில், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், முன்னாள் கிழக்கு மாகாண சபை தவிசாளர் சட்டத்தரணி பாயிஸ், கந்தளாய் அமைப்பாளர் ஜெசீல் மௌலவி, கட்சியின் உயர்பீட உறுப்பினர் பளீல் பீ.ஏ,நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை செயலாற்றுப் பணிப்பாளர் மஹிலால் டி சில்வா ஆகியோர் உட்பட அநேகர் கலந்துகொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -