வடக்கு – கிழக்கை மீள் இணைக்க ஒருபோதும் இடமளியேன் -ஹிஸ்புல்லா பாராளுமன்றத்தில் ஆவேஷம் வீடியோ

னப்பிரச்சினைக்குத் தீர்வு வடக்கு – கிழக்கு இணைப்பு அல்ல மாறாக இனப்பிரச்சினைக்கு சிறந்து தீர்வு மாகாண சபைகள் சுயமாக இயங்கக் கூடிய வகையிலான அதிகாரப் பகிர்வே என நடாளுமன்றத்தில் வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஒரு இனத்தை நசுக்கி இன்னொரு இனத்தின் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் முற்படுமாயின் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், தான் இருக்கும் வரை வடக்கு கிழக்கை மீண்டும் இணைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் எனவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வர்த்தக அமைச்சின் திருத்த யோசனைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பு மறுசீரமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். அந்த சட்ட திருத்தத்தில் சகல இன மக்களுடைய உரிமைகளும் - அரசியல் அதிகாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு இனத்தை நசுக்கி இன்னொரு இனத்தினுடைய பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இந்த அரசியலமைப்பு சபையில் எடுக்கப்படும் ஒவ்வொரு தீர்மானங்களும் இந்நாட்டின் சுபீட்சத்தை நோக்கி நகர்த்துகின்றதாக இருக்க வேண்டும். ஆகவே, அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்படுகின்ற போது இந்நாட்டிலே வாழ்கின்ற சிறுபான்மை மக்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக முஸ்லிம்கள், மலையக மக்களது உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். 

புதிய அரசியலமைப்பு திருத்ததில் பழைய தொகுதிவாரி தேர்தல் முறையை அறிமுகப்படுத்தப்படுமாயின் அதனால் முஸ்லிம்களும், மலையக மக்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆகவே, மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் சமூகத்தின் பிரதிநிதித்துவமும், நாடு பூராகவும் சிதறி வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரதிநித்துவமும் அந்தந்த விகிதாசாரத்துக்கு ஏற்ப கிடைக்கப் பெறுவதை உருதி செய்ய வேண்டியது இந்த சபையில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரதும் கடமையாகும். இவ்வாறான சூழல் நாட்டில் ஏற்படுத்தப்படுமாயின் மாத்திரமே நாட்டில் நிலையான – நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்த முடியும். 

நிரந்தரமான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்கும் பட்சத்திலே இந்த நாட்டை எம்மால் கட்டியெழுப்ப முடியும் - வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாட்டுக்கு கொண்டு வருவதன் ஊடாக பொருளாதார ரீதியில் நாட்டை கட்டியெழுப்ப முடியும். இந்த இலக்கினை அடைந்து கொள்வதற்கு சகல இன மக்களும் ஒன்றினைந்து – ஒருமித்து வாழ வேண்டிய சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

இந்த உயர்ந்த சபை இந்நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கின்ற ஓர் சபை. இந்நாட்டில் வாழ்கின்ற சகல இன மக்களினதும் அரசியல் உரிமைகளையும் - அதிகாரங்களையும் பாதுகாக்கின்ற ஓரு உயர்ந்த சபையே இந்த நாடாளுமன்றம். இந்த நாடாளுமன்றம் அதனை பாதுகாக்கின்ற ஒரு சபையாக இருக்க வேண்டும். 

இந்நாட்டில் வாழ்கின்ற சகல இன மக்களும் தங்களுடைய அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொண்டவர்களாக நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை வர்த்தக – கைத்தொழில் துறைகளில் முன்னெடுக்க வேண்டும். 

இனங்களுக்கிடையில் முறுகல் நிலை, சிறுபான்மை – பெரும்பான்மை என்ற பேதம், சமூகங்களுக்கிடையிலே ஒற்றுமை இன்மை போன்ற விடயங்கள் இல்லாது செய்யப்படும் வரை நாம் எதிர்பார்க்கின்ற சுபீட்சமான நாட்டை எம்மால் கட்டியெழுப்ப முடியாது என்பதுடன் எந்த வெளிநாட்டு முதலீடுகளையும் இங்கு கொண்டு வரவும் முடியாது. 

முதலீட்டாளர்களுடன் நாம் பேச்சு நடத்தி இங்கு அவர்கள் முதலீடு செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தைக கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை எடுக்கும் போது சில இனவாத சக்திகள் எடுக்கின்ற மிக மோசமான நடவடிக்கைகளினால் மீண்டும் பல வருடங்களுக்கு நாங்கள் பின்நோக்கி தள்ளப்படுகின்றோம். 

ஆகவே, இந்த உயர்ந்த சபையில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட்டு நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். கடந்த 30 வருடங்களாக நாம் இனங்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் நிலைக் காரணமாக இந்நாட்டில் இரத்த ஆறு ஓடியது. நாங்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு நாளாந்தம் நூற்றுக்கணக்கான சகோதரர்களை இழந்து கொண்டிருந்தோம். இன்று நாட்டிலே அமைதி – நிம்மதி நிலவுகின்றது. இனங்களுக்கிடையில் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவ்வாறான நிலையில் மீண்டும் வடக்கு – கிழக்கை இணைக்க வேண்டும் அதன் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என பேசுகின்ற சில சக்திகள் மீண்டும் வடக்கிலும் கிழக்கிலும் இன முறுகல் - மோதல் நிலையை மீண்டும் ஏற்படுத்தவே முயற்சிக்கின்றன. 

 வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைப்பதற்கு ஒருபோதும் நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்பதை இந்த சபையில் சொல்லி வைக்க விரும்புகின்றோம். 

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அந்த மாகாணத்தில் வாழ்கின்ற மக்கள் தங்களது அதிகாரங்களைப் பெற்று சுயமாகப் இயங்குவதற்கு தேவையான சகல அதிகாரங்களும் பகிரப்பட வேண்டும். இனப்பிரச்சினைக்குத் தீர்வு வடக்கு – கிழக்கு இணைப்பு அல்ல மாறாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு அதிகாரப் பகிர்வே ஆகும். அதில் நாங்கள் எல்லோரும் தெளிவாக இருக்க வேண்டும். 

இன்று கிழக்கு மாகாணத்திலே மூன்று இன மக்களும் ஒருமித்து நிர்வாகம் செய்கின்றார்கள். இந்த நாட்டிலே வாழ்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து நிர்வாகம் செய்யும் ஒரே ஒரு மாகாணம் கிழக்கு மாகாணமாகும். 

வடமாகாண சபையை எடுத்துக் கொண்டால் அங்குள்ள அனைத்து அமைச்சர்களும் தமிழர்கள். வடகிழக்குக்கு வெளியேயும்; எந்தவொரு முஸ்லிம் மாகாண அமைச்சரும் இல்லை. இவ்வாறான நிலையில் மூன்று இனத்தவர்களும் அமைச்சர்களாக உள்ள ஒரே ஒரு மாகாணம் கிழக்கு மாகாணம் மாத்திரமே. ஆகவே, இந்த நாடு பொருளாதார ரீதியில் வர்த்தக – கைத்தொழில் துறைகளில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும்என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -