இனவாதத்தையே தமது அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த இனியொருபோதும் இடமில்லை -ஹாபிஸ் நஸீர்



னவாதத்தையே தமது அரசியல் அரியணைக்கான ஆயுதமாகப் பயன்படுத்த இனியொருபோதும் மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூர் புன்னைக்குடா வீதியை 2 கோடி 57 இலட்சம் ரூபாய் செலவில் ‘கார்பெற்’ வீதியாக கடற்கரை வரை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் ஆரம்ப வைபவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசுகையிலேயே கிழக்கு முதல்வர் இவ்வாறு தெரிவித்தார். கிழக்கு மாகாண வீதி, காணி மற்றும் மகளிர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர், சிறுபான்மைச் சமூகங்கள் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று, கங்கணம் கட்டிக் கொண்டு அரசாண்ட மஹிந்த ராஜபக்ஷ மக்களால் தோற்கடிக்கப்பட்டு சிறிது காலம் மறைந்திருந்த பின் மீண்டும் இனவாத முகத்துடன் தெருவுக்கு வந்துள்ளார்.

மஹிந்தவின் இனவாதத்தை ஒழித்து நல்லாட்சியைக் கொண்டுவர வேண்டும் என்பதில் சிறுபான்மை மக்களுடன் சேர்ந்து பெரும்பான்மை மக்களும் பெரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள். ஆகையினால், இனியொருபோதும் இனவாதம் தலைதூக்க இந்த நாட்டின் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

ஐக்கியமாக வாழ்வதற்கும், ஒன்றுபட்ட மக்களாய் ஓரணியில் ஆட்சி செய்வதற்கும் இப்பொழுது கிழக்கு மாகாணமே முன்னுதாரணமாய்த் திகழ்கிறது. எமது ஆட்சியில் எல்லா இன, மத, கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பார்வையாளர்களாகவன்றி பங்காளர்களாக இருக்கின்றோம். இதனையே பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்ச அவர்கள் நாட்டின் அடுத்த மாகாணங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாய்க் கொண்டிருக்கின்றார்.

இலங்கையில் எங்குமே இல்லாத ‘தொழில்நுட்ப பூங்காக் கிராமம் – Information Technology park)’ ஒன்றை மட்டக்களப்பில் உருவாக்க நாம் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் நேரடியாக 50 ஆயிரம் இளைஞர் யுவதிகள் தகவல் தொழினுட்ப வல்லுநர்களாக உருவாக முடியும். அதேவேளை அவர்கள் மாதாந்தம் இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டிக் கொள்ளவும் முடியும்.

கிழக்கு மாகாணத்தில் கல்வியை அபிவிருத்தி செய்வதற்காக 7500 மில்லியன் ரூபாவைக் கொண்டு வந்திருக்கின்றோம். உள்ளுராட்சி மன்ற நிர்வாகத்தின் கீழ் வரும் 400 கிலோமீற்றர் பாதைகளை அமைப்பதற்காகவும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பராமரிப்பிலுள்ள 200 கிலோமீற்றர் பாதைகளை அமைப்பதற்காகவும் என ஆயிரம் கோடி ரூபாவை கொண்டு வந்திருக்கின்றோம்.

சுகாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக 110 கோடி ரூபாவும், மேலும் 180 கோடி ரூபாவை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தும் மாகாண சபைக்குக் கொண்டு வந்திருக்கின்றோம். இன்னும் 155 கோடி ரூபாவை மத்திய அரசிலிருந்து கிழக்கு மாகாணத்தின் பங்காக நாம் பறித்துக் கொண்டு வந்து அபிவிருத்தி செய்வோம். அந்தப் பொறுப்பு கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு இருக்கின்றது’ என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -