"வட கிழக்கு இணைப்பு முஸ்லிம் சமூகத்தின் மீது மீண்டும் ஒரு முறை திணிக்கப்படுவதனை அனுமதிக்க முடியாது"


'வட-கிழக்கிற்கான அரசியல் தீர்வு என்பது, முஸ்லிம் சமூகத்தின் மீது இன்னுமொரு சமூகத்தின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதாக அமைந்து விடக்கூடாது. அது போலவே , வட கிழக்கு இணைப்பு என்பது முஸ்லிம் சமூகத்தின் மீது மீண்டும் ஒரு முறை திணிக்கப்படுவதனையும் அனுமதிக்க முடியாது. அரசியல் தீர்வு நிரந்தர தீர்வாக வேண்டுமென்றால் அது எல்லா சமூகங்களுக்கும் நியாயம் வழங்குகின்ற தீர்வாக அமைய வேண்டும்' என NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் தெரிவித்தார்.

கடந்த 07.08.16 அன்று மூதூரில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 'தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளும் அதன் முன்னேற்றமும்' என்ற தலைப்பில் திருகோண மலை NFGG பிராந்திய சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கருத்தரங்கில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது, 

" புதிய யாப்பொன்றினை உருவாக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பாராளுமன்றம் யாப்பு நிர்ணய சபையாக நியமிக்கப்பட்டுள்ளது. புதிய யாப்புருவாக்கத்தில் மூன்று முக்கிய விடயங்கள் இடம்பெறுகின்றன. 'நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல் அல்லது மாற்றியமைத்தல், தேர்தல் சீர்திருத்தங்கள், மற்றும் அதிகார பரவலாக்கம் என்பவையே அந்த மூன்று பிரதான விடயங்களுமாகும். இந்த மூன்று விடயங்களும் நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் அரசியல் ரீதியான முக்கியத்துவம், பாதுகாப்பு என்பவற்றோடு நேரடியாகத் தொடர்புபட்டவைகளேயாகும். இவ்விடயங்கள் தொடர்பில் சிவில் சமூகத்தின் அபிலாஷைகளும் ஆலோசனைகளும் தாராளமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த அளவில் அனைத்து சிவில் அமைப்புகளும் ஒன்றிணைந்த கிழக்கு மாகாண சம்மேளனம் இவ்விடயங்கள் தொடர்பில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது. இது மகிழ்ச்சிக்குரிய பாராட்டுக்குரிய விடயமாகும். ஆனாலும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் மத்தியில் இவ்வாறான ஒன்றிணைந்த செயற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. இது கவலைக்குரிய விடயமாகும். இந்நிலையில் அரசியல் யாப்புருவாக்கத்தில் அதிகாரப் பரவலாக்கலோடு தொடர்பு பட்ட விடயங்கள் எவ்வாறான நிலையிலிருக்கின்றன என்ற தகவல்கள் மக்களுக்கு கிடைப்பதாக தெரியவில்லை. இது தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறிகின்ற நடவடிக்கைகள் எதனையும் காணக்கிடைக்கவில்லை. 

அண்மையில் வடமாகாண சபையில் சில முன்மொழிவுகள் பேசப்பட்டுள்ளன. முஸ்லிம் சமூகத்தின் நலன்களின் அடிப்படையிலும் தேசிய நலன்களின் நின்று பார்க்கும் போது அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அந்த முன்மொழிவுகளில் முக்கியமான ஆறு திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை வடமாகாண சபையில் நாம் முன்வைத்தோம். அதை அவர்கள் உள்வாங்க மறுத்ததன் காரணமாக நாம் வழங்கிய நிபந்தனையூடான ஆதரவினை நாம் பின்னர் வாபஸ் பெற்றுக் கொண்டோம். 

நாம் முன்வைத்த திருத்தங்களில் பிரதானமான ஒன்று வடகிழக்கு இணைப்பு பற்றியதாகும். வடக்கும் கிழக்கும் இணைக்கப்படுகின்ற பொழுது அங்கு வாழுகின்ற முஸ்லிம்களின் அரசியல் பலமும் ஏனைய முக்கிய நலன்களும் எவ்வாறு பலவீனப்படுத்தப்படுகிறன என்ற நியாயங்களை நாம் ஏற்கனவே வரலாறு நெடுகிலும் சொல்லியே வந்திருக்கிறோம். இந்த நியாயங்களை தமிழ் தலைவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே நேரம் தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷகளுக்கு குறுக்காக முஸ்லிம் சமூகம் இருக்க விரும்பவுமில்லை. 

இந்த பின்னணியில்தான் வடக்கு கிழக்கு இணைப்பு இவிவகாரத்தை நோக்க வேண்டியுள்ளது. எங்களைப் பொறுத்த வகையில் வடகிழக்கு இணைப்பு என்பது கிழக்கில் வாழும் முஸ்லிம்-சிங்கள மக்கள் மீது திணிக்கப்படும் ஒரு அரசியல் மேலாதிக்கமேயாகும். இவ்வாறான பலவந்த திணிப்புகளாக அரசியல் தீர்வுகள் மீண்டும் அமைந்து விடக்கூடாது. இது போன்றுதான் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக வட கிழக்கு இணைப்பு பலவந்தமாக கிழக்கு மக்கள் மீது திணிக்கப்பட்டது. அதன் விளைவுகளை நாம் பின்னர் அனுபவித்திருக்கிறோம்.

எனவே வட கிழக்கிற்கான அரசியல் தீர்வு என்பது அங்கு வாழும் முஸ்லிம் சிங்கள மக்கள் மீது தமிழ் சமூகத்தின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதாக அமைந்து விடக்கூடாது. மாறாக கடந்த கால தவறுகளையும் அனுபவங்களையும் மனதில் கொண்டு சகல மக்களினதும் அச்சங்களையும் அபிலாஷகளையும் புரிந்து கொண்ட, சகல சமூகங்களுக்கும் நியாயம் வழங்குகின்றது தீர்வாக அமைய வேண்டும். அப்போதுதான் அது ஒரு நிரந்தர தீர்வாகவும் சமூக நல்லிணக்கம் கொண்ட ஒரு முன்மாதிரி பிரதேசமாக வடகிழக்கை கட்டியெழுப்புவதற்கான தீர்வாகவும் அமையும்,"
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -